நூறாசிரியம்/விழுபசிக் கெழுதும்

86 விழுபசிக் கெழுதும்


வளிநிலந் துறந்து விண்கோள் வெளவி
அளிமழை பொழித்துக் கனவி மாற்றிக்
கருமுழை திரளா வுருவகை தோற்றி
அருமுயிர் நிலைப்பை அவரவா நீட்டுந்
திறத்தோ ராயினும் பிறத்தோ ரெல்லாம் 5
இறத்தன் மாறார் இருக்கு ஞான்றையுங்
கட்புல னுள்ளுழிக் காட்சியு முளதால்
உட்செவி யுள்ளுழி யொலிக்கதுப் புளதால்
மோப்பொறி யுள்ளுழி யாப்புயிர்ப் புளதால்
உகலுட லுள்ளுழி உளமுள தாகலின் 10
எழுபசிக் கேறா முளத்து
விழுபசிக் கெழுத்தும் வேண்டுவ யாண்டே!

பொழிப்பு:

காற்று இயங்கும் இந் நில மண்டிலத்தை விட்டேறி வானத்துச் சுழலும் கோளைப் பற்றிக் குளிர்ச்சி பொருந்திய மழையைப் பொழிவித்து, கதிரவனின் இயல்பை மாற்றி இருளடர்ந்த மலைவிடரை திரட்சியான உருவமுடைய வகையில் தோற்றுவித்து அரிய உயிர்நிலைப்பை அது நீங்கும் காலத்தே அவர்தம் ஆசையை வெளிப்படுத்துமளவும் நீட்டித்து வைக்கும் திறமுடையோராயினும் இவ்வுலகில் பிறந்தோரேல்லாம் இறத்தலைத் தவிர்ப்பாரல்லர் வாழுங் காலத்தும் கண்ணாகிய புலன் இருக்குமட்டும் காணப்படும் காட்சியும் உண்டு, உள்ளிடமான செவி இருக்குமட்டும் கேள்வியும் உண்டு மோத்தலுக்குரிய பொறியாகிய மூக்கு இருக்கு மட்டும் மூச்சை யிழுத்தடக்குதலும் வெளியிடுதலும் உண்டு அழியத் தக்க உடல் இருக்குமட்டும் உள்ளமும் உண்டு; ஆதலின் எம் வயிற்றில் எழும் பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு யாம் முயற்சி மேற்கொள்ளமாட்டோம்; உள்ளத்தின்கண் பொருந்திய மெய்யறிவுப் பசியினாலேயே முனைகின்றேம். யாம் விரும்புவன யாண்டு உள!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

வானக்கோளைப் பற்றுதலும் மழைமுகிலைப் பொழிவித்தலும் கதிரவன் இயல்பை மாற்றுதலும் மலைவிடரைத் துர்த்துயர்த்திக் கொடுமுடியாக்கலும் மூச்சுக்காற்றைத் தேக்கித் தாம் விரும்பியாங்கு நீட்டித்தலும் ஆகிய அரிய வினைகளைச் செய்யும் பேராற்றல் வாய்ந்த வராயினும் இவ்வுலகில் பிறந்தவரெல்லாம் இறத்தல் உறுதியாம். உடலில் கண்ணும் செவியும் மூக்கும் உள்ளமட்டும் காட்சியும் கேள்வியும் முகர்ச்சியும் உண்டு. ஆகவே யாம் வயிற்றுப்பசி தணிக்கும் எளிய முறையில் ஈடுபடேம். உள்ளத்ததான மெய்யறிவு நாட்டமுடையேம் என்று எடுத்துரைப்பது இப்பாட்டு

வளிநிலம் துறந்து விண் கோள் வெளவி - காற்று இயங்கும் இந்த நில மண்டலத்தைவிட்டு மேலேறி வானக்கோளைப் பற்றி.

இந்நிலவுருண்டையின் மேல் குறிப்பிட்ட எல்லையளவே காற்று மண்டலம் உள்ளதென்றும் அதற்கப்பால் காற்றுமற்ற வெற்றிடமேயாம் என்றும் அறியப்படுதலின் வளிநிலம் எனப்பெற்றது.

'வளிவழங்கும் மல்லன் மாஞாலம் 'என்றார் திருவள்ளுவரும்.

வளி-காற்று. வெளவி-பற்றி.

அளிமழை பொழித்து - குளிர்ச்சி பொருந்திய கார் முகிலை மழை பொழியச் செய்து.

அளி-குளிர்ச்சி. பொழித்து-பொழிவித்து.

கருமுழை திரளா உருவகை தோற்றி - இருளடர்ந்த மலைவிடரைத் துர்த்து கற்றிரளாக அதன் வடிவத்தை வகை மாற்றித் தோற்றுவித்து.

முழு-விடர்.

அரும் உயிர்நிலைப்பை அவர் அவாநீட்டும் திறத்தோர் ஆயினும் -உள்ளிழுத்து நிறுத்தப்பட்ட மூச்சுக் காற்றின் இருப்பை தாம் விரும்பியாடங்கு நீட்டிக்கும் ஆற்றல் வாய்ந்தவராயினும்,

பிறத்தோர் எல்லாம் இறத்தால் மாறா - பிறந்தவரெல்லோரும் சாவதில் மாற்றமுறார்.

இருக்கும் ஞான்றையும் - விழுங்காலத்தும். ஞான்றை-காலம்.

கண்புலன் உள்காட்சியும் உளதால் - கண்ணாகிய புலன் உள்ளவிடத்துக் காணப்படுங் காட்சியும் உண்டு.

ஆல்-அசை

உள்செவி உள்உழி ஒலிக்கதுப்பு உளது - உள்ளிடமான செவி இருக்கும்மிடத்து ஒலியைக் கதுவுதலும் உண்டு.

கண்ணும் மூக்கும் போலாது உள்வாங்கி யிருத்தலின் செவியை உட்செவி என்றார்.

கதுப்பு- கதுவு; பற்றுதல்

மோப் பொறி உள்உழி யாப்பு உயிர்ப்பு உளதால் - முகரும் பொறியாகிய மூக்கு உள்ளவிடத்து மூச்சு உள்ளிழுத்தலும் வெளியிடுதலும் உண்டு.

மோப்பொறி-மூக் யாப்பு - மூச்சை உள்ளிழுத்து நிறுத்துதல்,

உகல் உடல் உள்உழி உளம் உளது ஆதலின்- அழியத்தக்க உடல் இருக்குமிடத்து உள்ளமும் உள்ளது ஆதலினால்,

உகுதல் அழிதல்.

எழுபசிக்கு ஏறாம் -வயிற்றில் தோன்றும் பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு முயற்சியை மேற்கொள்ள மாட்டேம்.

ஏறாம் என்றது முயற்சிப்படியில் அடிவைக்க மாட்டேம் என்றாங்குக் கூறியது.

உளத்து விழுபசிக்கு எழுத்தும் - உள்ளத்தில் பொருந்திய மெய்யறிவுப் பசியினாலேயே முனைகின்றேம்.

எழுதும் என்பது விரித்தல் வேறுபாடுற்று எழுத்தும் என நின்றது.

விழுதல் பதிதல், பொருந்துதல். காதில் விழுந்தது என்றல் காண்க.

வேண்டுவ யாண்டே - யாம் விரும்புவன யாண்டு உள்ளன.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.