நூலக ஆட்சி/கணக்கு ஏடுகளும் கணக்கெடுப்பும்
நூலக ஆட்சிக்கணக்கு ஏடுகள்
(Library Administrative Records)1. விலைச் சீட்டுக்கள் (Invoices)
விலைச்சீட்டுக்கள் இன்றியமையாத ஆட்சிக் குறிப்புக்கள் ஆகும். விலைக்கு வாங்கப்பட்டவை பற்றிய விளக்கமளிக்கும் முதன்மையான குறிப்புக்கள் விலைச்சீட்டுக் களாதலால் அவைகளை மிகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இந்த விலைச் சீட்டுக்களில் நூலைப் பற்றிய எல்லாவித விளக்கங்களும் காணப்படும். விற்பனையாளர்கள் விலைச் சீட்டினை அனுப்புங்கால் மூன்று படிகள் Copies) அனுப்புதல் சாலச் சிறந்ததாகும். மூன்றினுள் இரண்டு அலுவலகத்திற்குப் பயன்படுத்தப்படும். மற்றொன்று தற்காலம் மட்டும் பயன்படுத்தப்படும். சில நூலகங்களில் விலைச் சீட்டில் காணப்படும் விளக்கங்களை ‘விலைச்சீட்டு ஏட்டில்’ (Invoice Book or Bill Register) பதிந்து கொள்வர். இவ்வேட்டிற்குப்பதில் அட்டைகளையும் சில நூலகங்களில் பயன்படுத்துவர். ஏட்டில் விளக்கங்களைக் குறித்துக்கொள்ளுதல் போலவே, ஒவ்வொரு நூலிற்குமுரிய விளக்கங்களைத் தனியாக அட்டைகளில் குறித்துக்கொண்டு அடுக்கிவைத்து விடுவர். விலைச் சீட்டுக்களைக் காக்கும் வழிகளிற் சிறந்த வழி, சீட்டுக்களை விற்பனையாளர் பெயர் அகர வரிசைப்படி அடுக்கி, அதற்குரிய அடுக்கில் வைத்தலாம்.
2. நன்கொடைக் குறிப்பேடு (Donation Register)
எல்லா நன்கொடைகளும் நன்கு தேர்ந்து தேர்ந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவைகள் உரிய ஏட்டில் பதியப்படல் வேண்டும். ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு நன்கொடைக் குறிப்பேடு வைத்துக்கொள்ளல் வேண்டும். நன்கொடைகள் வருகையில், வந்த நாள், கொடுத்தவரின் பெயர், முகவரி, நன்கொடை பற்றிய விளக்கங்கள் என்பன வழக்கமாகக் குறிக்கப்பெறுதல் வேண்டும். இவற்றோடு நூலகக் குழுவிற்கு நன்கொடை பற்றி அறிவிக்கப்பட்டது, குழு அதனை ஏற்றுக்கொண்டது என்பனவும் பதியப்படல் வேண்டும்.
3. நூலடங்கல் (Accession Register)
நூலகக் கணக்கு ஏடுகளில் நூலடங்கல் என்பது தலைமை வாய்ந்ததும், இன்றியமையாததுமாகும். நூலகத்திற்கு வாங்கப்படும் ஒவ்வொரு நூலைப்பற்றிய வரலாறு முழுமையும் எடுத்துக் கூறும் ஏடு இது ஒன்றுதான். இவ்வேடு பல்வேறு வகையாக விளங்கும். ஒரு நூலகத்தில் பெரியதோர் ஏடாக (Ledger Form) இருக்கும். மற்றொன்றில் அட்டைகளாலானதாக - விளங்கும். வேறொன்றில் தாள்களாக இருக்கும். எனினும் மிகப் பெரியதோர் ஏடாக இருப்பதே பலவிதத்திலும் நன்மை பயக்கும். சான்றுக்காக இத்தகைய நூலடங்கலின் பக்கம் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.(Upload an image to replace this placeholder.)
ஒவ்வொரு அலமாரியிலும் இருக்கும் நூல்களைப் பற்றிய நூல்பட்டியல் அலமாரி நூல்பட்டியல் ஆகும். அதாவது ஒவ்வொரு அலமாரிக்கும் தனித்தனியாக நூல் பட்டியல் தயாரிக்கவேண்டும். இப்பட்டியல்கள் நூல் கணக்கெடுப்புக்கு (Stock Verification) மிகவும் பயன்படும்.
கணக்கெடுப்பு (Stock Verification)
நூலகம் என்பது ஒரு வளரும் நிலையம். ஆண்டு முழுவதும் அது மன்பதைக்குத் தொண்டு செய்கின்றது, எனவே ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் நூல்களைக் கணக்கெடுத்தல் இன்றியமையாததாகும். அப்பொழுது தான், திருப்பிக் கொடுக்கப்படாத நூல்களையும், இடம் மாறிய நூல்களையும், தொலைந்துபோன நூல்களையும் கண்டுபிடிக்க முடியும். ஆண்டிறுதியில் நூல்களைக் கணக்கெடுப்பதற்கு முன்னால், அவ்வப்பொழுது அதாவது வேலைப்பளு குறைந்திருக்கும்பொழுது, நூல்களையும், பருவ வெளியீடுகளையும் நூலகத்தார் நன்கு கணக்கெடுத்தல் வேண்டும்.
கணக்கெடுப்புக்கு முன்னர் நூல்கள் எல்லாம் உரிய முறையில் அடுக்கப்படல் வேண்டும். அதன்பின் இரு ஊழியர்கள் மேற்சொன்ன நூல்பட்டியல்களின் (Shelf Lists) துணைகொண்டு வேலையினைத் தொடங்கவேண்டும். ஒருவர் நூலின் வரிசை எண், வகைப்படுத்திய எண் என்பவற்றைப் படிக்கவேண்டும். மற்றவர் நூல் பட்டியல் மூலம் சரிபார்த்தல் வேண்டும். ஏதாயினும் ஒரு நூல் காணப்படாவிடின் அதனை நூல் பட்டியலில் குறித்தல் வேண்டும். அது தவறிய நூலக் காட்டும். அதன்பின் நூலகத்தார் காணாத நூல் யாருக்காவது தரப்பட்டதா நூல்வடிவாக்கத்திற்கு (Binding) அனுப்பப்பட்டதா என்று ஆராயவேண்டும். இந்த இருவகையிலும் நூல் இல்லையெனின் அதனைத் தொலைந்த நூலாகக் கருதி நூலடங்கலிலும், அலமாரி நூல் பட்டியலிலும், நூல் பட்டியல் தொகை அட்டைகளிலும் (Catalogue cards) குறித்தல் வேண்டும். தொலைந்த நூலின் அட்டைகளை, வரிசையிலிருந்து நீக்கித் தனிப்பெட்டியிலும் வைக்கலாம்.
மேற்கூறிய முறைக்குப் பதிலாக வேறோர் முறையினையும் கையாளலாம். அஃதாவது நூல்களது வரிசை எண்களை ஒரு தாளில் முறையாகக் குறித்துக்கொண்டு முன் கூறியது போன்றே ஒருவர் நூலிலுள்ள வரிசை எண்ணைப் படிக்க மற்றவர் இத்தாள்மூலம் நூல்களைச் சரிபார்க்கலாம்.
நூலகச் சொற்கள் | |
---|---|
Accessioning | நூல்களைப் பதிவு செய்தல் அல்லது வரிசைப் பதிவு செய்தல் |
Accession Number | வரிசை எண் அல்லது பதிவெண் |
Accession Register | நூலடங்கல் |
Bill Register Invoice Book | விலைச்சீட்டு ஏடு |
Binding | நூல் வடிவாக்கம் அல்லது நூல்களைப் பழுது பார்த்தல் |
Book Card | நூல் அட்டை |
Book Issue Method | நூல் வழங்கும் முறை |
Book List | நூல் பட்டியல் |
Book Order | நூல் வாங்குதல் |
Book Pocket | நூல் பை |
Book Selection | நூல் தேர்வு |
Borrower's Ticket | உறுப்பினர்ச் சீட்டு |
Catalogue | நூற்பட்டியல் தொகை |
Cataloguing | நூற்பட்டியல் தொகை எழுதுதல் |
Catalogue cards | நூற்பட்டியல் தொகை அட்டைகள் |
Checking off | விலைச் சீட்டினைச் சரிபார்த்தல் |
Classification | நூல்களை வகைப்படுத்தல் |
Classification No. | வகைப்படுத்திய எண் |
Collation | நூல்களைச் சரிபார்த்தல் |
Counter | நூல் வழங்கும் இடம் |
Date Slip | நாள் சீட்டு |
Donation Register | நன்கொடைக் குறிப்பேடு |
Gate Register | நுழைவுப் பதிவேடு |
Invoice | விலைச்சீட்டு |
Issue Register | நூல் வழங்கும் ஏடு |
Lending Department | நூல் வழங்கும் பகுதி |
Librarian | நூலகத் துறைத் தலைவர் அல்லது நூலகத் தலைவர் |
Library Administration | நூலக ஆட்சி |
Library Administrative Records | நூலக ஆட்சிக் கணக்கு ஏடுகள் |
Library Committee | நூலகக் குழு |
Mobile Library | நடமாடும் நூலகம் |
Numbering | நூலின் எண் குறித்தல் |
Open Access System | விரும்பிய வண்ண ம் படிக்கும் முறை |
Open Shelves | திறந்த அலமாரிகள் |
Periodicals | பருவ வெளியீடுகள் |
Periodical Card | பருவ வெளியீட்டு அட்டை |
Preparation of Books for Public use | நூல்களைப் பயன் பெற ஆக்குதல் |
Process Recording | பதிவு முறை |
Reference Books | மேற்கோள் நூல்கள் |
Reference Librarian | செய்தி விளக்கம் அளிக்கும் நூலகத்தார் |
Reference Section | செய்தி விளக்கம் தரும் பகுதி |
Serials | தொடர்கள் |
Shelf List | அலமாரி நால் பட்டியல் |
Stock Verification | கணக்கெடுப்பு |
Suggestion Register | கருத்து ஏடு |
Title Page | தலைப்புப்பக்கம் |
இலக்கியம் :
இலக்கணம்:
கட்டுரைத் தொகுதி :
நூலக வரிசை :
முதியோர் கல்வி :
வரலாறு :