4

வ்வளவு நேரம் ‘சிகரெட்’ பிடிக்காமலிருந்துவிட்ட தியாகத்தை அப்போதுதான் நினைவு கூர்ந்தவர்போல் முன் ஸீட்டில் அமர்ந்திருந்த நிருபர் கலைச்செழியனிடம் ஒரு மரியாதைக்காக சிகரெட் பாக்கெட்டை எடுத்து. நீட்டினார் கமலக்கண்ணன். நிருபர் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டபின்---கமலக்கண்ணன் புகைபிடிக்கத் தொடங்கினார். கார் விரைந்தது.

இருவருமே ஒருவருக்கொருவர் பேசாமல் பிரயாணத்தைத் தொடர்வது சூழ்நிலையைக் கடுமையாக்கவே – ஏதாவது ஒரு கல்லிடமாவது இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் போன்ற அந்தத் தவிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காகக் கமலக்கண்ணன் பேச்சுக் கொடுத்தார்.

“உங்க பேப்பர் என்ன ‘சர்குலேஷன்’ இருக்கும்?”

“மூண்ரை லட்சத்துக்குமேலே போவுது சார்! வியாழக்கிழமை எடிசன் மட்டும் அரை லட்சம் கூடவே போவுது, அன்னிக்கி ராசி பலனும் சினிமாப் பக்கமும் உண்டு”

“ஆமாம்! நான்கூடப் பார்த்திருக்கேன், ராசிபலனுக்கு எப்பவும் ஒரு மவுஸ் இருக்கு...”

“சினிமாவுக்கு– அதைவிட கிராக்கி இருக்கு சார்!”– என்று அவருடைய அபிப்பிராயம் கலைச்செழியனுடைய திருத்தப் பிரேரணையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பர்ஸை மெல்லத்திறந்து இரண்டு பத்துரூபாய் நோட்டுக்களையும், ஒர் ஐந்துரூபாய் நோட்டையும் நாசூக்காக உருவி எடுத்துக்கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன்.

“நம்பளுக்குள்ள இதெல்லாம் எதுக்கு சார்?”– என்று குரலை இழுத்தபடியே ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்ட நிருபரிடம் “பரவாயில்லை! வச்சிக்குங்க” – என்று அவசியமில்லாமலேயே வற்புறுத்தினார் கமலக் கண்ணன். அவன் ‘நம்பளுக்குள்ள’ என்று சமதை கொண்டாடியதை மட்டும் அவரால் ரசிக்க முடியவில்லை.

“ஆமாம்! உங்க பத்திரிகையோட முதலாளி முன்னாலே வேறே பிஸினஸ் பண்ணிட்டிருந்தாரில்ல...?”

“வேலூர்லே கள்ளுக்கடை வச்சிருந்தார். மதுவிலக்கு வந்தப்பறம்தான் இந்தப் பத்திரிகையை ‘ஸ்டார்ட்’ பண்னினார். இப்ப இதுலேயும் நல்ல லாபம்தானுங்க...”

“வெளியூரிலே எல்லாம்கூட எடிசன் இருக்குப் போலிருக்கே?”

“ஒவ்வொரு ஊரிலேயும் தனித்தனி எடிசன் போடறதினாலே பல செளகரியம் இருக்குங்க...”

– இப்படியே அவர்களுடைய உரையாடல் வளர்ந்தது. கார் மர்மலாங்பாலத்தைக்கடந்து சைதாப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ஒரு டாக்ஸ் ஸ்டாண்டில் நிறுத்தச்சொல்லி நிருபர் இறங்கிக்கொண்டபின் கமலக்கண்ணன் வீடு திரும்பியபோது மணி இரவு பத்துக்கு மேலும் ஆகிவிட்டது. வீட்டில் சமையற்காரனையும், கூர்க்காவையும், பின் கட்டில் தாயையும் தவிர யாரும் இல்லை. ஓர் கால்மணி நேரம் முன் ஹாலில் கிடந்த ஆங்கில மாலைத் தினசரியைப் புரட்டுவதில் கழிந்தது. அப்புறம் இரண்டொருவருக்கு ஃபோன்செய்து மாலையில் காந்திய சமதர்ம சேவாசங்கக் கூட்டத்தில் தாம் பேசிய சிறப்பை விவரித்தார். வேறு சிலருக்கு ஃபோன்செய்து ரேஸ் முடிவுகள் பற்றி ஆர்வமாக விசாரித்தார். அதற்குள் மனைவியும் குழந்தைகளுமாகக் காரில் திரும்பிவந்து இறங்கினார்கள். –

“என்ன, கூட்டம் பிரமாதமாக்கும்?”– என்று மனைவி கொஞ்சம் கேலி கலந்த குரலிலேயே விசாரித்தாள்.

“என்னைக் கேட்காதே; நாளைக்குக் காலைத் தமிழ்ப் பேப்பரைப் பார்...” என்று. ஜம்பமாகவே பதில் கூறினார் கமலக்கண்ணன். தன்னுடைய முதற் கூட்டத்தையும், சொற்பொழிவையும் பற்றி அவள் இளக்காரமாகப் பேசுவதை உள்ளூர அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

டைனிங்டேபிளில் எல்லாரோடும் உட்கார்ந்து சாப்பிடும்போது திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல்,

“நாளைக்குக் கடைவீதிப்பக்கம் போனாத் தேவராஜமுதலி தெருவிலே படக்கடையிலே பெரிய காந்தி படமாப் பார்த்து ஒண்னு வாங்கிட்டுவந்து முன்னாலே மாட்டிடணும். மறந்துடாதே”– என்று சமையற்காரனிடம் உத்தரவு போட்டார் கமலக்கண்ணன்.

“காந்தி படத்தையா சொல்றீங்க?”–என்று மீண்டும் சந்தேகத்தோடு கேட்டுக் கமலக்கண்ணன் தலையை அசைத்தபின்பே சமையற்காரன் தனக்கு இடப்பட்ட உத்தரவை உறுதி செய்துகொள்ள முடிந்தது. படம் முன் ஹாலின் முகப்பில் நுழைந்தவுடன் எல்லார் கண்களிலும் படக்கூடியதாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனே மேலும் விவரித்துக் கூறினார். சமையற்காரன் பயபக்தியோடு கேட்டுக்கொண்டான். அவனுக்கு அந்த வீட்டில் இத்தகைய புரட்சிகள் எல்லாம் திடீர் திடீரென்று நிகழ்வது புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றியிருக்க வேண்டும்.

சாப்பாட்டிற்குப்பின் மனைவியோடு அமர்ந்து சிறிது நேரம் செஸ் விளையாடினார். பின்பு அவள் துப்பறியும் நாவல் படிக்கப்போய்விடவே அவர் தீராத தாகத்துடன் தமது பிரத்யேக அறையில்நுழைந்தார். உள்ளே அழகிய சிறிய வட்டமேஜையின்மேல் எல்லாம் இருந்தன. விதவிதமான வடிவமுடைய கிளாஸ்கள், கலந்துகொள்ளசோடா, மதுபான வகைகள் எல்லாம் இருந்தன. ‘பெர்மிட்’ சிறிய அளவுக்கானாலும் இத்தகைய ருசிகளில் பஞ்சம் ஏற்படும் படி விடுவதில்லை அவர். குடிக்கிற நேரங்களில் மட்டும் இடையிடையே புகைப்பதற்கு சிகரெட் போதாது அவருக்கு. அப்போது மட்டும் நல்ல காரமான சுருட்டுகள் அல்லது ஸ்பென்சர் ஸிகார்ஸ் வேண்டும் அவருக்கு. இந்தப் பழக்கங்கள் எல்லாம் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகவந்து விட்டவை. சிலசந்தர்ப்பங்களில் பெரியமனிதத்தன்மையை இவற்றாலும்தான் நிரூபித்துக்கொள்ள நேரிடுகிறது. சுக போகங்களைத் தவிர வேறு எவற்றின் மேலும் அதிகமான பக்தி செலுத்தியிராத ஒரு குடும்பம் அது. அப்படிப்பட்ட போகங்களில் ஒன்றை அடையத் தொடங்கியபின் இரவும் பகலும் கூடத் தெரியாமல் போய்விடுவது இயல்புதானே?

மறுநாள்காலை விடிந்ததும்– விடியாததுமாகத்தமிழ்த் தினசரியைத் தேடிப்பிடித்து வாங்கிவரச்சொல்லி அதன் முகத்தில் தான் விழித்தார் கமலக்கண்ணன். அவர் காந்திய சமதர்ம சேவாசங்கத்தில் பேசிய பேச்சு– புகைப்படம் எல்லாம் அதில் வெளிவந்திருந்தன. ஆனால் அவர் நல்ல அர்த்தத்தில் நல்ல வாக்கியத்தில் விளக்கியிருந்த ஒரு கருத்துக்கு ‘பெண்கள் வரவர மோசமாகிவிட்டார்களே!– பிரமுகர் கமலக்கண்ணன் வருத்தம்’ என்று ஒரு தினுசான மஞ்சள் கவர்ச்சியுடன் நாலுகாலம் தலைப்புக்கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இரவு காரில் திரும்பும்போது இந்தப் பத்திரிகையை நடத்துகிறவர் நீண்ட நாட்களுக்குமுன் கள்ளுக்கடை வைத்திருந்ததாக அந்த நிருபர் கூறியதை நினைவுகூர்ந்தார் கமலக்கண்ணன். கள்ளிலிருந்து பத்திரிகைவரை எதைவிற்றாலும் வாங்குகிறவர்களைப்போதை

யூட்டி விற்கும் அந்தத் தொழில்திறனை – அதே அளவு தொழில் திறனுள்ள மற்றொரு வியாபாரி என்ற முறையில் கமலக்கண்ணன் இப்போது மனத்திற்குள்வியந்தார். பத்திரிகையை எடுத்துப்போய்த் தான் பேசியிருந்த செய்தியும் புகைப்படமும் அடங்கிய பக்கத்தை மனைவியிடம் காண்பித்தார். அதைப் பார்த்துவிட்டு ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே, ‘அடேயப்பா! பெருமை பிடிபடவில்லை’– என்றாள் அவருடைய மனைவி இதற்குள் அவருடைய வியாபார நண்பர்கள் சிலரிடமிருந்து, ‘பத்திரிகையில் அவர்பேசிய செய்தியும், படமும் வெளிவந்ததுபற்றி’ போனிலேயே அன்பான விசாரணைகளும் தொடர்ந்து வரத்தொடங்கி விட்டன. அப்படி விசாரணைகளையும் பாராட்டுக்களையும், கேட்கக் கேட்க இந்தச் சமூகத்துக்கு எல்லாத் துறையிலுமே வேண்டிய அறிவுரைகளையும், உபதேசங்களையும், அளிக்கிற தகுதி. முழுவதும் தனக்கு வந்துவிட்டதுபோல் ஓர் பெருமிதஉணர்வு கமலக்கண்ணனுக்கு ஏற்படத்தொடங்கி விட்டது. அந்தப்பெருமை குளிருக்கு இதமாக நெருப்புக் காய்வது போன்ற சுகத்தை அளிப்பதாக இருந்தது.

வழக்கத்துக்குவிரோதமாக இருந்தாற்போலிருந்து அவருடைய உதடுகள் ஏதோ ஒரு தெரிந்த பாடலைச் சீட்டியடிக்கத் தொடங்கின. சோப்புப் டவலுமாகப் பாத்ரூமிற்குள் நுழையும் விடலை வயதுக் கல்லூரி மாணவனைப் போல் உற்சாகமாக ஏதோ பாடவேண்டும் என்று தோன்றியது. அவருக்கு முதலாளியின் மனநிலையைக் கணிப்பதில் வேலைக்காரர்களை மிஞ்சிய மனோதத்துவ நிபுணர்கள் உலகில்.இதுவரை ஏற்பட்டுவிடவில்லை என்று தோன்றுகிறது. சமையற்காரன் அவருக்குக் காலை காப்பி கொண்டுவந்து கொடுக்கும்போதுகாபியை டைனிங்டேபிளில் வைத்துவிட்டுத் தலையைச் சொரிந்து கொண்டே ஏதோ செலவுக்கு ஐம்பது ரூபாய் பணம் வேண்டுமென்று விநயமாகக்கேட்டான்.

‘ஓ! பேஷாக...வாங்கிக்கொள்! நான் சொன்னேனென்று ‘அம்மாவிடம்’ சொல்லு தருவாள்’ என்று அதற்கு இணங்கினார் கமலக்கண்ணன், இங்கே அவர் அம்மா என் றது மனைவியை. தாயாரைக் குறிக்கும்போது. பெரிய ‘அம்மா’...என்று அடைமொழி தருவதுவழக்கம். பங்களாவின் உள்கூடத்தில் மூலை அறையில் நீண்டி நாட்களாகப் படுத்த படுக்கையாக இருந்த நடமாட முடியாத – தன் தாயாரைப் பார்ப்பதற்காகப் போன கமலக்கண்ணன் – அன்று தாயிடம் கனிவாகவே இரண்டு வார்த்தைகள் விசாரித்தார். பார்வை மங்கிய அந்த மூதாட்டியின் மூக்குக்கண்ணாடியைத் தாமே மாட்டி விட்டுத் தமிழ்த்தினசரியில் வந்திருந்த தமது புகைப்படத்தையும், செய்தியையும்காட்டினார்.

“என்னமோ...அந்த முருகன் புண்ணியத்திலே நீ எவ்வளவோ நல்லாயிருக்கணும். உங்க நாயினா வார் ஃபண்டுக்குப் பணம்கொடுத்தப்ப அவரைப்பத்தி பேப்பர்காரன்லாம் இப்படித்தான் நெறைய எளுதினான். அதுக்குப்பெறவு இப்பத்தான் இப்பிடில்லாம் வருது...இதைப்பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...”–என்றாள் அந்த அம்மாள்.

– அந்தக் குடும்பத்தில் ஆண்கள் என்றுமே அதிகம் பக்தர்களாக இருந்ததில்லை. பெண்கள் ஒவ்வொரு தலை முறையிலும் பக்தி– நியாயம்– பழைய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் விடாமல் பேணி வந்திருக்கிறார்கள். இந்த மூதாட்டியும் அப்படித்தான் என்பதைத் தன் வார்த்தைகள் மூலமே விளக்கினாள். அந்த அம்மாளின் – கணவர் கமலக்கண்ணனின் தந்தை ஜஸ்டிஸ் கட்சி– நாஸ்திக மனப்பான்மை இரண்டும் அளவாகக் கலந்திருந்தவர். ஆனால் தம் மனைவியை அவரால் கொள்கை மாற்றம் செய்ய முடிந்ததே இல்லை. மாறாக மனைவியால் கடைசி காலத்தில் முதுமையில் கமலக்கண்ணனின் தந்தையும் கொஞ்சம் பக்தராக மாறினார். அந்திம தசையில் ஆஸ்திகவிஷயமூமாகவும்– கோயில் கட்டிடநிதிகள் வகையிலும் கொஞ்சம் தாராளமாகவே கூட இருந்தார் கமலக்கண்ணன் தலையெடுத்த காலத்தில் குடும்பத்தில் இந்த நிலைமை முற்றிலுமே மாறி விட்டது. நாட்டிலும்தேசிய நிலைமைகள் வளர்ந்து வெற்றி பெற்றுவிட்டன. எனவே புதியமாறுதல் தேவையுமாயிற்று.

‘அடித்தளக் கல் நாட்டியவர்– பிரபல தொழிலதிபர் திரு.கமலக்கண்ணன் அவர்கள்’–என்று முதல்நாள் மாலை தாமே நாட்டிய சலவைக்கல்லில் பொறித்திருந்த தம்முடைய பெயர் அவருக்கு நினைவு வந்தபோது அந்த மாதிரித் தம் பெயரைக் கல்மேல் எழுதிய அவர்களுக்கு மேலும் ஏதாவது உதவ ஆசைப்பட்டார் அவர். அப்படி உதவலாமா என்பதையும் தாயிடம் கலந்தாலோசித்தார்.

“ஏற்கெனவே அவங்களுக்கு ஒரு மூவாயிரம் நன்கொடையாகக் கொடுத்திருக்கேன். இப்ப கட்டிட நிதிக்கின்னு தனியாக் கேக்கிறாங்க. நீ என்னம்மா நினைக்கிறே? இன்னொரு ஐயாயிரம் கொடுத்துடலாமா? “இன்கம்டாக்ஸ்”காரன் கொண்டு போறதை இவுங்கதரின் கொண்டு போகட்டுமே...?”

“கட்டாயம் கொடுடா கமலு! தருமம் வீண்போவாது! இவ்வளவெல்லாம் பேர் போட்டிருக்கறப்ப நாமளும் பதிலுக்கு ஏதாச்சும் உபகாரம் பண்ணனுமில்லை?” என்றாள் அந்த அம்மாள்.

“நாளைக்கு இன்னொரு ஐயாயிரத்துக்குக் ‘செக்’ போட்டு அனுப்பிச்சிடறேன்” என்று தானே முடிவு செய்ததை அழ்மாவிடம் இணங்குவது போல் வெளியிட்டார் கமலக்கண்ணன். தாயிடம் பேசிவிட்டு அவர் மறுபடி முன்ஹாலுக்கு வந்தபோது–அவரைக் காண்பதற்கு யாரோ சிலர் காத்திருப்பதாக வேலைக்காரன் வந்து தெரிவித்தான்.

“யாருன்னு கேட்டுக்கிட்டு வா!” என்று வேலைக் காரனை அனுப்பிவிட்டு உள்ளேயே தயங்கி நின்றார் அவர். யாராயிருந்தாலும் வந்திருப்பவர்களை உடன் பார்க்க வேண்டும் போலவும், உபசரிக்கவேண்டும் போலவும் அப்போதைய மனநிலை இருந்தது. ஆனாலும் யாரென்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

வேலைக்காரன் இரண்டு நிமிஷத்தில் திரும்பி வந்து, “யாரோ கோவில் ஆளுங்க. ஏதோ கடம்பவனேசுவரர் கோயில் நிதியாம்”– என்றுதெரிவித்தான். கமலக்கண்ணன் உடனே பாத்ருமில் நுழைந்து அவசர அவசரமாக முகம் கழுவி நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு வெளியேவந்தார்.

“வாங்க! வாங்க...ஏது இப்படிப் பெரியவங்கள்ளாம் காலங்கார்த்தாலே என்னைத் தேடிக்கிட்டு” என்று வந்திருந்தவர்களைப் புன்முறுவலோடு வரவேற்றார்.

“ஏதோ இன்னிக்கார்த்தாலே உங்க தரிசனம் கிடைக்கணும்னு கடம்பநாதன் கிருபை பண்ணியிருக்கான்...” வந்தவர்களில் முக்கியமானவர் பேச்சைத் தொடங்கினார்.

“செக் அனுப்பிச்சேனே? கிடைச்சிதா...” என்றார் கமலக்கண்ணன். ‘கிடைச்சது மட்டுமில்லே! புனருத்தாரண நிதிக்கு முதல் ‘செக்’ ஐயாயிரத்துக்கு உங்ககிட்டருந்து தான் வந்திருக்கு. மினிஸ்டர் விருத்தகிரீசுவரன்தான் நம்ம நிதிக் குழுவுக்குக் கெளரவத் தலைவர். அவர்கிட்ட உங்க ‘செக்’ விஷயத்தைச் சொன்னோம். உடனே, “அப்பிடியா! கடம்பநாதன் நம்ப கமலக்கண்ணனை முதல் ‘செக்’ அனுப்பப் பண்ணியிருக்கான். அவரையே நிதிக் கமிட்டிக்கு வைஸ்பிரஸிடெண்டா இருக்கச் சொல்லிப் பகவானே கிருபை செய்யறான். நான் சொன்னதாகச் சொல்லி அவாளைக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்கச் சொல்லிக் கேளுங்கோ”ன்னுட்டார். நீங்க தட்டிச் சொல்லாம ஒத்துக்கணும். இது எங்க எல்லாருடைய அபிப்பிராயம் மட்டுமில்லை. ஈசுவர கிருபையும் உங்களுக்கு இருக்கு” என்றார்கள் யாவரும்.

“எனக்கு, அத்தனை தகுதி ஏது?” என்று விநயமாகக் குழைந்தார் கமலக்கண்ணன்.

“அப்படியில்லை. இந்த விநயமே ஒரு பெரிய யோக்கியதைதான்” என்றார் வந்தவர்களில் சாதுரியமாகப் பேசத் தெரிந்த ஒருவர். ‘அதுக்கில்லே! நான் வியாபாரி. பல அலைச்சல் உள்ளவன். நினைச்சா டில்லி, கல்கத்தா, பம்பாய்னு பறந்துடுவேன்...”

“கண்டிப்பா நீங்கதான் இருக்கணும்னு பகவானே நியமிச்சுட்டார்...”

“மினிஸ்டர் கூட அபிப்ராயப்படறாராக்கும்...”

“ஆமாம்! அவாளே உங்களுக்கு ஃபோன் பண்ணாலும் பண்ணுவா...நீங்க மறுத்துச் சொல்லப்படாது...”

“நீங்க இத்தனைபேர் வந்து சொல்றப்ப எப்படி மறுக்கிறது..?மினிஸ்டர்வேறே அபிப்ராயப்படறார்ங்ரீங்க...”

கமலக்கண்ணன் அந்தக் கோயில் புனருத்தாரண நிதிக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்க இண்ங்கினார். பின்பு மெல்ல, “கமிட்டியிலே வேறே யார் யார் லாம் இருக்கா...?” என்று கேட்டார்.

“குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையாசெட்டியார், கொச்சின்சா மில்ஸ் குமாரசாமி ஐயர், குபேரா பேங்சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் கமிட்டிலே இருக்கா...இனிமே ‘வைஸ் பிரஸிடெண்ட்’தான் கமிட்டியையே கூட்டணும். ‘செக்ரட்ரி’ ஒருத்தர் ‘எலெக்ட்’ பண்ணனும். வைஸ் பிரஸிடெண்டாகிய தனக்குக் கீழே இத்தனை லட்சாதிபதிகளும், தொழிலதிபர்களும், கமிட்டியில் இருப்பதாகக் கேட்டபோது அந்தப் பெருமையை வெளியே காண்பித்துக் கொள்ளாமல்,

“ஆமாம்! குப்புசாமிநாயுடு அமெரிக்கா போயிருக்கறதாக யாரோ சொன்னாங்களே? வந்துட்டாரா?” என்று விசாரித்தார்.

“வந்து விடுவார். இந்த வாரம் திரும்பி வரணும்” என்று வந்திருந்தவர்களில் ஒருவர் பதில்கூறினார். உடனே உட்புறம் திரும்பி எல்லாருக்கும் ‘காபி’ கொண்டுவரச் சொல்லிக் குரல் கொடுத்தார்.

“எதுக்குங்க;இப்பதான் காபி குடிச்சிட்டு வரோம்...” என்று வந்திருந்தவர்களும் உபசாரத்துக்காக மறுத்தார்கள். “அப்படிச் சொல்லப்படாது” என்று கமலக்கண்ணனும் உபசாரத்துக்காக வற்புறுத்தினார். கடைசியில் எல்லாரும் காபி குடித்துவிட்டே புறப்பட்டார்கள். போர்டிகோவரை சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய பின்பே, ‘மினிஸ்டர் விருத்தகிரீஸ்வரனிடமிருந்து டெலிபோன் வந்தாலும் வரும்’ என்பதாக அவர்கள் கூறிச் சென்றது நினைவு வந்தது அவருக்கு. அவர் தனக்குப் ஃபோன் பண்ணுகிற வரை காத்திருக்கப் பொறுமை இன்றித் தானே அவருக்கு ஃபோன் செய்துவிட வேண்டுமென்ற துறுதுறுப்பு உண்டாயிற்று கமலக்கண்ணனுக்கு டைரக்டரியில் நிறம் மாறிய பக்கத்தில் நம்பரைத் தேடிப்பிடித்து மினிஸ்டருக்கு ஃபோன் செய்தார் கமலக்கண்ணன். முதலில் வேறு யாரோ எடுத்தார்கள். அப்புறம், மந்திரி பேசினார். மந்திரியே மாபெரும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், “அடடா! நானே உங்களுக்கு டெலிபோன் செய்ய வேண்டுமென்றிருந்தேன். மறந்துபோய் விட்டது” என்பதாகப் பேச்சைத் தொடங்குவாரென்று கமலக்கண்ணன் எதிர்பார்த்தார், ஆனால் எல்லாமே முற்றிலும் மாறாக இருந்தது. மந்திரி ஒரு விநாடி தடுமாறி “கமலக்கண்ணனா? எங்கேயிருந்து பேசறீங்க?” என்று கேட்ட பின்பே பேசுவது யர்ரென்று அடையாளம் கண்டுகொண்டார். அதன்பின் கமலக்கண்ணனே வலுவில். “நம்ம கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தராண நிதிக்கு நான் ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கேன்” என்று. ஆரம்பித்தபோதும், “தெரியுமே! அதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களைத்தான் உபதலைவராய்ப்போடணும்னு கூடச் சொல்லி அனுப்பிச்சேனே” என்றும் மினிஸ்டர் கூறி விடவில்லை. “அப்பிடியா ரொம்ப நல்லது” என்று அந்தத் தகவலையே இப்போதுதான் முதல் முறையாக் கேட்பவர் போல மந்திரி வியந்தார். வந்திருந்த நிதிக் குழுவினர் தன்னிடம் மந்திரி பெயரை உபயோகித்துக் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டதை அவர் இப்போது புரிந்து கொண்டார். தனது ஏமாற்றம் மந்திரிக்குத் தெரியா தீவகையில் அவரிடம் பேச்சை முடித்துக் கொண்டு, டெலிபோனை ரெஸ்ட்டில் வைத்தார் கமலக்கண்ணன், ஒரு வியாபாரி என்ற முறையில் இப்படிப் பெரிய பெயரை உபயோகித்துப் பெரிய காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் ஒரு லெளகீக தந்திரம். ஆகையால் ‘நிதிக்குழுவினர்’ மேல் அவருக்குக் கோபம் வரவில்லை. மாறாக அவர்களது சமயோசிதத்தை அவரும் மனத்திற்குள் பாராட்டவே செய்தார்.

“என்ன விஷயம். ஏதோ டெலிபோன்லே பேசிட்டிருந்தீங்களே?” என்று மனைவி விசாரித்தபோதுகூட, “ஒண்னு மில்லே! கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணக் கமிட்டிக்கு நான்தான் ‘வைஸ் பிரசிடெண்டா’ இருக்கனும்னு மினிஸ்டரே வற்புறுத்தினார்” என்றுதான் பதில் வந்தது அவரிடமிருந்து. லெளகீகத்தை அதில் தேர்ந்த மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு அவர் எப்போதுமே தயங்கியதில்லை. இப்போதும் அப்படி ஓர் லெளகீகத்தை அவர்கள் இன்று தனக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனதாக நினைத்துப் பெருமைப்பட்டாரே ஒழிய அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் நினைக்கவே இல்லை. ‘நல்ல வியாபாரி ஒரு தடவை தான் ஏமாறும்போது அதிலிருந்து பலரை ஏமாற்றுவதற்கான பலத்தைப்பெறுகிறான்’ என்பது கமலக்கண்ணனின் சித்தாந்தம். இந்தச்சித்தாந்தத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது. இந்த விஷயத்தை வேறுபல நண்பர்களிடம் கூற நேர்ந்தால், கூட இன்மேல், ‘மினிஸ்டரே நான்தான் உபதலைவரா இருக்கணும்னு ரொம்ப வற்புறுத்தினார்’ என்பதாகச் சொல்வதைத் தவிர வேறுவிதமாகச் சொல்ல அவரால் முடியாது. அந்த அளவு பிறர் சாமர்த்தியத்தால் நிரூபணமாகும் உபாயங்களைக்கூடத் தன் சாமர்த்தியத்தால் இடம் விட்டு ஏற்றுக் கொள்ளும் உலகியல் ஞானத்தை அவர் பெரிதும் போற்றி வந்தார். வியாபாரி ஒருவன் சுலபமாக அரசியல் பிரமுகனாக முடிவதற்கும் பள்ளிக்கூட ஆசிரியன். ஒருவன் சுலபமாக அரசியல்வாதியாக முடியாததற்கும். இதுதான் காரணமாக இருக்க்வேண்டும் போலிருக்கிறது. நியாயமான திறமை வேறு; திறமையான சாகஸம்வேறு. திறமையான சாகஸம் உள்ளவர்கள் வெற்றிமுனையில் உள்ள காலம் இது. ஆகவே தான் கமலக்கண்ணன்கால தேசவர்த்தமானங்களைப்புரிந்து கொள்ளவும் அதன்படி மாறவும், வளையவும் தெரிந்து கொண்டிருந்தார். பணம் இருந்தாலும் அன்த ஒரு சாக்ஸமாக்கிப் புகழ்பெற வழி தெரிய வேண்டுமே? அது தெரியா விட்டால் என்ன இருந்தும் பயனில்லை. கமலக்கண்ண்னுக்குப் புகழடையும் வழிதுறைகளும் புலப்பட்டது அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தேசிய உணர்வுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதேபோல் பக்தி பூஜை, புனஸ்காரத்திற்கு அரசியல் ரீதியாகவும், மனப்பான்மையின் படியும் அந்தக் குடும்பத்து முன் தலைமுறை ஆடவர்களிடம் இடமில்லை. இன்று பலரோடு பழகி ஒட்டிக் கொள்வதற்கு அதுவும் ஒரு தேவை ஆகிவிடவே அவரால் தவிர்க்க முடியவில்லை. சர். பட்டம்பெற்றவர்கள், ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார்கள், வெள்ளைக்கார கவர்னர்கள் தவிர வேறெவருடைய படங்களும் அந்த பங்களாவின் சுவர்களில் முன்பு இடம் பெற்றதே இல்லை. இப்போதோ காந்திபடமும்,நேருபடமும், பாரதியார் படமும் இடம் பெறுகிற நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்த மாறுதலுக்கு எல்லாம் வளைந்து கொடுத்துத்தான் தம்முடைய உள்ளத்தின் எதிர்கால ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். பட்டம், பதவி, அதிகாரம் இவற்றையெல்லாம் அடைய ஆசைப்பட்டுத் தவிக்கும் காலங்களில் தன்மானம், தார்மீகக் கோபம் போன்றவற்றைக்கூட விட்டுவிட வேண்டும், அவற்றை எல்லாம் விடாமல் கட்டிக்கொண்டு பிடிவாதம் பிடித்தால் அடைய வேண்டியவற்றை அடைய முடியாமல் கூடப் போகும். அதனால் தான் மந்திரி விருத்தகிரீஸ்வரன்போனில் அப்படிப் பேசிய போது கூட அவரைவிடச் செல்வமுள்ளவராக இருந்தும், அதைத் தாங்கிக் கொண்டார் கமலக்கண்ணன். என்றாவது ஒருநாள் இப்படி மந்திரிகளை எல்லாம் அதிகாரம் செய்யும் இடத்துக்குகூடத் தான் வரமுடியும் என்ற நம்பிக்கை அவருள் இருக்கும்போது இதென்ன பெரிய விஷயம்? இன்று தன்னைத்தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை எல்லாம்தான் பழிவாங்குவதற்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது இன்று இவ்வளவு பதவி இறுமாப்புடன் இருக்கும் இதே விருத்தகிரீசுவரன் நாளை உலகத்திற்கும் கமலக்கண்ணனுக்குமே தெரியாதவராகப் போய்விடலாம். ‘அடுத்த தேர்தலில் யார் எப்படி ஆவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாதல்லவா?’ என்று ஆறுதலாக எண்ணினார் கமலக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/4&oldid=976857" இலிருந்து மீள்விக்கப்பட்டது