நூறாசிரியம்/பூரிப்பசுங்கதிர்

5பூரிப்பகங்கதிர்


ஊரே, பெடையடை உயிர்க்கப் புறம்போய்ப்
பூரிப் பசுங்கதிர் கொய்துவந் தூட்டும்
புறவினங் குணுகிறை மாடக் கூடலே;
உறவே கரவில் உளமொழு கியரே;
ஆயே, மைம்புகை கூர்ங்கண் அளைப்ப 5
ஒயா தட்டுறை கொம்பறு கொடியே!
நீயே, மாலுமென் நெஞ்சுட் புகுந்து
மேயுறு நினைவிற் காயவோ ருயிரே!
யானே, இளநகை கேட்டி
கூன்பிறை நுதலிற் சாந்தணி வோனே! 10


பொழிப்பு :

என் ஊராவது பெடைப்புறவு அடை கிடந்து உயிர்த்தல் செய்ய, சேவற் புறவு ஊர்க்குப் புறத்தே போய், புடைந்த பசுங்கதிர்களைக் கொய்து வந்து மகிழ்ந்து ஊட்டி, அதற்கு நலஞ் செய்யும் அன்பு நிறைந்த புறாக்கள் இனம் குனுகும் ஓசை நிரம்பிய இறைவன் கோயில் மாடம் மிகுந்த கூடல் நகரம். என் உறவாவது கரவு இல்லாத உளத்தான் ஒழுகியர் கூட்டம் என் ஆயோ, கருமை சூழ்ந்த புகை தம் கூர்த்த கண்களை அளைத்தல் செய்து வருத்தும்படி, ஒயாமல் அடுதல் அறையில் உறைந்து கிடக்கும் கொம்பு இழந்த கொடி போன்ற உடலினள். நீயோ, நின்பால் மயங்கிக் காதலுற்ற என் நெஞ்சின் உட்புகுந்து மேய்தலுறும் நினைவிற்குப் பற்றுக்கோடாகிய ஓர் உயிர். யானோ, இளநகை புரியும் நீ கேட்பாயாக, நின் பிறைபோலும் வளைந்த நெற்றியில் செஞ்சாந்து (குங்குமம்) அணிதற்கு உரியவனே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பித் தேறிய பின்னர், தலைவி தலைவனின் ஊரும் உறவும் சுற்றமும் விரும்பிக் கேட்கத் தலைவன் விடையாக மொழிந்தது.

ஒருவரின் பண்பு, பழக்கம் முதலியவை சூழலால் அமைதல் உண்மையின், ஊர் கூறிய மட்டில் அவை அறியப்படுதல், இயலும் ஆகலின், முதற்கண் ஊரைக் கூறினான் என்க. ‘சான்றோர் பலர் யாம் வாழும் ஊரே’ என்ற புறநானூற்றுப் பாடலடியும் ஊர்க்கும் வாழுநருக்கும் தொடர்பு காட்டி நின்றது.

இனி, ஊர் கூற வேண்டியவன் வாளா ஊரின் பெயரை மட்டும் உரையாது அவ்வூரின்கண் விளங்கும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியும் கூறித் தன் ஊரின் தன்மையை நன்கு விளக்குதல், கேட்பார் மனம் பொருந்திக் கேட்டல் வேண்டும் எனற்கு

பெண் புறா அடைகிடந்து உயிர்த்தல் தொழில் செய்தலையும், ஆண் புறா அதன் துணைக்கு ஊர்ப்புறத்தே போய் வளைந்து பருத்த பசுங்கதிரைக் கொய்து வந்து மகிழ்ச்சியுடன் அதன் வாய்க்கு ஊட்டுதலையும் கூறித் தம் ஊரின்கண் வாழும் மக்கள் அன்புடையராக இருப்பர் என்பதைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்திக் காட்டினான் என்க.

ஐயறிவு படைத்த பறவையினங்களும் அன்பு நிறைந்த இல்லறம் செய்து வாழும் தன் ஊரின்கண், ஆறறிவு படைத்த மக்கள் தம்மின் அன்பு நிறை வாழ்க்கைக்கு அளவும் வேண்டுவதோ என்று தலைவன் கூறித் தான் வாழும் ஊர் மக்களின் நல்லன்பையும், அதன் வழித் தான் கொண்ட மெய்யன்பையும் தலைவிக்கு உணர்த்தினான் என்க.

இனி, அன்புநிறைந்த மக்கள் வாழும் நகராக இருப்பதுடன் அதனைச் சுற்றி வளம் நிறைந்த வயல்களும் மலிந்து கிடப்பதையும், அதன் வழித் தன் ஊர் வாழ்க்கை வளத்திற்கு ஏற்ற ஊரே என்பதையும் உணர்த்த, அதன் புறத்தே புடைத்து வளர்ந்த பசுமையான கதிர் நிரம்பிக் கிடத்தலைத் தலைவிக்குக் கூறினான்.

கொய்து வருதல் இயல்பும், கொய்து உவந்து ஊட்டுதல் சிறப்புமாம். இல்லற ஒழுக்கத்தைப் புறவினமும் கடைப்பிடித்து வாழும் மாடங்கள் நிறைந்த கூடல் நகரம் என்பது தலைவன் குறிப்பு.

புறவினம் குனுகு இறை மாடக் கூடல் என்றது. புறவினம் குனுகுதல் ஒலி நிறைக்கும் இறைவன் திருமன்று நிறைந்த கூடல் நகரம் எனல் வேண்டி புறவினம் குனுகுகின்ற ஒலி, ஊர் மக்கள் மகிழ்வால் ஆரவாரிக்கும் குறிப்பை உணர்த்திற்று.

இனி, ஊர் கேட்ட அளவிலேயே, தலைவியோடு தான் கூடிவாழ்வதற்கு ஏற்ற நிமித்தக் கூற்றாக, அவன் வாழும் நகரைக் கூடல் என்பான் வெறுங் கூடல் என்னாது, மாடக் கூடல் என்றது, தான் தலைவியின்பால் கொண்டது பெருமை பொருந்திய காதல் ஆகும் எனல் வேண்டி இனி, வெறும் மாடக் கூடல் என்னாது இறை மாடக் கூடல் என்றது, இறையவன் கோயில் நெடிது நிற்கும் ஊரின்கண் வாழ்தல் செய்யும் தன் காதலின் உண்மையைக் குறிப்பால் உணர்த்துவான் வேண்டி இறைவன் வாழும் ஊரினின்று வரும் யான் பொய் வழங்கேன் நின்னொடு கூடி இல்லறம் நடத்தும் உறுதிப்பாடு உடையேன் எனக் குறிப்பால் உணர்த்தினான் என்க.

“நான் நின்னைக் கூடுதற்கு ஏற்றவன்; உயர்ந்த பெருமை கொள்ளும் காதல் நெஞ்சன்: மெய்யான அன்புள்ளவன். மணவாழ்க்கையை அறவாழ்வில் நடத்த விரும்புபவன் வளம் பொருந்திய ஊரினன் ஆகலின் வறுமை போதர வழியில்லை; என்றன் ஊர் கூடல் மாநகர் என்பது அவன் சுற்றிச் சாற்றிய கருத்துகள்.

உறவே கரவில் உளமொழுகியரே - எனக்கென்றும் உறவேதும் இல்லை. கரவில்லாத உளவழி ஒழுகி நிற்பார் எவரும் உறவினரே! நீயும் கரவில்லாத உளங்கொண்டு நிற்கும் அன்பொழுக்கத்தினள். ஆகலின் நீயும் என் உறவுக்குப் பொருந்தியவளே.

ஒத்த அன்பும் ஒழுகலாறும் உடையர் யாவரும் உறவினர்களே என்பதால், நீ இனம், குலம், பிறப்பு முதலிய பொய்ம்மை உறவுகளைப் பார்க்க வேண்டுவதில்லை என்று குறிப்பால் கூறினான் என்க.

மைம்புகை கூர்ங்கண் அளைப்ப கருமையான புகை தன் கூர்மையான கண்களை அளாவுதல் செய்து வருத்த கூர்ங் கண் கூர்மையாக உற்று நோக்குங்கண். முதுமையுற்றார் தம் கண் பார்வையைக் கூரியதாக்கி உற்று நோக்குவர் ஆகலின், தாய் முதுமையுற்றவள் என்பதை உணர்த்தக் கூர்ங் கண் என்றான் என்க.

ஒயாது அட்டு உறை: சமையல் அறையில் ஓயாது உறைகின்ற.

கொம்பறு கொடி - கொம்பிழந்த கொடி தாய் கணவனை யிழந்தவள் என்பதாகக் குறிப்புக் காட்டினான் என்றபடி

தாய் முதியவள்; கணவனை இழந்தவள் சமையல் அறையிலேயே உறைபவள் என்றது, அம் முதிய தாய்க்குத் துணை வேண்டுவதற்காக, தான் விரைந்து இல்லறம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாமையையும், அவளுக்குத் துணையாகத்தான் தன் மனைவினைகளை மேற் கொள்ளல் வேண்டும் என்பதையும் குறிப்பினால் உணர்த்தினான் என்றபடி

தாய் கணவனையும், தான் தந்தையையும் இழந்தமையால், தன் மணம் பேச வேறு பெரியோர் இலர் என்பதையும், அது பற்றித் தானே மணம் பேசும் தகுதியுடையவன் என்பதையும் குறிப்பால் கூறினான் என்க.

மாலும் என் நெஞ்சு-மயக்குறும் என்நெஞ்சம், அழகாலும், அன்பாலும் மகிழ்தலால் மயக்குற்ற நெஞ்சம்.

நீயே மாலும் என் நெஞ்சுட் புகுந்து மேயுறு நினைவிற்கு ஆய ஒர் உயிர் - மயக்குற்ற என் நெஞ்சினுட் புகுந்து என் நினைவுகள் எல்லாவற்றினும் கலந்து நிற்பதாகிய ஓர் உயிர் நீ.

மேயுறு நினைவு- கலந்து நிற்கும் நினைவு ஆட்கொள்ளப்பட்ட நினைவு.

ஒர் உயிர் ஒரே உயிர். உடலோடு ஒன்றினை என்று கூறாது உயிரோடு ஒன்றினை என்று கூறினான் என்க. நினைவிற்கு ஆய ஓர் உயிர் என்றது என் எல்லாவகை நினைவுகளுக்கும் பொருந்தி நிற்கும் ஒரே உயிர் என்பான் வேண்டி.

தனக்கு அவள் உயிராக நின்றனள் என்பதால், இனி அவளில்லாமல் தான் வாழ்தற்கியலாத உடல் போன்றவன் என்னும் குறிப்புக் காட்டினான் என்றவாறு,

யானே! இளநகை கேட்டி! - இது காறும் தன் ஊர் பற்றியும்; தன் உறவு பற்றியும், தன் பெற்றாளாகிய தாய் பற்றியும், தனக்குற்றாளாகிய தன் காதலி பற்றியும், உரைத்து வந்த அவன், இனித் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான் என்றபடி,

இவ்வாறு இறைச்சிப் பொருளால் தன் ஊர், உறவு தாய், காதலி முதலியோர் பற்றிக் கூறிய அவ்வளவையும் கூறக்கேட்ட அவள், அவன் தன்னைப்பற்றிக் கூற வருங்கால், அதனை மிகு விருப்போடும் வியப்போடும் கேட்கும் முகத்தினளாய் இளநகை புரிந்தாள் ஆகையால் அவளை இளநகை என்று விளிக்க வேண்டுவதாயிற்று.

இவ்வளவும் கூறியவன், தன்னைப்பற்றி இறுதியாகக் கூறும் முடிவுபற்றி அவள் அறிந்து கொள்ளும் விருப்பக் குறிப்பை, அவள் எதிர்நோக்கியிருந் தாமையாலேயே அவளுக்கு நகை பிறந்தது என்க. அவ்வாறு பிறந்த நகை முற்றும் வெளிப்படின் அஃதவள் பெண்மைக்கும் நாணத்திற்கும் இழுக்காய் அமையும் என்றதால், அவள் விருப்பக் குறிப்பை இளநகையாக வெளிப்படுத்தினாள் என்க.

கேட்டி-கேட்பாயாக இதுவரை நான் சொல்லியதை அரைகுறையாகக் கேட்டிருப்பினும், இனிமேல் சொல்லப்போவதையே அவள் முழுக் கவனத்தோடு கேட்க வேண்டும் என்பதால் கேட்டி என்று கூறினான் என்க.

கூன் பிறை நுதல்-வளைந்த பிறைபோலும் நெற்றி

யானே-சாந்தணிவோனே - நின் வளைந்த பிறை போலும் நெற்றியில் செஞ்சாந்து அணிதற்கு உரியவன் யானே.

யான் நின்னை மணத்தற்கு உரியவனே என்றான் என்க. யானே என்றது உறுதிப்பாட்டிற்கு இப்பாட்டு, குறிஞ்சி யென் திணையும், இயற்கைப் புணர்ச்சிக் காலத்து தலைவன் தலைவியைத் தெருட்டிக்கூறி உயிரென்றுரைத்த துறையுமாம்.