நெஞ்சில் ஒரு முள்
படிப்பு உடம்பை மட்டும் மென்மையாக்குகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
அது மனத்தையும் மென்மையாக்குகிறது என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன்.
நிலைத்து நிற்கும் உரம் போய்விடுகிறது. இங்கும் அங்கும் பறந்து அலையும் தன்மை வந்து அமைகிறது.
மனம், ஒரே இடத்தில் வேரூன்றி வளர்ந்து செழித்திடும் மரம்போல் ஒரு நெறியைப் பற்றி உறுதியாக நின்றால் நல்லதுதான்.
அல்லது, எங்கெங்குச் சென்றாலும் மாலையில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திடும் மாடுபோல், எத்தொழிலைச் செய்தாலும்
குறிக்கோளை மறக்காத மனமாக இருந்தாலும் நல்லதுதான். ஆனால், இன்ன திசை, இன்ன போக்கு, இன்ன கூடு என்று
வரையறை இல்லாமல் இயன்ற வரையில் பறந்து அலையும் பறவையாக இருந்தால் பயன் என்ன?
படிப்பு! பெரும்பாலும் அதன் பயன் இப்படித்தான் முடிகிறது. யாரோ ஒரு சிலர் தான் படித்தும்,
ஒரு நெறியில் நிற்கவல்ல உரமான நெஞ்சு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அதனால் படிப்பைப் பழித்துக் கூறலாம் என்றால், அதுவும் பொருத்தமாகத் தெரியவில்லை. குழந்தை தொட்டிலிலேயே இருக்க வேண்டும் என்று எந்தத் தாயும் விரும்புவதில்லை. படிப்படியாக அது செங்கீரையாடித் தவழ்ந்து எழுந்து நின்று நடந்து ஆடி ஓடி வளரவேண்டும் என்று தான் எந்தத் தாயும் விரும்புகிறாள். குழந்தை தொட்டிலிலேயே கிடந்து, கைக்கு இனிய பொம்மைபோல் இருந்தால் நல்லது என்று எண்ணுவதால் பயன் என்ன? அது வளர்ச்சியை - இயற்கையான வளர்ச்சியைத் - தடுக்க விரும்பும் தவறான மனப்பான்மை ஆகும்.
பறவையாய்ப் பறக்கும் மனம் பெற்றும் ஒழுங்காக வாழ்க்கை நடத்துவதே சிறந்தது என்று கூறலாம். ஆனால் என்ன செய்வது? ஒழுங்காக வாழ்வது, படிப்புக் குறைந்தவர்களுக்கு எளிதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு அரிதாக இருக்கிறது.
நான் மற்றவர்கள் மதிக்கும்படியாக வாழ்கிறேன். மற்றவர்கள் வாய்திறந்து குற்றம் சாட்ட முடியாது. அவ்வாறு நெறியோடுதான் வாழ்க்கை நடத்துகிறேன். ஆனால், என் மனம் அப்படி இல்லை. அந்த வகையில் தான், படிப்பு இல்லாமலே ஒழுங்காக வாழ்வை நடத்தி அமைதியோடு மகிழும் ஏழை எல்லம்மாவின் வாழ்க்கையைப் போற்றுகிறேன். அவளுக்குப் புத்தகம் பல அறிமுகம் ஆகவில்லை. உலகமும் அவளுக்குத் தெரியாது. வீடு தெரியும்; தெரு ஒருவாறு தெரியும்; குடும்பக் கடமைகள் நன்றாகத் தெரியும். குழந்தைகள் அவளுடைய நெருங்கிய உறவு; கணவனே அவளுடைய பற்றுக்கோடு. இப்படி இருந்தால், அப்படிச் செய்திருந்தால் - இவரை மணக்காமலிருந்திருந்தால், அவரை மணந்து கொண்டிருந்தால் - இப்படிப்பட்ட எண்ணங்களே இல்லாமல் அவள் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறாள்.
என்னால் அது முடியவில்லையே? ஏன்? என் மனம் பல புத்தகங்களை அவற்றில் உள்ள பல வாழ்க்கைகளை - வாழ்க்கையின் சிக்கல்களைத் - தேவைகளை ஆராய்ந்து அறிந்து உலகத்தில் பலருடைய பழக்கத்தால் பலவகை வாழ்க்கைகளையும் அறிந்து, ஆராய்ச்சி நடத்தப் பழகிவிட்டது. அதனால் அமைதியுற முடியவில்லை. ஒரு நெறியைப் பற்றிக் கொண்டு மற்றவற்றை மறக்க முடியவில்லை.
கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்த போது எந்தப் பிரிவில் சேர்ந்து கற்கலாம் என்பதைப் பற்றிப் பெரிய ஆராய்ச்சி; ஏதோ ஒன்றில் சேர்ந்த பிறகு, அந்தப் பிரிவை எடுத்திருந்தால் இன்ன துறையில் போகலாம், இந்தப் பிரிவை எடுத்திருந்தால் இன்ன துறையில் நுழையலாம், தெரியாமல் இதை எடுத்துவிட்டோம் என்று தடுமாறுதல்; ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம், மற்றவை கிடைக்கவில்லை, என்ன செய்வது, இனி அவற்றைப் பற்றி எண்ணி ஏங்கக் கூடாது என்ற தெளிவும் உறுதியும் இல்லாமல் மனம் அலைதல் - இப்படி இண்டர் படித்தபோது இருந்தது மனத்தடுமாற்றம். இண்டர் தேறி பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோதும், இந்தப் பிரிவா அந்தப் பிரிவா என்று தடுமாறினேன்; பிறகு பொருளாதாரப் பிரிவை எடுத்துப் படிக்க நேர்ந்ததும், பி.எஸ்.சி. எடுக்காமல் விட்டதைக் குறித்தும், பி.ஏ. வகுப்பில் வேறு பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தவறியதைக் குறித்தும் எண்ணி வருந்தினேன். ஏதோ ஒன்றுதான் கிடைக்கும். இந்த உலகத்தில் நாம் விரும்பியபடி விரும்பிய ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று என்ன அறிவுரை சொன்னாலும், மனம் அமைதியுறவில்லை. பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு தொழில் தேடிய காலத்திலும், அலுவலகத்திலும் கிளர்க் வேலைக்குச் செல்வதா, ரயில் நிலையத்தில் வழிகாட்டியாகச் செல்வதா, பி.டி. படித்துவிட்டு ஆசிரியராகச் செல்வதா என்று தடுமாறினேன். முன்னைய இரண்டும் ஆண்களோடு பழக வேண்டிய தொல்லை உள்ளவை என்று அம்மா தடுத்து விட்டார்; பின்னதற்குப் பண நெருக்கடி இடம் தரவில்லை என்று அப்பா தடுத்துவிட்டார். ஒரு சீமாட்டியிடம் செயலாளராக வேலை செய்வது நல்லது என்று அவளிடம் கொண்டுப் போய்ச் சேர்த்தார். அங்கு வேலை சேர்ந்த பிறகும், அந்த வேலைக்குப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும், இந்த வேலையில் சேர்ந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கும் என்றும் பலவாறு எண்ணித் தடுமாறினேன்.
இந்த விஞ்ஞானப் படிப்பும், மற்ற நூல்களின் படிப்பும், படித்தவர்களின் நட்பும் இல்லாதிருந்தால் அம்மாவைப் போல் எல்லாம் விதிப்பயன் என்று ஒரே நிலையாக அமைதியுற்றிருப்பேன். என் படிப்பு, எதற்கும் காரணம் கண்டு ஆராய்ச்சி நடத்தும் மனப்பான்மையை வளர்த்துவிட்டபடியால் இவ்வளவுதான் அமையமுடியும் என்றும், இதுதான் நம் வாழ்க்கை என்றும் மனம் நிலைத்திருக்க முடியவில்லை. படிக்காத ஏழைப் பெண் எல்லம்மா மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல் ஏங்காமல் அமைதியாக வாழ்வதுபோல் என்னால் வாழ முடியவில்லை. இப்படித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவளுக்கு இளமை முதல் எந்த நிலையிலும் எந்தத் துறையிலும் ஏற்படவில்லை. திருமணத்திலும் இல்லை. ஐந்தாவது வரையில் படித்தாள். அடுப்பங்கரையில் தேர்ச்சி பெற்றாள். எண்ணங்கள் வளர்வதற்கு முன்னமே தொழில் அமைந்துவிட்டது. ஏக்கங்கள் வளர்வதற்கு முன்னமே திருமணம் ஆகிவிட்டது. வெறுப்பும் சலிப்பும் ஏற்படுவதற்கு முன்னமே, ஒன்றன்பின் ஒன்றாய்க் குழந்தைக பிறந்து பாசங்கள் வளர்ந்து பிறர்க்காக வாழும் வாழ்வு இயல்பாக அமைந்துவிட்டது.
படித்தவை, பழகியவை, அறிந்தவை எல்லாவற்றையும் மறந்துவிட முடியுமானால், நானும் அவளைப் போல் வாழ முடியும். ஆனால் எப்படி மறக்க முடியும்? ஆகாத ஒன்று இது!
உரிமையும் நன்மையும் இயைந்து வராமல் அவற்றினிடையே ஒருவகைப் போராட்டம் இருந்து வருகிறது. சிறுவர்களை உரிமையோடு வளர்க்கலாம் என்று முயல்கிறவர்கள், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் துன்புறுகிறார்கள். கல்வி நிலையங்களில் உரிமையைப் போற்றினால், கல்வி தவிர மற்றத் துறைகளில் ஊக்கம் மிகுந்து உண்மைப் பயன் குறைந்து மாணவர்களின் ஆற்றல் சிதறி வீணாகிறது என்று சொல்கிறார்கள். குடும்பங்களில் உரிமை மிகுந்தால் போராட்டங்கள் தலையெடுப்பதையே காண்கிறேன். பெண்ணுரிமை என்பதும் இப்படிப் பட்டது தானே? தீமைக்கு வழிவகுத்து வைத்து, மனம் போன போக்கில் அலைய விட்டுவிட்டு, நன்மையை ஒதுக்கி விடுகிறதோ? இதுதான் உரிமையின் விளைவோ? ஆனால் இந்தக் காரணத்தால் குழந்தை உரிமை முதலியவற்றை வெறுத்துப் பழிக்கவும் முடியவில்லை. தீமையைக் குறைத்து நன்மையைப் பெருக்க இவற்றில் வழி இல்லையா என்பதுதான் தெரியவில்லை.
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு, எதிர்வீட்டாரின் பெண்ணுக்குத் திருமணம் நடப்பதை ஒட்டி அவர்களின் கிராமத்திற்குப் போயிருந்தோம். அப்பாவும் நானும் மட்டுமே போயிருந்தோம். அம்மாவுக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால் வரவில்லை. அந்தக் கிராமத்தில் குளத்தங்கரையில் ஒரு சாவடி இருந்தது. அதன் தாழ்வாரத்தில் ஏழைக் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. குளத்தின் கரையில் பழைய ஆழமரங்களும் அரசமரங்களும் வளர்ந்து படர்ந்து நிழல் தந்த காட்சி அழகாக இருந்தது. அதனால் பார்க்கலாம் என்று நானும் அப்பாவும் போயிருந்தோம். அப்போது அந்த ஏழைக் குடும்பத்தின் துன்பக் காட்சியைக் கண்டு வருந்தினேன். பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவதைத் தொழிலாகக் கொண்டவன் அவன். அவனுடைய மனைவி என்னைவிட வயதில் சின்னவள் தான்; இருபத்து மூன்றோ நான்கோ வயது என்று சொன்னாள். அவனுடைய தொழிலுக்குத் துணையாக அவளையும் அவன் அழைத்துக் கொண்டு ஊர் ஊராகக் கிராமங்களில் சுற்றி ஈயம் பூசிக் கூலிவாங்கி வயிறு வளர்த்து வந்தான். பித்தளைச் சாமான்களைத் தேய்ப்பது, நெருப்பில் கரி இட்டுப் பற்றவைப்பது, அதற்கு காற்று ஊதுவது, ஈயம் செலவாகி விட்டால் அடுத்த பெரிய ஊர்க்குப் போய் ஈயம் வாங்கி வருவது முதலான பல தொழில்களை அவள் செய்து அவனுக்குத் துணையாக இருந்துவந்தாள். பாதிவேலை அவள் செய்தாள் என்று சொல்லலாம். இத்தனைக்கும் இடையில் அவள் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் கடமையும் குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்து உணவளிக்கும் கடமையும் செய்து வந்தாள். நான்கு குழந்தைகள் அந்தச் சாவடியின் தாழ்வாரத்தில் எலிக் குஞ்சுகள் போல் பெரியதும் சிறியதுமாக இருந்தன. இவைகளை எல்லாம் எப்படிக் காப்பாற்றி இவ்வளவு வேலையும் செய்கிறாளோ என்று வியப்பும் அடைந்தேன்; இரக்கமும் கொண்டேன். ஒரு மூலையில் நான்கு மூங்கில் குச்சிகள் முள்போல் கூரிய முனைகள் உடையனவாக இருந்தன. அவை என்ன என்று கேட்டேன். "ஓய்வுநேரத்தில் எங்கள் வீட்டுக்காரர் மீன் பிடிப்பதற்குத் தூண்டில்கள்," என்றாள். ஒரு பொழுது போக்கும் இருக்கிறது, அதுவும் வயிற்றுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது என்று எண்ணி வியப்புற்றேன்.
அப்பா சிறிது தொலைவிலேயே நின்று கொண்டார். நான் மட்டும் அணுகிச் சென்று அங்கிருந்த சாமான்களைப் பார்த்தேன். சமைப்பதற்கு உதவும் சட்டி முதல், குழந்தைகளுக்குப் பால் ஊட்டும் பாலாடை வரையில், அகப்பை, கரண்டி, பாய், கந்தல், தகரக்குவளை, அடுப்புக்கரி, விறகு ஆகும் குச்சிகள், ஈயம் பூசும் கருவிகள் முதலிய எல்லாம் இருந்தன.
- "எந்த ஊர்?" என்றேன்.
- தாம்பரத்துக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னாள்.
- "அங்கே வீடு இருக்கிறதா?"
- "ஒரு பொத்தல் குடிசை இருக்கிறது."
- "நிலம்?"
- "ஒன்றும் இல்லை அம்மா?"
- "இதே பிழைப்புத்தானா?"
- "இதேதான்."
- "கூலி கிடைக்காவிட்டால்..."
- "கிடைத்த நாளில் முழுவயிறு; கிடைக்காத நாளில் அரைப்பட்டினி, முழுப்பட்டினி, இப்படித்தான்."
- "குழந்தைகள்?"
- "யாராவது அய்யோ பாவம் என்று ஏதாவது கஞ்சி வார்த்தால் தான், இல்லையானால் என்ன செய்யமுடியும்? அழுது அழுது தூங்கிவிடும்."
- "இப்படி ஊர் ஊராகச் சுற்றியே சத்திரம் சாவடியில் தங்கி எத்தனை நாள் பிழைப்பது?"
- "என்ன செய்வது? எங்களை எழுதினவன் இப்படி எழுதி வைத்தான். இந்தச் சாவடியிலும் எங்களை இருக்க விட்டால் போதுமே. குழந்தைகள் அசுத்தம் செய்யுது என்று வேறே இடத்துக்குப் போகும்படியாகச் சொல்லிவிட்டுப் பூட்டுப் போட்டுப் போய்விட்டார்கள். இப்போது வேறு இடம் பார்த்து வருவதற்குத்தான் அவர் போயிருக்கிறார். வந்ததும் கூடையைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு போய்விடணும்."
இதைக் கேட்டதும் எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் காட்சி இரங்கத்தக்கதாக இருந்தது. சின்ன குழந்தைகள் இரண்டுக்கும் உடம்பின் மேல் கந்தல் கூட இல்லை. பெரிய குழந்தைகள் இரண்டும் பெண்கள். இடுப்பில் கந்தல் சுற்றிக் கொண்டிருந்தன. நான் பெண்ணாக பிறந்ததற்காக அப்பாவும் அம்மாவும் பட்ட கவலையை நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வாடகை கொடுத்து வேளைக்குச் சமைத்துச் சாப்பிட்டு நாகரிகமான உடை முதலியவைகளுடன் வாழ முடிந்த எங்கள் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த என்னைப் பற்றிக் கவலைப்பட்டார்கள் என்றால், இந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் கதி என்ன என்று எண்ணினேன். அப்பா இருந்த இடத்திற்கு நகர்ந்து வந்து இதைப் பற்றிச் சொன்னேன்.
- "நம் குடும்பங்களில்தான் இந்தக் கவலை. இவர்களுக்கெல்லாம் இந்தக் கவலை இல்லை. வேளைக்குச் சாப்பாடு, தங்க இடம், மானத்தை மறைக்கத் துணி இவ்வளவு இருந்தால் இவர்களுக்குப் போதும்."
- "அந்த அளவிற்கும் கிடைக்காமல் கவலைப்படுகிறார்களே அப்பா!"
- "அதனால் தான் பணம் வேண்டும் என்கிறோம் பணம் தான் வேண்டும் என்கிறோம். பணம் இல்லையானால் வாழ்க்கையே இப்படிப்பட்ட நரகம் தான்."
- "இவர்கள் பணம் வேண்டா என்று சொல்கிறார்களா? இல்லையே! கிடைத்தால் வைத்துக் காப்பாற்ற மாட்டார்களா? தெருவில் போட்டு விடுவார்களா? கிடைக்கவில்லையே!"
- "அதற்கு என்ன செய்வது?"
சிறிது நேரம் கழித்து அவரே பேச்செடுத்தார். "பெண்களைப் பணம் உள்ள இடமாகப் பார்த்துக் கொடுக்க முயற்சி செய்கிறவர்கள் என்றும், குணம் கல்வி முதலியவைகளைப் பெற்றோர்கள் பார்ப்பதில்லை என்றும் நீ அன்று ஒருநாள் சொன்னாயே. இப்போது அதன் காரணம் தெரிகிறதா? தங்கள் வயிற்றில் பிறந்த பெண்கள் இப்படி ஆகக்கூடாது என்று தான் பெற்றோர்கள் பணம் உள்ள இடமாகப் பார்க்கிறார்கள்," என்றார்.
அப்பா பழைய கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டே பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். பேசாமல் நின்று, அரசமரத்தின் கிளைகளையும், அரசமரத்தின் இடையே முளைத்தெழுந்த வேப்ப மரத்தினையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே ஆலமரத்தின் கிளை ஒன்று குளத்தின் பக்கமாக வளைந்து நீரைத் தொடும் அளவிற்கு வளைந்து அழகாக விளங்குவதைக் கண்டேன். நீந்தத் தெரியாத எனக்கு அப்போது நீந்திப் போய் அந்தக் கிளையில் உட்கார்ந்து நீரில் ஆடவேண்டும் என்ற ஆசை தோன்றியது. உடனே அது வீண் கனவு என்ற எண்ணமும் தோன்றியது. இப்படி நான் அடிக்கடி நடக்க முடியாதவற்றை எண்ணி வீண் கனவு காண்பது வழக்கமாகிவிட்டது. குளத்தின் நடுவே நீரைத் தொடுமாறு வளைந்த அந்தக் கிளையை ஒரு நாளும் அணுக முடியாதவாறு போலவே, அன்பாக இசைந்து வாழ இடம் தரும் காதல் வாழ்வும் எனக்கு வாய்க்காதோ என்று என் நெஞ்சம் திடுக்கிட்டது. ஈயம் பூசும் கூலிக்காரனுடைய மனைவியான அந்தப் பெண் நினைத்தால், உடனே குளத்தில் திடுமெனப் பாய்ந்து அந்தக் கிளையில் உட்கார்ந்து அசைந்து ஆட முடியும். ஆனால் என்னால் முடியாது. வாழ்க்கை இப்படி அமைந்திருக்கிறது. எத்தனையோ ஏழைப் பெண்களுக்குப் - படிப்பு அற்ற பெண்களுக்கு - எட்டும் காதல் வாழ்க்கை எனக்கு எட்டாதோ என என் நெஞ்சம் அப்போது வருந்தியது.
மரங்கொத்திப் பறவைகள் இரண்டு அந்தக் கிளையை நோக்கிப் பறந்து வந்து உட்கார்ந்தன. அங்கே அரசமரக்கிளையில் இருந்த ஒரு மீன்கொத்திப் பறவை குளத்திற்கு மேலே பறக்கத் தொடங்கியது. அரசமரத்தை விட்டுச் சரேலென இறங்கி இரண்டு அணில்கள் எங்கள் பக்கமாக வந்து, ஆலமரத்தை நோக்கி ஓடிப்போய், அதன் வேர்களில் ஆடிக் கொண்டிருந்தன. ஆலமரத்தின் பெரிய வேர்களில் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு நாய், ஏதோ கனவு கண்டு விழித்து எழுவதுபோல் எழுந்து உடம்பை நெறித்துத் திமிர்விட்டு நின்றது. இத்தனை காட்சிகளையும் கண்டு நின்றபோதிலும், என் மனத்தில் அந்த நீரை நெருங்கி வளைந்த கிளையினால் எழுந்த எண்ணம் நீங்கவில்லை.
அந்தத் தாழ்ந்த கிளை மட்டும் என் உள்ளத்தில் நின்றிருந்தால் கவலை இல்லை; பொதுவான காதல் வாழ்வு பற்றிய எண்ணம் இருந்தாலும் கவலை இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் என் உள்ளத்தைக் கவர்ந்த அந்த இளைஞரின் உருவமும் அவருடைய ஆசைப் பார்வையும் என் மனக்கண்ணின் முன் தோன்றிவிட்டன.
அன்று மாலையில் சென்னைக்குச் செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து நானும் அப்பாவும் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, காலையில் சாவடியில் கண்ட அந்தக் குடும்பத்தைக் கண்டேன். காலையில் இருந்த குடும்ப நிலை வேறு; மாலையில் கண்ட நிலை வேறு; காலையில் குடும்பச் சாமான்களுக்கு இடையே அவர்கள் இருந்தார்கள். இப்போது குடும்பச் சாமான்கள் அவர்களின் தலைமேல் இருக்க, அவர்கள் நகரும் வீடுபோல் வந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் பெரிய கூடை நிறையச் சாமான்களைத் தலையில் வைத்துக் கொண்டு சின்ன குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டு, அணைந்த கையில் கைவிளக்கு ஒன்றைப் பற்றிக்கொண்டு நடந்து வந்தாள். அவளுக்குப் பின் அவளுடைய கணவன் ஈயம் பூசும் கருவிகளையும் தூண்டில்களையும் தலையில் கட்டிவைத்துக் கொண்டு ஒரு கையில் ஒரு மூட்டையும் பாயும் எடுத்து வந்தான். பெரிய பெண் - ஐந்து வயதுக்கும் குறைந்த பெண் - தலையில் ஒரு சின்னக் கூடை எடுத்துவர, அதற்கு அடுத்த பெண் இரண்டு கையிலும் இரண்டு சட்டி எடுத்து வந்தாள். அதற்கு அடுத்த சிறுபையன், அழுதுகொண்டே அவர்களின் பின் ஓர் அகப்பையும் தகரக்குவளையும் எடுத்து வந்தான். எங்களைக் கடந்து அவர்கள் போவதை இரக்கத்தோடு பார்த்துக் கொண்டே நின்றேன். அவர்கள் போன வழியில் ஒரு சேவல் எதையோ கொத்தியபடியே பெருமிதத்தோடு ஒரு வகை ஒலி செய்தது. பெட்டைக் கோழி ஒன்று உடனே அங்கு ஓடிவர, கிக் கிக் என்று ஒலி செய்துவிட்டுச் சேவல் தன் தலையைத் தூக்கிப் பெருமிதத்தோடு பார்த்தது. பெட்டைக் கோழி அந்த இடத்தில் குத்தி ஒரு பெரிய பூரானைத் தன் அலகால் எடுத்தது. அந்தப் பூரான் குற்றுயிராய்த் துடித்து விழுந்து ஓடத் தொடங்கியது. கோழி மறுபடியும் அதைக் குத்தி எடுத்தது. சேவல் எதையோ தியாகம் செய்து மகிழ்வது போல், தலையை நிமிர்ந்து நின்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இன்ப வாழ்வைக் குலைப்பது போல், அந்த வழியே அழகிய கார் ஒன்று ஊதல் ஒலியுடன் விரைந்து வந்தது. சேவலும் பெட்டையும் சிதறி ஓடின. காரில் இளநங்கை ஒருத்தி முறுவலுடன் கண்வலை வீச, அவள் பக்கத்தில் இருந்த இளைஞன் அவளை அரைப் பார்வை பார்த்தவாறே காரை வேகமாக ஓட்டிச் சென்றான். கார் சென்ற பிறகு, அந்த ஏழைக்குடும்பம் சென்ற வழியைப் பார்த்தேன். மெல்லப் போய்க் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.
பஸ் வரும்வரையில் அந்தக் குடும்பத்து நினைவு என்னை விட்டு நீங்கவில்லை. அவள் என்னைவிட ஏழெட்டு வயது சின்னவள்; அதற்குள் நான்கு குழந்தைக்குத் தாயாகிவிட்டாள். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை. தன் உள்ளத்திற்கு இசைந்த ஒருவன் தனக்காக வாழ்ந்து தன் இன்ப துன்பங்களில் உளமாரக் கலந்து கொள்ளும்படியான வாழ்க்கை பெற்றுவிட்டிருந்தாள். அதில்தான் எனக்குத் துயரம் தரும் காரணம் இருந்தது. அந்த எண்ணத்தைப் பொறாமை என்றும் சொல்லலாம். ஆனால், பொறாமையாக இருந்தால், அவள் கெட்டுப் போக வேண்டும் என்ற நோக்கமோ, அவளுக்கு அந்த வாழ்வு வந்திருக்கக் கூடாது என்ற எண்ணமோ இருக்க வேண்டும் அல்லவா? நான் அவளைப் பற்றி அப்படிக் கெடுதியாக ஒன்றும் எண்ணவில்லை. ஆகையால் பொறாமை அல்ல. அவளைப் போன்ற வாழ்வு எனக்கு வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் மட்டுமே என் மனத்தில் இருந்தது. என்னைவிட வயதில் சிறியவள். அறிவில் குறைந்தவள், அழகிலும் குறைந்தவள். ஒருவனுடைய அன்பைப் பெற்று, ஒரு குடும்பத்தின் தலைவியாக, தாயாக வாழும்போது, எனக்கு அப்படிப்பட்ட வாழ்வு வாய்க்கக்கூடாதா என்ற ஏக்கம் இருந்தது.
அவளுக்குக் கிட்டியது எனக்குக் கிட்டவில்லை. காரணம் என்ன என்று எண்ணினேன். செல்வம் சில பெண்களுக்கு நல்ல வாழ்வுக்குத் தடையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்குச் செல்வம் தடை அல்ல. என் குடும்பம் வரவும் செலவும் சரிகட்டிப் போகும் நடுத்தரக் குடும்பம். வறுமை என்றும் சொல்ல முடியாது. அளவான வருவாய் உடையவர் என் தந்தை. என் தாயும் செல்வக் குடும்பத்துப் பெண் அல்ல. சிறிது வறுமையும் கண்டவள் அவள். எனக்கோ வறுமையும் தெரியாது; செல்வமும் தெரியாது. ஆகையால் அந்த ஏழைப் பெண்ணைப் போன்ற வாழ்க்கை எனக்கு வாய்ப்பதற்கு தடையாக இருந்தது செல்வம் அல்ல, பி.ஏ. என்ற இரண்டு எழுத்துத்தான் எனக்குத் தடை என்று சொல்லலாம். நான் படித்த படிப்பு, நல்ல பதவியிலும் வருவாயிலும் உள்ள குடும்பத்து இளைஞர்களை மட்டுமே தேடும் நிலைமையை உண்டாக்கிவிட்டது. அப்படிப்பட்ட குடும்பங்கள் நூற்றுக்கு ஒன்று இரண்டு தானே? அந்தக் குடும்பங்களையே நாடினார் என் தகப்பனார். அந்தக் குடும்பத்தார்களோ, ஒரு படித்த பெண் மட்டும் வீட்டுக்கு வந்தால் போதும் என்று எண்ணவில்லை; அவளுடன் ஐம்பதினாயிரம் பெறும் நகையும் இருபதினாயிரம் முப்பதினாயிரம் பணமும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள், அவ்வளவு தொகைக்கு என் தந்தை என்ன செய்வார்? என்னைப் பி.ஏ. படிக்க வைத்ததே அவருக்குப் பெருஞ்செலவாக முடிந்தது. அந்தச் செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருந்தால், ஐயாயிரம் ஆறாயிரம் சேர்த்துவைத்திருக்கக்கூடும். செலவாகிவிட்டபின், படித்த பெண்ணையும் கொடுத்து, பணத்தையும் வாரிக் கொடுக்க அவரால் முடியவில்லை. ஆகையால் எனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று அவர் செய்த முயற்சி எல்லாம் பெருந்தோல்வியாக முடிந்தது.
படிப்பு, அறிவை வளர்ப்பது. தம் வயிற்றில் பிறந்த பெண்ணைப் படிக்க வைக்காமல் அறிவில்லாதவளாக வைத்திருக்கப் பெற்றோருக்கு மனம் வருமா? படிப்பின் அருமை அறிந்த என் தந்தையால் அவ்வாறு செய்ய முடியவில்லை. தாய் மட்டும் என் கல்லூரிப் படிப்புக்குத் தடையாகவே இருந்தாள். வேண்டா என்று தடுத்தாள். "நீ ஒரு முட்டாள்; படிப்பு இல்லாதவள்; படிப்பின் அருமை தெரியாதவள்," என்று சொல்லிக் கடிந்து கூறி அவர் அம்மாவின் வாயை அடக்கினார். ஆனால், அம்மா அவரைச் சும்மா விட்டிருக்கமாட்டாள். அது அவளுடைய வழக்கம் அல்ல. "படித்த பெண்கள் நன்றாக வாழ்கிறார்களா?" என்று வேறொரு நாள் அவள் இவரை நோக்கிக் கேட்டுவிட்டாள். நான் இல்லாதபோது இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்டு அவரைக் கலக்கினாளோ, தெரியாது. எப்படியோ, அப்பாவின் முயற்சியும் என் ஆர்வமும் நிறைவேறி விட்டன. படிப்பைப் பொறுத்த வரையில் தான் நிறைவேறின. அதற்கு அப்பால், அம்மா எண்ணிய குறை நெடுங்காலம் குறையாகவே நின்றது.
அந்தக் குளத்தின் கரையில் ஈயம் பூசுவோரின் குடும்ப வாழ்க்கையைக் கண்டபோதுதான், அந்தக் குறை எனக்குப் பளிச்சென்று விளங்கியது. அந்தக் குடும்பத்தில் அப்படி ஒன்றும் பெருமைப்படத் தகுந்தது இல்லை. எலிக்குஞ்சுகள் போன்ற குழந்தைகள், கந்தலுடைகள், கரிபடிந்த சட்டி பானைகள், ஓட்டை உடைச்சலான தட்டு முட்டுச் சாமான்கள், அழுக்கேறிய பாயும் தலையணையும் - இவற்றைக் கண்டபிறகு யார்தான் பெருமையாக எண்ண முடியும்? ஆனால், அந்த ஏழைப் பெண் ஒருவனைத் துணையாக நம்பினாள். அந்த நம்பிக்கை பழுதாகவில்லை. அவன் அவளுக்காக ஊர் ஊராகச் சுற்றி வாழ்க்கை நடத்துகிறான்.
நான் யாரை நம்புவது? என் அப்பா அம்மாவுக்குப் பிறகு எனக்காக வாழ வேண்டும் என்று அன்பு காட்டுபவர் யார்? திருமணம் வேண்டா, தனி வாழ்க்கையே நடத்தலாம் என்று அடிக்கடி மனம் துணிந்து எண்ணிய காலமும் உண்டு. அந்தத் துணிவு எப்படியோ காற்றில் பறந்துவிட்டது. அன்பு அறம் இயற்கை என்று என்னென்னவோ எண்ணங்கள் எழுந்து எழுந்து, ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் வாழ்க்கை கிடைத்தால் நல்லதுதான், கிடைத்தால் நழுவவிடக்கூடாது என்று என் மனம் நாளடைவில் மாறிவிட்டது. இந்த மனமாறுதல்தான் அந்த ஏழைப் பெண்ணைப் பார்த்ததும் ஏங்கும்படியாகச் செய்துவிட்டது.
எனக்கும் ஒரு நல்ல வாய்ப்புக் கிடைப்பதாக நெருங்கியது. நான் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருளாக இருந்தேன். ஆனால் அவன் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பலராமன் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது என் உள்ளம் கவர்ந்தான். எனக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்வதாக உறுதி கூறினான். அவனை நான் ஒன்றும் உறுதிமொழி கேட்கவில்லை. ஒன்றும் கேட்டு அறியாமலே அவனை நம்பிவிட்டது என் அன்பு மனம். அவன் ஒருவகை உறுதிமொழியும் கூறாமலே இருந்திருந்தாலும், அவனை நான் நம்பிவிட்டிருப்பேன். அவனிடம் என் நெஞ்சம் அவ்வளவு ஈடுபட்டுவிட்டது. அவன் உள்ளத்தில் ஒன்று மறைத்துவைத்து, உதட்டளவில் உறுதிமொழி கூறியதாகக் குற்றம் கூறமுடியாது. உண்மையாகவே அவன் என்மேல் அன்பு கொண்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுடைய தோற்றத்தில் இருந்த அவ்வளவு கவர்ச்சி அவனுடைய சொல்லிலும் இருந்தது. பொய்யான சொற்களாக இருந்தால், அத்தகைய கவர்ச்சி இருக்க முடியாது. உளமார அவன் அன்பு செலுத்தியதனால் தான், அந்தச் சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. என்னுடைய வாட்டம், அவனுடைய வாட்டமாக இருந்தது. என்னுடைய மகிழ்ச்சி அவனுடைய மகிழ்ச்சியாக இருந்தது. என் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு குறிப்பும், அவனுடைய முகத்தில் சென்று உடனே பதியும் அளவிற்கு, அவனுடைய நெஞ்சம் என்னிடம் இருந்தது. அதனால் தான் என் மனத்தை அவனுக்காகப் பறிகொடுத்தேன். இன்னொரு வகையிலும் அவனுக்கும் எனக்கும் ஒற்றுமை இருந்தது. நான் என் பெற்றோர்க்குக் கட்டுப்பட்டு நடந்தது போலவே, அவனும் தன் பெற்றோர்க்குக் கட்டுப்பட்டு நடந்தான். ஆனால், என் பெற்றோர் எனக்குக் கொடுத்த அவ்வளவு உரிமை, அவனுக்கு அவனுடைய பெற்றோர் கொடுக்கவில்லைபோல் தெரிகிறது.
நான் செய்ததும் தவறுதான். அவனை மட்டும் நன்றாக அறிந்து கொண்டேன். அவனுடைய ஊர், உறவு, குடும்பம், பெற்றோர் இயல்பு முதலியவற்றை ஆராயாமலே அன்பை வளர்த்தேன். ஒரு செடியை நன்றாக அறிவது என்றால், அதன் கிளைகளையும் கொம்புகளையும் மட்டும் அறிந்தால் போதுமா? இந்த அறிவு எனக்கு அந்தக் காலத்திலும் இல்லை. ஒரு செடியின் வாழ்வு, அது நிற்கும் மண்ணையும், சுற்றுப்புறத்தையும், அங்குக் காயும் வெயிலையும், வீசும் காற்றையும், பெய்யும் மழையையும், அங்குத் திரியும் ஆடு மாடுகளையும், வாழும் மக்களையும் பொறுத்து இருக்கிறது. ஓர் இளைஞனுடைய வாழ்வாக இருந்தாலும் இளம் பெண்ணின் வாழ்வாக இருந்தாலும், உள்ளத்தில் காதல் தோன்றியவுடன், எல்லாம் நிறைவேறி விட்டாற்போல் இளமை எண்ணிவிடுகிறது. இது இலக்கியத்தில் வரும் சில காதல் பகுதிகளை மட்டும் படித்துப் படித்து நம்பிவிடும் மூடநம்பிக்கை என்று தான் சொல்லவேண்டும். இலக்கியத்தையும் நன்றாக ஆராய்ந்தால் காதலர்க்கு வரும் இடர்ப்பாடுகள் தெளிவாக விளங்கும். இளைஞர் எவரும் எக்காலத்திலும் தம் உள்ளப் போக்கின்படி முழு உரிமையுடன் வாழ இந்த உலகம் இடம் தந்ததில்லை என்பது இலக்கியத்திலும் விளங்குகிறது. ஆனால், இளைஞர் மனம் அந்தப் பகுதிகளை மறந்துவிடுகிறது. எந்த நூலைப் படித்தாலும் மனம் அப்படித்தான் செய்கிறது. தனக்கு வேண்டிய கருத்துகளை - உடன்பாடான கருத்துகளை மட்டும் - மனம் உடனே எடுத்துக் கொள்கிறது; விரும்பாத கருத்துகளை விரைவில் மறந்துவிடுகிறது. என் மனமும் நூல்களை அப்படிப் படித்துப் பழகிய மனம்தான். அதனால் பலராமனைச் சுதந்தரமான இளைஞன் என்று கருதி, என் காதல் நிறைவேறிவிடும் என்று நம்பினேன். நான் படித்த ரோமியோ ஜூலியட் காதலின் முடிவையும், லைலா மஜ்னு காதலின் அவலத்தையும் என் மனம் எண்ணவில்லை. "செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே" முதலான பாட்டுகளின் உணர்ச்சியில் மட்டுமே மனம் தோய்ந்துவிட்டது. ஆகவே, இனி எங்கள் வாழ்க்கையை எவரும் பிரிக்க முடியாது என்று எண்ணிவிட்டேன்.
பி.ஏ. தேர்வு முடிந்து தன் ஊர்க்குச் சென்றபோதும் அவன் என்னைத் தனியே கண்டு உறுதிமொழி கூறிவிட்டுச் சென்றான். அப்போதும் என் கண்களின் கலக்கத்தைக் கண்டதும், அவன் கண்கள் நீர் சொரிந்தன. அவனுடைய குரலிலும் துயரத்தின் சாயல் இருந்தது. இவ்வளவு அன்பு மிகுந்தவன் கைவிடுவான் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை. இரண்டு திங்கள் கழித்து, தேர்வின் முடிவுகள் வெளிவந்த பிறகு, அவன் எழுதிய மகிழ்ச்சிக் கடிதத்திலும் இந்த உறுதியைத் தெரியப்படுத்தியிருந்தான். தன் பெற்றோரிடம் இன்னும் இதைப் பற்றிப் பேசவில்லை என்று எழுதியிருந்தான். விரைவில் தன் கருத்தைத் தெரிவித்து வேண்டிய ஏற்பாடு செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
அதற்குப் பிறகுதான் ஏமாற்றம் மெல்ல மெல்லத் தலையெடுத்தது. நான் வழக்கம் போல் வாரம் ஒருமுறை கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இரண்டு வாரம் கழித்தும் அவனிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நான்கு வாரங்கள் ஆயின; ஐந்து வாரங்கள் ஆயின. எங்கேனும் வெளியூர்க்குச் சென்றானோ, என் கடிதங்கள் அவனுக்குச் சேரவில்லையோ, சேராவிட்டலும் அவனாவது கடிதம் எழுதலாமே, அவன் ஒருவேளை எழுதியிருந்தும் அந்தக் கடிதங்களை அப்பா என்னிடம் சேர்க்கவில்லையோ, அப்பா ஒருகாலும் அப்படிச் செய்யமாட்டாரே என்று நாள் தவறாமல் பலவாறு எண்ணி எண்ணிக் கவலைப்படத் தொடங்கினேன். என் கடமைகளில் ஊக்கமும் குறைந்தது; மனச்சோர்வால் உடல் நலமும் குன்றிவந்தது.
அப்போதும் அவன் மேல் எனக்கு இருந்த அன்பும் நம்பிக்கையும் குறையவில்லை. பெற்றோர் தடை செய்திருக்கலாம், அவர்களோடு போராடிக் கொண்டு வருந்தும் நிலையில் மனம் சோர்வுற்றிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருநாள் வேறொரு வகையான எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தால் என் மனத்தில் விளைந்த திடுக்கிடும் துயரமும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. நான்கைந்து வாரமாக ஏதேனும் காய்ச்சல் கண்டு படுக்கையாய்ப் படுத்துவிட்டாரோ, நினைவு இழந்து நோயாய்க் கிடந்தால் எப்படி எனக்கு எழுத முடியும், நோய் அவரை என்ன செய்யுமோ? நிமோனியா அல்லது டைபாய்ட் போன்ற காய்ச்சல்கள் பொல்லாதவைகளாய் உயிருக்கே இடையூறாக முடிவதும் உண்டே என்று எண்ணினேன். எண்ணிய நான் தான் நோய்வாய்ப்பட்டேன்; படுக்கையில் படுத்தேன். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியாலும் தாங்க முடியாத துயரத்தாலும், எனக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. என் நிலைமை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெருந்துன்பமாய் முடிந்தது. அடிக்கடி இரவில் வாய் பிதற்றியிருக்கிறேன். "உடம்பு எப்படி இருக்கிறது? இன்னும் கொஞ்சம் கஞ்சி சாப்பிடு. எழுந்து உட்காராதே, கவலைப்படாதே, ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய்," என்றெல்லாம் பலவாறு நான் வாய் பிதற்றினேனாம். பெற்றோர் இவற்றை எல்லாம் கேட்டு ஒன்றும் அறியாமல் திகைத்திருக்கிறார்கள். என் உடம்பு சிறிது தேறிய பிறகு என்னிடம் சொல்லிக் கேட்டார்கள். என் வாய்பிதற்றல்களுக்குக் காரணமான கனவுகள் கொஞ்சமும் என் நினைவில் வரவில்லை. எனக்கோ காரணம் தெரியாது என்றும், கனவு ஒன்றும் காணவில்லை என்றும் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்.
என் உடல் நோய் ஒருவகையாய்த் தீர்ந்தது, மனநோய் தீரவில்லை. படுக்கையை விட்டு எழுந்து நடமாடத் தொடங்கினேன். பெற்றோர்கள் எனக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்ற முயற்சியில் முனைந்து ஈடுபட்டார்கள். தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்து வலியச் சொல்லிவிட்டு வந்தார்கள். யாராவது இளைஞன் பட்டம் பெற்றவனாய் ஐம்பது அறுபது ரூபாய் வருவாய் உள்ளவனாய் இருந்தாலும் போதும் என்று முயன்றார்கள். "உங்களுக்கு ஏன் இவ்வளவு முயற்சி? சும்மா இருங்கள். என் திருமணம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்," என்று இடையிடையே சொல்லித் தடுத்துவந்தேன். என் தடை பயன் தரவில்லை. அவர்கள் விடாமல் முயற்சி செய்தவாறே இருந்தார்கள். அவர்களின் முயற்சியும் பயன் தரவில்லை. காதலுள்ளம் எனக்கு மேன்மேலும் சோர்வை வளர்த்து வந்தது. பணவுலகம் என் பெற்றோர்க்கும் சோர்வை வளர்த்து வந்தது.
இப்படி என் குடும்பமே சோர்வின் வடிவமாக இருந்த நாள்களில் ஒரு நாள் இரவில் யான் கண்ட கனவு என் உள்ளம் உடையுமாறு செய்துவிட்டது. அந்தக் கனவில் பலராமனும் நானும் ஒரு குளத்தில் சாய்ந்துள்ள பெரிய கிளையில் உட்கார்ந்திருந்தோம். ஊஞ்சல் பலகைமேல் இருப்பதுபோல் இருந்தோம். கைகோத்து உட்கார்ந்திருந்தோம். அங்கே எப்படிச் சென்றோம் என்று ஒன்றும் விளங்கவில்லை. ஒருவர் ஒருவர் மேல் அன்பான பார்வை பார்த்து உயிர் உருக இருந்த போது, திடீரென்று அந்த மரக்கிளை முறிந்து ஆழமான நீரில் விழுந்தது. அவன் எப்படியோ நீந்திக் கரையருகே போய்க்கொண்டிருந்தான். நான் தத்தளித்தேன். அவ்வளவுதான். கனவு உடனே கலைந்துவிட்டது. விழித்தெழுந்து படுக்கையைத் தடவிப் பார்த்தேன். விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, இருள் சூழ்ந்து கவிந்து கிடந்தது. வானத்தில் நிலவும் இல்லை; விண்மீனும் ஒன்றும் இல்லை, கனவில் உற்ற திடுக்கீட்டால் ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பு நெடுநேரம் நிற்கவில்லை. என் காதல் வாழ்க்கை இப்படிக் கனவிலும் துன்பமே தரக் கூடியதாக முடிந்துவிட்டதே என்று மிகமிக வருந்தினேன், படுக்கையில் புரண்டபடி விம்மினேன்; என் நெஞ்சில் அச்சமும் கவலையும் வளர்ந்தன. பலராமன் எப்படியோ கரையேறுவது, நான் ஆழ்ந்த நீரில் தத்தளிப்பது - இந்த இரண்டு காட்சிகளும் கனவாக இருந்தது போய், நனவின் உண்மையை உணர்த்துவன போல் ஆயின. அவன் எங்கோ எப்படியோ வாழ்க்கையை நெருங்குதல், யான் இருந்த நிலையிலேயே முறிந்து தத்தளித்தல் - இப்படித்தான் வாழ்க்கை முடிவதோ என்று எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.
பல நாள், பல வாரம், பல திங்கள் இந்த எண்ணமும் கவலையும் மாறவில்லை. என் சோர்வையும் கவலையையும் எப்படியோ உணர்ந்த அப்பா, அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றார். காலம் படிப்படியே என் கவலையைக் குறைத்து வந்தது.
அந்த ஊரில் நடந்த தோழியின் திருமணத்திற்குச் சென்று, அந்தக் குளத்தின் கரையில் நீரில் தாழ்ந்திருந்த கிளையைக் கண்டதும், கனவின் அதிர்ச்சி மீண்டும் தோன்றுவதுபோல் இருந்தது. அந்த ஏழைக் குடும்பத் தலைவியை - ஈயம் பூசுவோனுடைய மனைவியைக் - கண்டு அவளுடைய வாழ்க்கையை உணர்ந்த பிறகு பொதுவான ஒருவகை ஏக்கம் தான் மனத்தில் நீங்காமல் நின்றது.