1

அந்த நிசப்தமே அங்கு ஒரு கெளரவமான சூழ்நிலையைப் படைத்துக் கொடுப்பதாக இருந்தது. ஒரு மனிதனுடைய பிரவேசம் பல மனிதர்களுடைய பேச்சுக்களையும், குரல் விகாரங்களையும் ஒடுக்கி நிசப்தத்தைப் படைப்பது அந்த ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவும் இருக்கலாம்: பயமாகவும் இருக்கலாம். மரியாதையா, பயமா என்று விவாதித்து முடிவு காண்பதைவிட அந்த நிசப்தம் யாரோ ஒருவன் பலரிடமிருந்து ஒரே சமயத்தில் அடைகிற இரகசியமான வெற்றி என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

பலரிடையே ஆரவாரத்தையும், கிளர்ச்சியையும் படைக்க முடிகிறவன் எப்படித் தலைவனாகி விடுகிறானோ அப்படியே, சிலரிடையே நிசப்தத்தைப் படைக்கிறவனும் ஒரு தலைவன்தான். சொல்லப்போனால் நிசப்தத்திலிருந்துதான் ஆரவாரமே பிறக்கிறது. ஆரவாரத்துக்கு முந்திய நிசப்தம்தான் அந்த ஆரவாரத்தையே பிரித்துணர அடிக்கோடு போட்டுத் தருகிறது. மெளனத்தின் மறுபுறம்தான் ஆரவாரம். ஆரவாரத்தின் மறுபுறம் தான் மெளனம். பலரை நிசப்தமாக்கிவிட்டுத் தான் மட்டும் உரத்த குரலில் பேசுகிற ஒருவன் எப்படித் தலைவனோ அப்படியே, சிலரை நிசப்தமாக்கிவிட்டு அந்தச் சிலரின் மரியாதையை மெளனமாக வெல்கிறவனும் ஒரு தலைவன்தான்.

இருபத்தைந்து முப்பது பேர் வேலை பார்க்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பார்த்தால் கமலக்கண்ணன் அப்படி ஒன்றும் படாடோபமானவரோ, பகட்டுப் பேர் வழியோ இல்லை. படாடோபம், பகட்டு, பணச்செழிப்பு, அதிகார முதன்மை எல்லாவற்றையும் தவிரவும் கூடச் சில மனிதர்களின் தோற்றமே, சுற்றியிருப்பவர்களை எழுந்து நிற்கவும், அதுவரை பேசிக்கொண்டிருந்த கலகலப்பான பேச்சிலிருந்து விடுபட்டு மெளனமடையவும் செய்வதுண்டே; அப்படிச் செய்கிற சக்தி கமலக்கண்ணனிடமிருந்தது. அவரைப்போல் பரம்பரையான பணக்காரக் குடும்பத்தில் வந்தவர்களுக்கு இப்படி மனிதர்களை ஆள்கிற தன்மையும் ஒருவேளை பரம்பரையாகவே வந்து விடுகிறதோ என்னவோ? ‘பணத்தை ஆள்கிறவர்களும், பதவியை ஆள்கிறவர்களும் அவற்றின் மூலமாக அதிகாரங்களை ஆள்கிறவர்களுமே இந்த விநாடி வரை மனிதர்களையும் ஆள்கிறார்கள் போலிருக்கிறதே’–என்று சொன்னால் சமதர்மம் மலருகிற நாட்டில்–சமதர்மம் மலருகிற நாட்களில் அது கேட்பதற்குக் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? கசப்பாக இருந்தாலும் உண்மை, உண்மைதானே? எவ்வளவுக்கெவ்வளவு கசப்பாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கசப்பதினாலேயே அது உண்மை என்று இனங் கண்டு கொள்ளப் பழகிவிட்டால் அப்புறம் கவலையில்லை, கசப்புமிருக்காது.

சராசரியாக நீங்கள் பார்த்திருக்கிற எல்லாப் பெரிய முதலாளிகளையும் போல்தான் கமலக்கண்ணனும் நீண்ட பெரிய காரில் பின் ஸீட்டின் இடது கோடியில் ஒரமாக உட்கார்ந்து ஒற்றைத் தனி ஆளாகச் சவாரி செய்து நாள் தவறாமல் காலை பதினோரு மணிக்கு அலுவலகம் வருவார். போர்டிகோவில் டிரைவர் பரபரப்பாக விரைந்து முன்னிறங்கிக் கார்க் கதவைத் திறந்து விட்டதும், மெதுவாகக் கீழே இறங்கி எதிரே மரம்போல் விறைத்து நின்று சலாம் வைக்கும் கூர்க்காவைக் கடந்து உள்ளே செல்வார். குளிர்சாதனம் செய்யப்பட்ட தமது அறைக்குள் நுழைவார். அமர்வார். டெலிபோன் பேசுவார். செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவார். கடித்ங்களை ‘டிக்டேட்’ செய்வார். ஸ்டெனோ சுத்தமாக டைப் செய்துகொண்டு வந்த கடிதத்தில் கீழே கடைசியாக அசுத்தமான தன் கையெழுத்திலும் இரண்டு வரி கிறுக்கிய பின் கையெழுத்துப் போடுவார். மனிதர் ரொம்பக் கெட்டவரில்லை. ரொம்ப நல்லவரா இல்லையா என்பதையும் அவசரமாக இப்போதே முடிவு செய்ய இயலாது. நாள் பொறுத்து இனி மேல் முடிவு செய்யவேண்டிய காரியம் அது. ஒருவேளை அப்படி முடிவு செய்யவேண்டிய அவசியமும் இல்லாமற் போகலாம், பெரிய மனிதர்களுக்கு நிர்ப்பந்தமாக இருந்தே தீரவேண்டிய வரையறுக்கப்பட்ட அதாவது– ‘லிமிடெட்’, –‘தார்மீக உணர்ச்சிகள்’ சில அவரிடமும் உண்டு. பழமையான தமிழ் அகராதியிலும், இலக்கியங்களிலுள்ள வள்ளன்மை, கொடை, அறம்போன்ற வார்த்தைகளுக்குப் பொருந்தி வரக்கூடிய உணர்ச்சிகளாக அவைகளை நீங்கள் கொண்டு விடக்கூடாது. அவசரப்பட்டு. அப்படிப் புகழ்வதால் பின்னால் துன்பப்பட நேரக்கூடாதல்லவா?

பொய்கள் பூத்துக்கிடக்கும் பட்டினத்தின் அகன்ற வீதிகளில் அவர் காரில் போகும்போது அருகிலும், தொலைவிலும் நடந்துபோகிறவர்கள் அவரையும் அவர் காரையும் சுட்டிக் காட்டிப் பெயர் சொல்லி வியக்கவும், பெருமைகூறவும் நேர்வது உண்டுதான். ஆனால் அந்த வியப்பும், பெருமையும் அவருக்கு மட்டுமே உரியவை அல்லவே அவரைப் போலவே பரம்பரையாகச் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து பத்திருபது பேர்களை வைத்துக் சம்பளம் கொடுத்து வேலை வாங்குகிற வியாபாரிகள் யாவருக்குமுள்ள பகட்டுதான் அது. அநுபவிக்கிறவனைப் பார்த்து அநுபவிக்கத் தவிக்கிறவன் கூறுகிற பொறாமையான பெருமை அது புகழின் பின் பக்கத்தில் பொறாமையும் பொறாமையின் பின் பக்கத்தில் புகழும் இருக்கிறதென்று யாரோ சொல்லியிருக்கிறானே, அப்படிப்பட்ட விவகாரம் அது. ஆனால் முழுமையாக அப்படியே சொல்லி முடித்துவிடவும் முடியாது, அவருடைய தோற்றத்துக்கும் பார்வைக்கும் ஒரு கம்பீரம் உண்டுதான், அவருடைய கம்பெனியில் பணிபுரியும் அந்த முப்பது பேருக்கு அது உணர்ச்சி பூர்வமாகத் தெரியும். கம்பெனிக் கட்டிடத்தின் நடுக்கூடத்தில் அக்கவுண்டண்டுகளும், கிளர்க்குகளும் மற்றவர்களும், அமரும் வரிசை வரிசையான நாற்காலிகளுக்கு நடுவே வகிர்ந்துகொண்டு செல்லும் அழகிய கம்பளம் விரித்த பாதையில் அவருடைய குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையை நோக்கி அவர் வரும்போதும் அறையிலிருந்து அவர் திரும்பிப் போகும்போதும் வரிசையாக எழுந்து நிற்கும் மனிதர்களும், ஒரு சீராகப் பரவி நிற்கும் மெளனமும் வெறும் பணத்தின் எதிரொலி என்றுமட்டுமே சொல்லிவிட முடியாது தான்.

எடுப்பான தோற்றமும் அவருக்கு இருந்த வசதியுள்ளவர்களின் உடம்பு, மேனி மினுமினுப்பு, கண்களின் பார்வையில் ஒருபகமை எல்லாம் அவருக்கும் வாய்த்திருந்தன. பணச்செழிப்பில் மிதந்ததனால் வாலிபம் கடந்த பின்னும் அதுகடந்துவிட்டது தெரியாத தோற்றமும், நடுத்தர வயதிலும் இளைஞர் போல் காண்கிற பொலிவும், அவருக்கு உரியவையாக இருந்தன. பல வசீகரங்களை உண்டாக்கித் தரும் ஒரே வசீகரம் பண வசதிதான் போலிருக்கிறது.

உள்ளே நுழைந்து சுத்தமாகப் பளீரென்று துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடித் தகடு பரப்பிய மேஜைக்கு எதிரே இருக்கையில் அமர்ந்து வழக்கமும், பழக்கமும் ஆகிவிட்ட காரணத்தில் குளிர் சாதன சுகத்தை உணரும் நிலையில்கூட இலயிக்காமல் குளிர்ச்சிக்கண்ணாடியும் சேர்த்துப் பொருந்திய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு அலட்சியமாக டெலிபோனை எடுத்து ‘ரோஸியை வரச் சொல்லுங்கள்’ என்று ஸ்டெனோவுக்கு அழைப்பு விடுத்தார் கமலக்கண்ணன். ரோஸி என்றழைக்கப்பட்ட ஆங்கிலோ – இந்தியப் பெண்மணி – ஒரு கொத்துக் கடிதங்களுடனும், கையெழுத்து வாங்குவதற்கு தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த ‘செக்’ புத்தகங்களுடனும் உள்ளே நுழைந்தாள். அபிநயத்துக்கு உயர்த்திய கையைப் போல் ஒரு கொத்துக் கடிதங்களுடனும் மற்றவற்றுடனும் வலது கையை மேலே உயர்த்திக் கதவை இடது கையால் ஒசைப்படாமல் திறந்து அவள் உள்ளே நுழைந்ததே ஒரு சிறிய நடனம் போல் இருந்தது. அளவுக்கதிகமாகவே அவள் பூசியிருந்த யார்ட்லி பவுடரின் சுகந்தம்அறையில் குப்பென்று பரவியதும் கமலக்கண்ணன் தலை நிமிர்ந்தார். வாசனையும், வாசனையற்ற தன்மையும் குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையில் குப்பென்று பரவுவதுண்டே தவிர மெதுவாகப் பரவுவதே இல்லை.

“இன்றைக்கு வந்த கடிதங்களில் நீங்கள் பார்க்கவேண்டிய கடிதங்கள்” என்று சொல்லிவிட்டுக் கடிதங்களை ஒரு புறமும், வேறு வேறு பாங்குகளுக்கான ‘செக்’ புத்தகங்களை இன்னொரு புறமுமாக மேஜைமேல் வைத்தாள் ரோஸி. பின்பு கையில் தயாராகக் கொண்டுவந்திருந்த பதில் கடிதங்களைக் குறிப்பெடுப்பதற்கான நோட்டுப் புத்தகத்தையும் கூராகத் தீட்டிய பென்சிலையும் வைத்துக்கொண்டும் சாய்ந்தாற் போல் அங்கேயே நின்று கொண்டாள் அவள்.

கமலக்கண்ணனோ கடிதங்களை முதலில் பார்ப்பதில் சலிப்புற்றவர்போல்–அல்லது அதைவிட வேகமாகச் செய்து முடிக்கிற காரியமான செக்கில் கையெழுத்திடும் காரியத்தை முதலில் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணங்கொண்டவர் போல் செக்கில் அலட்சியமாகக் கையெழுத்திடத் தொடங்கினார். செக்கில் அலட்சியமாக கையெழுத்திடத் தொடங்குகிற அந்த வேலையும் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்துக்கே உரிய அலட்சியத் தோடும் வேகத்தோடும் நடைபெற்றது. ‘செக்’ யாருக்குக் கொடுக்கப்படுகிறது? – எதற்தாகக் கொடுக்கப்படுகிறது? என்ன தொகைக்குக் கொடுக்கப்படுகிறது? – என்பதைப் பற்றியெல்லாம் அதிகம் சிரத்தை காட்டாமல், அதிகம் கவலைப்படாமல், சோம்பலோடும் அவசரத்தோடும் சிறு பிள்ளை கிறுக்குவதுபோல் கையெழுத்துக்களை அவற்றில் கிறுக்கித்தள்ளினார் கமலக்கண்ணன் அந்தக் கையெழுத்துக்களில் அவருடைய முதலெழுத்தான ‘டி’ என்பதையும்.அதற்கு அடுத்தாற்போல் பெயரின் முதல் எழுத்தாகிய ‘கே’ என்பதையும் தான் அரிய பெரிய முயற்சியின் பேரில் சிரமப்பட்டு கண்டுபிடிக்க முடியுமே ஒழிய அதற்கப்பால் வெறும் கோடுகளாக ஏறி இறங்கி வளைந்து புரண்டு நீளும் கிறுக்கலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. யாருக்கு, எதற்கு எவ்வளவிற்கு என்றெல்லாம் கவலைப்படக் கூடச் சோம்பல் பட்டுக் கொண்டே கையெழுத்திட்டாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அந்தச் செல்வம் கரைந்துவிடப் போவதில்லை. அலட்சியத்திற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது நீண்டகால அநுபவமும் நம்பிக்கையும் வாய்ந்த அக்கவுண்டண்ட், காஷியர் போன்ற ‘கவந்தன்கள்’ அதையெல்லாம் ஒரு முறைக்குப் பலமுறை கவனித்து உறுதி செய்யாமல் ‘செக்'கே எழுதமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் தன் குடும்பச் சொத்துக்கள் எங்கே எப்படி எப்படி எந்த எந்த உருவத்தில் உள்ளன என்பது கூட அவருக்குச் சரியாகத் தெரியாதுதான். எல்லாம் அக்கவுண்டண்டுக்கும் காஷியருக்கும் வீட்டில் அம்மாவுக்கும்தான் நன்றாகத் தெரியும். இந்த மாபெரும். சென்னைப்பட்டினத்திலேயே முப்பது வீடுகளுக்கு மேல் தம் குடும்பச் சொத்தாக இருப்பதாய் அவருக்குத் தெரியுமே ஒழிய, எங்கெங்கே எந்த வீடு இருக்கிறது? யார் வாடகைக்கு இருக்கிறார்கள் என்ன வாடகை வருகிறது? என்பதெல்லாம் அவருக்குச் சரியாகத் தெரியாதவை. அவருக்கு முதுமையுமில்லை, துள்ளித் திரியும் இளமையும் இல்லை. முப்பத்து ஏழு வயது என்பது வாலிபத்தின் கடைசி அத்தியாயமாகவும் இருக்கலாம், நடுத்தரப் பருவத்தின் முதல் அத்தியாயமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பணக்காரர்களுக்கு நிரந்தரமாக ஓர் இளமை உண்டு. உப்புப்புளிக்குக் கவலைப்படுகிறவனுக்கு அந்தக் கவலையே ஒரு முதுமை. ஒரு வேலையுமில் லாதவனுக்கு அதுவோ ஓர் இளமையாகிற வசதி கிடைக்குமாயின் அந்த இளமை நம் கமலக்கண்ணன் அவர்களுக்குத் தாராளமாகவே கிடைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சிலவேளைகளில் கழுத்தின் கடைசி நுனிவரை பெரியபெரிய பித்தான்கள் வைத்துத் தைக்கப்பெற்ற அந்த க்ளோஸ் கோட்டிலும், பாண்டிலும், புகுந்துகொண்டு அவர் அளிக்கிற தோற்றம்கூட அவர் முகத்தின் இளமை யையோ பொலிவையோ, மாற்றி விடுவதாயில்லை. இளமைக்கு–இளமையாக நிருபித்துக் கொள்வதற்கு அடையாளமென்று சிலர் கருதும் அரைக்கை ஸ்லாக் அணிந்து கொள்வது அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. தங்கக் கம்பிகள் மின்னும் ப்ரேம் போட்ட அந்த மூக்குக் கண்ணாடியும், நீண்ட மூக்கும், சிவந்த உதடுகளும், அளவாகப் பேசும்பேச்சும், சிரித்தால் வைத்துக்கட்டிவிட்டாற் போன்ற அந்தப் பல்வரிசையின் வெண்மையும் – அவரைத் தனி கெளரவத்தோடு உயரத்தில் தூக்கி நிறுத்திக் காட்டக்கூடியவையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்கமுடியாது. பொம்மலாட்டத்தில் பொம்மையின் இயக்கத்துக்கான சகல கயிறுகளும் – பின்னாலிருந்து இயக்குகிறவனின் கைகளில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் வாழ்க்கையின் இளமை, புகழ், பொலிவு, அந்தஸ்து, சௌகரியங்கள் எல்லாம் பணத்தின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணம்தான் பின்னாலிருந்து இவற்றையெல்லாம் இயக்குகிறது என்பதைக் கமலக்கண்ணன் நிரூபித்துக் கொண்டிருந்தார். கமலக்கண்ணனைப் போன்ற இன்னும் சிலரும் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ அவர் ‘செக்’ புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாரே: சங்கீத சபைக் கட்டிட நிதிக்குப் பத்தாயிரம், கடம்பவனேசுவரர் கோயில் புனருத்தாரண நிதிக்கு ஐயாயிரம்; காந்திய சமதர்ம சேவா சங்கத்திற்கு மூவாயிரம்–என்று அவர் போடும் நன் கொடைக் கையெழுத்துக்களைப் பார்த்தாலே ஏழையாகிய உங்களுக்கும், எனக்கும் தலை சுற்றுகிறதல்லவா? தலை சுற்றாமல் வேறென்னசெய்யும்? இதில் சில தொகைகளைக் கணித பாடத்தில் படித்ததைத் தவிரத் தொட்டு எண்ணிப் பார்க்கும் அத்தனை வசதி உங்களுக்கோ எனக்கோ ஏற்பட்டதே இல்லையே! காந்திய சமதர்ம சேவா சங்கத்தின் ‘செக்’ கையெழுத்தானதும் ஸ்டெனோ இன்னொரு செய்தியையும் அந்தச் சங்கத்தோடு தொடர் புடையதாக அவருக்கு நினைவூட்டினாள். “அவர்களுடைய மூன்றாவது ஆண்டு விழா வருகிற வாரம் நடக்கப் போகிறதாம். அதற்கு நீங்கள் தான் தலைமை வகிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார்கள் சார்! ‘செக்'கை அனுப்புமுன் கடிதத்தைப் படித்துப் பார்த்து விடுங்கள்” என்றாள். இதைச் சொல்லும்போதே அந்த ஆண்டு விழாவிற்குத் தலைமைதாங்க அவர் இணங்குவார் என்ற நம்பிக்கை நிச்சயமாக அவளுக்கு இல்லை. ஆனால் வாழ்க்கையிலேயே முதன் முறையாக அன்று ஒர் அதிசயம் நடக்கப்போகிறது என்று அவள் கண்டாளா என்ன? கூட்டம், சொற்பொழிவு, தலைமை, பரிசு வழங்கல் என்றாலே காததூரம் விலகி ஓடுகிற சுபாவம் அவருக்கு. வெட்கமும், பயமும், சபைக்கூச்சமுமே முக்கியமான காரணங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தம்மை விட்டுவிடுவதற்கும் சேர்த்து ஏதாவது நன்கொடை கொடுத்தாவது தப்பித்துக் கொள்வாரே ஒழியச் சிக்கிக் கொண்டு விடுவது அவர் வழக்கமேயில்லை. ‘ரோட்டரி கிளப்’ காரியதரிசியாயிருந்த காலத்தில்கூட ‘வெல்கம் அட்ரஸ்', ‘ஒட் ஆஃப் தேங்க்ஸ்’ போன்ற அயிட்டங்களை ஒர் ஆங்கிலப் பேராசிரியரிடம் எழுதி வாங்கிப் படித்து முடித்துவிடுவாரே தவிர மேடையிலே ‘எக்ஸ்டெம்போர்’ ஆகப் பேச வராது அவருக்கு, பரம்பரைப் பணக்காரர் குடும்பத்துக்குச் சில முறையான அடையாளங்கள் சென்னையில் உண்டு. ஆஸ்திகத்துக்கு அடையாளமாக கொஞ்சம் டோக்கன் பக்தி, கொஞ்சம் சங்கீத ரசனை, இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை வெளிநாட்டுப் பயணம், எதாவது ஒரு கல்லூரியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவி, தாய்மொழியில் கூடியவரை பற்றின்மை–சாத்தியமானால் அதன்மேல் ஒரளவு வெறுப்பு–ஏதாவது ஒரு சங்கத்தின் கெளரவ போஷகர் பதவி–வீட்டுக் குழந்தை களுக்கு நாட்டியம், சங்கீதம் கற்பித்தல், இவையெல்லாம் அடங்கிய ஓர் அஞ்சறைப் பெட்டி ஞானம் வேண்டும். இவற்றில் சில அம்சங்கள் நம் கமலக்கண்ணன் அவர்களிடமும் இருந்தன. எதிலும் தீவிர விருப்பு வெறுப்பு இருக்காது. பக்தியிலிருந்து பரதநாட்டியம்வரை ‘டோக்கனா’க ஓர் உணர்வு இருக்கவேண்டுமே ஒழிய முழுமையாகவோ, தீவிரமாகவோ, எதிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பது இந்தப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு வழக்கம். காரணமில்லாத பலவற்றில் நிறையச் செலவழிப்பதும் காரணமுள்ளவற்றில் செலவழிக்காமலே விட்டுவிடுவதும் கூட இவர்களிடம் சகஜமான சுபாவமாக இருக்கும். அப்பனும் மகனும் பேசிக்கொள்ளும் போதுகளில், கணவனும், மனைவியும் பேசிக்கொள்ளும் போதுகளில்கூடத் தாய்மொழியில் பேசாமல் இருப்பதும் ஒரு பெருமை இவர்களுக்கு. சாதாரண மக்களின் வாழ்க்கையில் தெருவில், வீதியில் உள்ளவர்களின் சுகதுக்கங்கள் தெரியாத இப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகளும், உயர்தர உத்தியோகஸ்தர்களும் வருகிறார்கள் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்களே, அதில் நியாயமும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். சமூக வாழ்வில் தீவிர மாறுதல்கள் நிகழ வேண்டுமானால், இப்படிப்பட்ட அஞ்சறைப் பெட்டி ஞானமுள்ளவர்கள் குறைய வேண்டும். எந்தத் துறையிலும் ஆழ்ந்த பற்றோ அநுபவமோ இல்லாமல் எல்லாத் துறையிலுமே ஆழ்ந்த பற்றும் அநுபவமும் இருப்பவர்களைப்போல் நடிப்பவர்கள் பெருகி வருவதுதான் இந்த நூற்றாண்டின் இந்திய வாழ்க்கையில் பெரிய குறைபாடு என்பதை நாம் உணர்ந்து தீர வேண்டிய நிலையில் இருப்பதைத்தான் இது காண்பிக்கிறது. அவசர உபயோகத்துக்காக அடுப்படியில் வைத்துக் கொள்ள ஏற்ற முறையில் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் பருப்பு என்று போட்டு வைத்துக் கொள்ளும் அஞ்சறைப் பெட்டிபோல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இரசனை உள்ளவர்கள்தான் இன்று நிரம்பியிருக்கிறார்களே ஒழிய எந்த ஒன்றிலும் ஆழ்ந்த இரசனை உள்ளவர்களை எங்குமே காணமுடியாமலிருக்கிறது. புதியஇந்தியாவுக்கு இன்று இதுவும்ஒருகுறைதான். தன் நாட்டுக் கலைகளில் நம்பிக்கையில்லை. அந்நிய நாட்டுக்கலைகள் சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டும் தெரிந்தது போல் நடிக்கும் போலித்தன்மையோ எங்கும் உண்டு.

கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டு இரண்டு விநாடி யோசனைக்குப்பின், “இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். ‘செக்’கை அனுப்பும்போது என் சம்மதத்தையும் தெரிவித்துக் கடிதம் எழுதிவிடு” என்று கமலக்கண்ணன் பதில் கூறியபோது ரோஸிக்குத் தன் செவிகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அவர் தானா என்று சந்தேகமாயிருந்தது.

“சார்! அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கம் இருக்கிற இடம் இங்கிருந்து எழுபது எண்பது மைலுக்கு அப்பால் திண்டிவனம் பேர்கிற வழியில் ஏதோ ஒரு குக்கிராமம். அங்கே இங்கிலீஷில் பேசினால் புரியாது. கூட்டமும் வராது. ‘மைக்’ கூட ஏற்பாடு செய்வது சந்தேகம். அதனால்தான் பார்க்கிறேன்...”

“எதனாலும் பார்க்கவேண்டாம். நான் அவசியம் அந்தக் கூட்டத்துக்குப் போவதென்று முடிவு செய்து விட்டேன். பதில் எழுதிவிடு. அந்தத் தமிழ்ப் புலவர் ஒருவர் அடிக்கடி ஏதோ இலக்கியச் சங்கம் என்று நன்கொடைக்கு வருவாரே அவரை நான் கூப்பிட்டனுப்பியதாகத் தகவல் சொல்லி அனுப்பு. பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுக்கச் சொல்லிவிடலாம்...”

“உங்களுக்குத் தமிழில் பேசிப் புழக்கமில்லையே...!” “பரவாயில்லை! சமாளித்துக் கொள்ளலாம்... எப்படித்தான் பழகுவது ..? அறையில் ஆடித்தானே அம்பலத்துக்குப் போகவேண்டும்...”

–இப்படிக் கூறியதிலிருந்து ‘அம்பலத்தில்போய் ஆட வேண்டும்’ என்ற இரகசிய ஆசையும் அவருக்குள் புதைத் திருக்கும் உண்மையை ரோஸி உணர முடிந்தது. வெளியே போய்த் தமிழ்ப் புலவரை அழைத்து வரச் சொல்லி அலுவலகத்துப் பையனை அனுப்புவதற்காகச் சென்றாள் அவள். ‘கமலக்கண்ணன்’ மற்றக் கடிதங்களில் மூழ்கினார். அவர் மனத்திலோ இனம்புரியாத ஒரு துறு துறுப்பு. பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கி, மேடை, ரோஜாப்பூமாலை, கைதட்டல், வரவேற்பு மடல் ஆகிய சுகங்களில் மூழ்கிப் பேரும் புகழும் எடுக்க வேண்டுமென்று அவர் இதயத்தின் ஒரு கோடியில் ஆசை அரும்பியிருந்தது. அதற்குக்காரணம் முன்தினம் மாலையில் அவர் கலந்து கொண்ட ஒரு மணி விழாவாயிருந்தது. உள்ளூர்ப் பிரமுகர் ஒருவருடைய அறுபதாண்டு நிறைவுவிழாவுக்குப் போயிருந்தார் அவர். அவரும் குறிப்பிடத்தக்க கணிசமான நன்கொடை அந்த விழாவுக்குக் கொடுத்திருந்ததனால் ஒரு மரியாதைக்காக அவரை அழைத்திருந்தார்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள். போய்ப்பார்த்தபோது அவருக்கு வியப்பாயிருந்தது. தமிழில்மேடைப்பேச்சுப் பேசுகிறவர்கள்தான் எத்தனை விதவிதமாக வளர்ந்திருக்கிறார்கள்? எவ்வளவு கை தட்டல்? எவ்வளவு கூட்டம்? ஒரே வியப்பாயிருந்தது அவருக்கு கிளப், சேம்பர் அஃப் காமர்ஸ், டென்னிஸ் கோர்ட் இதைத் தவிர வேறு எங்குமே அதிகம் போயிராத அவருக்குப் புகழ்மயமான இன்னொரு புதிய உலகமே இந்த மணிவிழாவில் தெரிந்தது. அங்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையில் ஒரு தீவிர ஆசை அவருள் அரும்பி யிருந்தது. அதன் விளைவே இன்று திடீரென்று அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாகக் காந்திய சமதர்ம சேவா சங்கம் எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடத்துகிற கூட்டத்துக்குத் தலைமை தாங்க இணங்கியது. உள்ளே ஒரு தாகம் வந்திருந்தது அவருக்கு. மணிவிழாக் கொண்டாட்டத்துக்கு உரியவரை எல்லாரும் புகழ்ந்தது–வசனத் திலும், கவிதையிலும் அவருக்கு வரவேற்பு மடல்கள் வாசித்தளித்தது–எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்துக் கூட்டம் கூட்டமான மனிதர்களால் புகழப்படுவது என்ற வெதுவெதுப்பான சுகத்தில் ஒரு தாயமே உண்டாகியிருந்தது அவருக்கு. அந்தப் புகழின் உலகில் இதுவரை அவர் இருந்த இடம் அதலபாதாளம்தான். பணம் இருக்கலாம், ஆனால் அதை வைத்துக்கொண்டு இந்தப் புதிய வெது வெதுப்பான சுகத்தை அடைந்து பார்த்துவிட வேண்டு மென்ற தவிப்பு தவிர்க்க முடியாமலே அவருள் வளர்ந்து பெருகிவிட்டது. பணத்தினால் அடைய முடியாதது இல்லை. ஆனால் இந்த விதமான அசல் புகழினைப் பணத்தினால் மட்டுமே அடைய முடிவதில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அதனை அடைகிற மார்க்கங்களில் எதிலும் நடக்கத் தயங்கலாகாது என்ற முடிவிற்கு அந்தரங்கமாக வந்திருந்தார் அவர். அதன் முதல் விளைவே, அந்தக் குக்கிராமத்துக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேச விரும்பிய விருப்பம். பணத்தைச் செலவழித்து அடைகிற புகழைவிடத் திறமையையும், சாதுரியத்தையும் செலவழித்து அடைகிற புகழ்தான் சிறந்தது, விலைக்குப் பெறாமல், பரிசாக அல்லது கொடையாகப் பெறுகிற ஒரு பொருளின் சுகம் தானாக வருகிற–தகுதிக்காக வருகிற புகழில் இருக்கிறது. அந்தச் சொகுசு நிறைந்த சுகத்தின்மேல் அவருக்கு ஒரு காதலே உண்டாகி விட்டது. காதல் என்பதைவிடச் சக்தி வாய்ந்த மையல் என்ற வார்த்தையைப் போட்டுச்சொன்னாலும் அவருக்கு உண்டான புகழ் வேட்கைக்குப் பொருத்தமானதாகவே இருக்கும். தந்தக்கோபுரத்திலிருந்து உலகைப் பார்த்து வந்த அவரைப் போன்றவர்களுக்கு இந்தக் குடியரசு நூற்றாண்டின் சுகமான அநுபவம் இப்படிப்பட்ட மேடைப் புகழ்தானே என்று ஒரு மயக்கம்கூட ஏற்பட்டுவிட்டது. பொது வாழ்வில் ஈடுபட்டுப்புகழடைய முதற்படி மேடைதான்'என்று நேற்றைய நிகழ்ச்சிக்குப்பின் அவர் புத்தகக்கடைக்குப் போய் வாங்கிவந்தமேடைக்கலை என்றபொருளுள்ள தலைப்போடு கூடிய ஆங்கிலப்புத்தகம் தன் முதல் வாக்கியத்தைத் தொடங்கியது.

“தமிழ்ப் புலவருக்கு ஆளனுப்பி விட்டேன்! இன்னும் அரைமணியில் வந்துவிடுவார்” என்று ரோஸி திரும்பிவந்து கூறினாள். சிந்தனையிலாழ்ந்து போயிருந்த அவர் தலை நிமிர்ந்தார். பதில் எழுத எடுத்துவைத்திருந்த வேறு கடிதங்களுக்குப் பதிலை ‘டிக்டேட்’ செய்யத் தொடங்கினார்.

ஒரு ஸ்டெனோவுக்கு வேகமாக ஆங்கிலத்தில் டிக்டேட் செய்கிற அளவுக்கு வியாபாரக் கடிதங்களும், அவற்றை எழுதும் முறைகளும் அவருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. எப்படித் தொடங்கவேண்டும், எதைச் சொல்லவேண்டும், எவ்வள்வு சொல்லவேண்டும், எங்கே சொல்லவேண்டும் என்றெல்லாம் அவர் நன்றாக அறிவார். பிரசங்கத்தைத் தயாரிப்பதற்குத்தான் அவருக்குத் தமிழ்ப்புலவரின் அல்லது ஆங்கிலப் பேராசிரியரின் துணைவேண்டுமே ஒழிய–வியாபாரத்தை நடத்துவதற்கு யாருடைய உபாயமும் யோசனைகளும் அவருக்குத் தேவையில்லை. போதுமான உபாயங்களும் யோசனைகளும், அவரிடமே நிறைய இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/1&oldid=976854" இலிருந்து மீள்விக்கப்பட்டது