நூறாசிரியம்/மருட்கை யதுவே
மலைமென் னெஞ்சே! மருட்கை யதுவே!
குலையுங் குடரும் விதுப்புற் றனவே!
தமிழ்தோய் உளத்துத் துணிவீ தென்கோ
வேந்துமுன் ஒச்சிய விறலி தென்கோ
வளமான் தோன்றல் இளமை என்கோ
5
அலைபுலை கொற்றத்து விளைவி தென்கோ
உலைவூங் குயிரின் உவகை என்கோ
ஆடுநெய் யொழுக முச்சியி னப்பிப்
பாடுவெள் ளருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகிக் கனல்புகுந் தாடிய
10
செஞ்சிக் கோட்டத்துத் தேவனுார்ச் செம்மல்
பொய்யுடல் கருகிப் புறமாறி
மெய்யுடற் கொண்டு மிளிர்ந்த செயலே!
பொழிப்பு:
திசைக்கும் என் நெஞ்சம்! வியப்புக்குரியது அது! நெஞ்சாங்குலையும் குடலும் நடுக்கமுற்றன. தமிழ் உணர்வு தோய்ந்த உள்ளத்தின் துணிவு, இஃது என்று சொல்லுவமா? அரசின் முன் ஓங்கி நின்ற வெற்றிச் செயல் இஃது என்று சொல்லுவமா? பெருமைக்குரிய குடியில் பிறந்த ஒருவனின் இளமைச் செயல் என்று சொல்லுவமா? துன்புறுத்தலும் புன்மைச் செயல்களும் உடைய அரசின் அடிப்படையில் விளைந்த செயல் இஃது என்று சொல்லுவமா? துன்புற்ற உயிரின் விடுதலை மகிழ்ச்சி என்று சொல்லுவமா? ஆட்டிய எள் நெய்யை, வழிந்து ஒழுகும்படி தலையின் உச்சியில் தேய்த்துக் கொண்டு, இசைக்கின்ற வெள்ளிய அருவியில் பாய்தல் போலும், கன்னெய்யை (பெட்ரோலை) உடல் முழுதும் ஊற்றிக்கொண்டு, நெருப்பில் குளித்து ஆடிய, செஞ்சிக் கோட்டத்துள்ள தேவனூரைச் சேர்ந்த வீரன், கோடம்பாக்கத்தின் முச்சந்தியில், தன் பொய்யுடலை கருக்கிக் கொண்டு, உயிர் வெளியேறி, மெய்யான புகழுடலை வாழ்விடமாகக் கொண்டு. ஒளியாய் விளங்கி நின்ற செயலே!
விரிப்பு:
இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது. இதுவும் முந்தைய பாடல் காலத்து நடந்த வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.
செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர்ச் செம்மல் சிவலிங்கம் என்னும் இளையோன், வடவராட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில், கன்னெய் யூட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை மருட்கையுறப் பாடியதாகும், இது.
“மெய்யுடற்கொண்டு மிளிர்ந்த செயலே, மருட்கையதுவே, மலைமென் னெஞ்சே என்று இறுதியும் தலையும் இணைத்துப் பொருள் கொள்க.
மலைம் - மலையும் என்பது இடைக் குறைந்தது- திகைக்கும்.
இஃது உண்மைகொல் என்று திகைத்தது நெஞ்சம்!
மருட்கை - வியப்பு! அது மிளிர்ந்த அச் செயல்.
குலை - நெஞ்சாங்குலை; குடர்-குடல்- கடைப்போலி.
விதுப்புறுதல் - நடுக்குறுதல்.
தமிழ்தோய் உளத்துத் துணிவு - தமிழ் உணர்வு தானே வந்து பொருந்திய உள்ளத்தில் தோன்றிய துணிவு. என்னை? தமிழில் தான் தோய்தலும், தன்னில் தமிழ்வந்து தோய்தலும் ஆகிய இரண்டு வினைகளுள், முன்னது மகிழ்வுறுதலும், பின்னது துணிவுறுதலும் ஆம் என்க.
வேந்து முன்- அரசின் முன்னம். -
ஒச்சிய விறல்- ஓங்கி நின்ற வெற்றிச் செயல்
வளமான் தோன்றல் - வளப்பமான குடியில் தோன்றியவன். இவ்விடத்து வளப்பம் பெருமையைக் குறித்தது.
இளமை என்கோ - இளமையின் துணிவான செயல் என்பமா?
அலையுலை கொற்றம் மக்களை அலைத்தலும் புன் செயல்களைச் செய்தலும் ஆகிய அரசு கொல்லுதல் உரிமையால் கொற்றம் ஆயிற்று. வெல்லுதல் நிலை வெற்றி ஆனதுபோல. அரசு மக்கள் உயிரைக் கொல்லும் உரிமைபெற்றது. அரசு என்னும் சொல்லும், அரைசு - அழித்தல்நிலைப் பொருளைக் கொண்டதே. இனி, ஆள் என்னும் வேரடியால் ஆட்சியும், மன் (நிலைபேறு, வலிமை) என்னும் வேரடியால் மன்னனும் வருதல் காண்க வேய்தல் (முடியணிதல்) பற்றி வேய்ந்தன் வேந்தன் வேந்து எனவும் வருதல் வரலாற்றுப் படிநிலை வளர்ச்சி நிலையைக் குறிக்கும் சொல்.
உலைவு ஊங்கு உயிர் - துன்புற்று நீங்கும் உயிர்.
முச்சி - தலை உச்சி.
அப்புதல் - வாரிப் பொதிதல், கையால் தேய்த்தல். கூடல்மறுகு - ஒன்றுக்கு மேற்பட்ட தெருக்கள் இணையும் இடம். முச்சந்தி. நாற்சந்தி ஆகிய இடம்.
பொய்யுடல் இருந்து இல்லையாகிவிடும் உடல் பொய்த்தல் இல்லை என்றாதல்.
புறம் மாறி . ஒரிடத்தினின்று வேறு இடத்திற்கு மாறிப் போதல்
மெய்யுடல்- இருக்கும் உடல் புகழுடல்,
உயிரானது இருந்த உடலினின்று கழன்று, என்றும் இருக்கும் புகழ் உடலில் புகுதல்.
புகு புகல் (துழைதல், சொல்லுதல்). புகழ். உயிர் உடல் மறைவுக்குப் பின், நுழைந்து வாழும் உடல் என்றும் புகன்று கொண்டிருப்பதற்கு உரிய தன்மையானும், புகுந்து வாழும் தன்மையானும், புகல் என்னும் சொல் உயர்வு சிறப்பெய்தி புகழ் என்னும் நிலைசிறப்புச் சொல்லாய்த் திரிந்தது. வினைச்சிறப்பு நிலைபற்றி, எழுத்துச் சிறப்புப் பேறு பெற்று, நிலைத்த சொல்லானது. சொற்கள் தம் தம் வினைகளுக்குரிய முறையில் உருமாறுதல் சொற்பிறப்பியல் கோட்பாட்டில் ஒருவகை என்க.
மிளிர்தல் - மின்னுதல், ஒளிர்தல், மின் எனும் வேரடியாகப் பிறந்த சொல்.
தமிழ் உணர்வு முற்றிய உள்ளத்தின் துணிவையும், அலைபுலை கொற்றத்து விளைவையும், உயிரின் காழ்ப்புத் தன்மையில் அது தன்னை இடம் பெயர்த்துக் கொள்ளும் வலிவையும், கொள்கைக்கென உயிர்பெயர்தல் உவகை தருவது என்னும் உயிர்முதிர்ச்சித் தன்மையையும் இப் பாடலுள் கண்டுகொள்க.
இப்பாடல் முன்னது திணையும், கன்னெய் ஆடல் என்துறையும் என்க.
திணையும் துறையும் புதியன.