நூறாசிரியம்/வினவுதி ராயின்
யாண்டுசில வாக நரையுள வாகுதல்
யாங்கா குதியென வினவுதி ராயின்
பூண்டவென் மனைவியோ மாண்டமைந் தில்லாள்
ஆண்டொன் றீன்ற மக்களும் அறிவிலர்
ஒன்றுரை வினையொன் றுழப்பர் இளையரும்
5
மன்றறந் திறம்பியது எமையாள் அரசும்
ஆன்றோர் நெஞ்சம் அழலத் திரிதரும்
இறந்த ஒழுக்கினார் எள்ளுரை
நிறைந்த ஊர்யான் நெருங்கிய ஊரே!
பொழிப்பு:
கழிந்த யாண்டுகள் சிலவேயாக, நினக்கு நரை வந்து ஆகியது யாங்ஙனம் ஆயினை என வினாவுவீராயின், யான் இல்லறம் பூண்ட என் மனைவியோ பெருமை பொருந்திய குணங்களொடு அமைந்திலள் ஆயினள்; ஆண்டுக்கு ஒன்றாக அவள் ஈன்று தந்த எண்ணில் மிகுந்த என் மக்களும் அறிவிலராக வாய்த்தனர். ஒன்று உரையாக, வினை ஒன்றாகச் செய்து, என் துணையாளரும் எனக்குத் துன்பம் விளைவிப்பர் ; மன்ற அற முறைகள் திரித்து வேறுபட்டது, எங்களை ஆள்கின்ற அரசும்; இவையன்றிச் சான்றாண்மை நிரம்பியவர் உள்ளங்கள் கொதிப்புற்று வருந்தும்படி, எவ்விடத்தும் வீணே திரிந்து கொண்டிருக்கின்ற ஒழுக்கம் தவறியவர்களின் வாயினின்று வெளிப்படும் எள்ளத்தகுந்த இழிவுரைகள் நிறைந்து கேட்கின்ற ஊர் யான் நெருங்க இருந்து வாழும் ஊரே!
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.
இளையோன் ஒருவன் நரை வாய்ந்தானாக, அவனை 'நீ யாங்ஙனம் இவ்விளமைப் பொழுதிலேயே நரை வந்து வாய்க்கப் பெற்றனை' என்று வினாவிய முதியோர் ஒருவர்க்கு அவன் விடை கூறுவதாகப் பாடப் பெற்றதிப் பாடல்.
இது புறநானூற்று 'யாண்டு பலவாக'என்னும் பிசிராந்தையார் பாடலை நினைந்து அதற்கு மறுதலையாகப் பாடப்பெற்றது. பொந்தியகையற்றுக் கவல் நிறைந்த வாழ்க்கை இளமையிலேயே நரையைத் தோற்றுவிக்கும் என்னும் உளவியலை அடியொட்டியது இது.
‘யான் மணம் பூண்ட என் மனைவியோ மாண்பு அமைதல் இல்லாதவள் ஆயினள்; எனவே இல்லறச் சிறப்பின்மையால் என் மனங்கவன்று ஏறுபோல் பீடு நடை குன்றிக் குமைந்தேன். ஆண்டுக் கொன்றாக அவள் பயந்த மக்கள் பலருள் ஒருவரேனும் அறிவறிந்தவராக வாயாமற் போயினமையால், பெறத்தக்க பேறின்றி நெஞ்சம் அழன்றேன். என் வினைவாழ்க்கையிலோ, என் துணையாளரும் பணியாளரும் யானொன்றுரைக்க, அவர் அக் குறிப்பறியாது, நின்ற நெடுமரம் போல், வினையொன்றியற்றிப் பாடுகெடுப்பாராகலின் மனம் உழன்றேன்; இனி, என்னையும் எம்மையும் ஆள்தற்கு வந்து வாய்த்த அரசோ, அவையத்து அறமுறை திரிந்து மாறி நடக்கும் அரசாக அமைந்ததாகலின், அதுபற்றியும் அறிவு கனன்று கடுந்துயருற்றேன். இனி, இவையனைத்தும் ஒருபுறங்கிடக்க, சான்றோர் நெஞ்சம் கொதிப்புற்று வருந்தும்படி என்றும் எவ்விடத்தும், முனைப்பும் வினைப்பாடும் முற்றத் துறந்தாராய் இளைஞரும் பிறரும் இறந்து பட்ட ஒழுக்கமும் பண்பும் கொண்டு, தத்தமக்குள் பிறர் எள்ளத்தகுந்த இழிவுரைகளும் பழியுரைகளும் ஆடக் கொண்டோராக ஊர்வலம் வரும் நெரிசல் மிக்குடைய ஊரின் கண்ணே வந்து வதியலுற்றேன் ஆயினேன். பின் என்னை, எனக்கு இவ்விளமைக்கண்ணே முதுமை வந்தாற்போலும் தலை நரை காணாது போகுமோ கண்டேன், என்றானாக, ‘என்னை? நினக்கு இளமை நரை பூண்டது’ என்று வினாவியவர்க்கு உரை தந்தான் என்க.
யாண்டு சிலவாக- நினக்குக் கழிந்த ஆண்டுகள் சிலவே ஆக (நின் அகவை (வயது) குறைவாக இருக்க)
நரையுள வாகுதல் - நினக்கு நரை உளதாக இருத்தல்.
யாங்கு ஆகுதி - யாங்கன் ஆகினை.
என வினவுதிராயின் - என வினவுவீர் ஆயின்
பூண்ட என் மனைவியோ-யான் மணம்பூண்ட என் மனைவியாகியளே.
மாண்டு அமைந்தில்லாள்-மாட்சிமையற்று அமைவில்லாதவள் ஆகினள்.
ஆண்டு ஒன்று ஈன்ற மக்களும் அறிவிலர் - ஆண்டுக் கொன்றாக அவள் ஈன்று தந்த மக்களும் அறிவறியா மக்களாயினர்.
ஒன்று உரை வினை ஒன்று - உரைத்தது ஒன்றாகச் செய்வது ஒன்றாக
உழப்பர் இளையரும்- என் வினைக்கென வந்து வாய்த்த எனக்குக் கீழாயினோரும், மனத்துயர் தருவர். மன்று - அரகம்- ஆளுமை முறை சார்ந்த அரச மன்றமும், நெறி முறை மாறி வேறுற்றுப் போனது.
ஆன்றோர் நெஞ்சம் அழல - அறிவும் ஒழுக்கமும் சான்ற உயர் நெறியாளர் தம் நெஞ்சு, புறச்சூழ்நிலை கண்டு கொதிப்புறும்படி
திரிதரும் இறந்த ஒழுக்கினார் - மாக்கள் போல் தாறு மாறாகக் குறிக்கோளற்று ஊர்க்கண், குறுக்கும் நெடுக்குமாகத் திரிகின்ற, தவிர்ந்த ஒழுக்கமுடைய அரம்ப மாக்கள்.
எள்ளுரை நிறைந்த - எள்ளத் தகுந்த இழிவுரைகளே எங்கும் கேட்கும்படி மலிந்து நிற்கின்ற.
ஊர்யான் நெருங்கிய ஊரே! - ஊராக இருக்கிறது, யான் வந்து நெரிசலில் நசுங்கி வதியும் ஊர்.
மாந்தனுக்கு புறக்கூறாக அமைந்த செல்வநிலை வாழ்க்கை எத்துணைச் சிறப்பாக அமையினும், அகக்கூறாக உள்ள இல்லற அமைவும், அதையொட்டிய நாள் நடைமுறைகளும் சிறப்புற அமைய வில்லையாயின் அவன் மகிழ்ச்சியுற்றிருக்க இயலாதெனும் உளவியல் உண்மையை உணர்த்தியதாகும் இப்பாடல். .
அகச் சிறப்பமை வின்மையால் மகிழ்ச்சி இயலாதாகவே எத்துணைச் சிறந்த உணவுண்டு இளமை பேணினும், உடல் காலக் கழிவின்றியே முதுமை தோற்றுவிக்கும் என்னும் உடலியல் உண்மையுங் கூறியது இது.
இது பொதுவியல் என் தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம் என்க.