நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 11

11

ஒரு நாளும் தன்னை அதிர்ந்துகூட பேசாத தந்தை, இப்போது அதற்கு மானநஷ்ட ஈடு கேட்பது போல், ‘அடித்து’ப் பேச முற்படுவதைப் பார்த்த தமிழரசி, முதலில் துக்கித்தும், விக்கித்தும் நின்றாள். பகவதியம்மாள் கணவனை பல வந்தமாகப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் அருணசலம் அவள் பிடியில் இருந்து அத்துமீறி மகளை நோக்கிப் பாய்ந்தார். அவர் கைகள், அவள் கண்களை குத்துமளவிற்கு நீண்டன. அவரது வலது கை, அவளின் இடது காதுப் பக்கமும், இடது கரம், வலது கண்ணின் பக்கமும் நீண்டன. தமிழரசி, அனிச்சையாகக் கூட கண்களைச் சொருகி, முகத்தை மூடி, தலையைக் கேடய மாக்காமல் அப்படியே நின்றாள். வீரன் என்பவனுக்கு இலக்கணம், அவனை நோக்கி போர்க்களத்தில் எதிரிகள் ஈட்டிகளை எறியும்போதும், அவன் கண்கள் இமைக்காமல் இருக்கவேண்டும் என்ற பொருள் சுமந்த புறநானூறு பாடல் ஒன்றைப் போதித்ததால் ஏற்பட்ட பாதிப்போ அல்லது நியாயத்தை விற்கப் புகுந்தால், அதற்குப் பதிலாக அநியாயங்களை வாங்கித் தான் ஆகவேண்டும் என்ற மனத்தெளிவோ, என்னவோ தெரியவில்லை, தமிழரசி பெருமிதத்துடனேயே தன்னையே பார்த்துக் கொண்டு நின்றாள். தானே அங்கே நில்லாததுபோல் பாவித்தபடி நின்றாள்.

அப்பாக்காரர், மனைவியின் தலையில் இரண்டடி அடித்துவிட்டு, “என்னை விடுடி! அவளை இங்கேயே குழி வெட்டிப் புதைக்கப் போறேன்” என்று கூச்சலிட்டபடியே துள்ளினார். உடனே பகவதியம்மா “நம்ம எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் ஒம்ம தங்கத் தம்பி மவன் பெரிய குழியாய் வெட்டிட்டானே. அவள விடுங்க. எம்மா தமிழரசி, நீயுந்தான் அந்தப் பக்கமாய் போயேன். ஏன் திமிர் பிடிச்சு நிக்கிறே?” என்று தன் பேச்சை கணவனுக்கும், மகளுக்கும் பாகப் பிரிவினை செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் தமிழரசி, நகரவும் இல்லை. அருணாசலம் அசையாமலும் இல்லை. மகள் அடிப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் “அய்யோ... கடவுளே... கடவுளே” என்று வெளியாருக்குக் கேட்க முடியாத அளவிற்கு, கேட்கக்கூடாத அளவிற்கு, பகவதியம்மா ஒப்பாரி போட்டாள். பிறகு ஒப்பாரியை நிறுத்தி, ‘தம்’ பிடித்து கணவனைக் குண்டுக் கட்டாகத் துாக்கி, வராண்டாவிற்குக் கொண்டு வந்தாள். அப்போதும் மனைவியை கீழே தள்ளிவிட்டு, பாயத் தயாரான கணவனைப் பார்த்து “நம்ம அப்பா நம்மை அடிக்க மாட்டார் என்கிற தைரியத்துல அவள் நிற்கிறாள். அவளைப்போய் அடிக்கப் போறீராக்கும்” என்று பிடியை விடாமலே, பகவதியம்மா பேசிய போது, அருணசலம் மகளைப் பார்த்தார். அது கலக்கத்தைக் காட்டாமல் கல்லைக் காட்டியது. உடனே அப்பாக்காரர் “செறுக்கி மவளுக்கு என்னை மாதிரியே குணம்” என்று தனக்குள்ளேயே பேசியபடி கைகால்களை ஆட்டாமல் நின்றார். அப்படியும் பிடியை விடாத “பிடி”யை (அதாவது பெண் யானையை)ப் பார்த்து, என்னை விடுடி. நான் எவளையும் அடிக்கப் போகல. எங்கேயாவது ஒடிப் போறேன். தோ பாருடி, நாம் பெத்த பிள்ள எப்படி கலங்கி இருக்கான்னு” என்றார்.

வராண்டாவில் நாற்காலியில் படுத்துக் கிடப்பது போல் சுருண்டு கிடந்தான் ராஜதுரை. கண்கள் மூடிக் கிடந்தன. கைகள் சோர்ந்து கிடந்தன. தலை தொங்கிக் கிடந்தது. மகனைப் பார்க்கப் பார்க்க பகவதியம்மாவின் பெற்ற வயிறு பற்றியது. “அடி ராட்சஸி! ஒண்ணனோட கோலத்தை இங்கே வந்து பாருடி ஒன்னால அவன் இடி விழுந்து கிடக்கதைப் பாருடி...” என்று கூவினாள். ராஜதுரை, கண்களைத் திறக்காமலே “நீ சும்மா இரும்மா. நம்ம அண்ணனும், எச்சிக் கஞ்சி குடிக்கிற வினைதீர்த்தான் பயலும் ஒரே வீட்ல சம்பந்தம் எடுத்து, ஒரே இலையில சாப்பிட முடியுமான்னு, இவ்வளவு படிச்சும் அவளுக்குத் தெரியல. எல்லாம் என் தலைவிதி. விட்டுத்தள்ளு” என்றான்.

உள்ளே நின்ற தமிழரசியால் பொறுக்க முடியவில்லை. மடமடவென்று வெளியே வந்து அண்ணன் முன்னால் நின்றாள். அவன் படுத்திருந்த கோலத்தைப் பார்த்ததும் துடித்துப் போனாள். கீழே குனிந்து, உட்கார்ந்து, ராஜ துரையின் முகத்தை நிமிர்த்தி, “என்னண்ணா நீ! அப்பாம்மாதான் வயசான காலத்தை சேர்ந்தவங்க. நீயுமா? நம்ம தாத்தாவும், வினைதீர்த்தான் தாத்தாவும் ஒரே ஆளாய் இருந்தபோது, ஒன்னோட பாட்டியும், அவனோட பாட்டியும் ஒரே பெண்ணானபோது, நீ அவன் கூட ஒரே இலையில சாப்பிடுறதுல என்ன தப்பு? ராம பிரான் குரங்கு இனத்தைச் சேர்ந்த அனுமாளுேடேயே ஒரே இலையில் சாப்பிட்டவரு. நீ அப்படிப்பட்ட ராமசாமி கோவில் கணக்கை எழுதிக்கிட்டே, இப்படிப்பட்ட பேச்சை பேசுறே பாரு...” என்றாள். அவள் பேச்சில் ஆத்திரத்தை விட அன்பு அதிகமாய் இருந்ததால், ராஜதுரை, அதன் அர்த்தத்திற்குள் போகாமல், தங்கையின் கைக்குள்ளேயே தன் முகத்தை மறைத்துக் கொண்டான் அருணசலம். “ எப்டியாவது இந்த வீடு நாசமாய் போவட்டும் . போவட்டும் என்ன போவட்டும்? போயிட்டுது” என்று சொன்னபடியே, எங்கேயோ புறப்படப் போனார். அப்போது-

தாமோதரனின் சித்தப்பா மகன்-அன்று நிச்சய தாம்பூல வீட்டில், தாமோதரனின் கிசுகிசுவை காதில் வாங்கியபடியே, தமிழரசியை கிண்டல் செய்தானே, அதே இளைஞன் அங்கே தலைகுனிந்து வந்தான். முற்றத்தில் நின்றபடி தமிழரசியை கோபமாகவும், மற்றவர்களை அனுதாபமாகவும் பார்த்தான். சிறிது நேரம் வாயாடாது நின்றுவிட்டு, வந்த காரியத்தை தலையை நிமிர்த்தாமலே ஒப்புவித்தான்.

“எங்க பெரியப்பா மகன் முத்துலிங்கண்ணன் ஒரு விஷயத்தை சொல்லிட்டு வரச் சொன்னான். விஜயாவுக்கும், ராஜதுரை மச்சானுக்கும் நடந்த நிச்சய தாம்பூலம் வெறும் தாம்பூலமாய் போயிட்டு. இவ்வளவு நடந்த பிறகு...ஒங்க மகளே எதிரியான பிறகு... இந்தக் கல்யாணம் நடந்தால் ஊர்ல நாலு பேர் சிரிப்பாங்களாம்... அதனால நீங்க வேற இடத்துல பொண்ணு பார்த்துக்கலாமுன்னு முத்துலிங்கம் அண்ணன் ஒங்ககிட்ட என்ன சொல்லிடச் சொன்னான். இதுக்குத்தான் பொம்பிளைங்களை அதிகமாய் படிக்க வைக்கக்கூடாது என்கிறது. நான் வாறேன்.”

அந்த இளைஞன், எதோ பேசப்போன அருணுசலத்திற்கு காது கொடுக்காமலே, தமிழரசியை மீண்டும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போய் விட்டான். போகிறவனின் முதுகையே பார்த்துக்கொண்டு நின்ற குடும்பத்தினர், எதிர்பாராத அழுகை ஒலி கேட்டுத் திரும்பினர்கள். ராஜதுரை, “எய்யோ... எம்மோ... எப்டில்லாமோ நினைச்ச நான், இப்டில்லாம் நடக்குமுன்னு நினைக்கலியே. இனிமேல், நான் ஊர்ல எப்டி தலைகாட்டுறது? மருந்தை குடிச்சிட்டு சாகப் போறேன். இவ்வளவு நடந்த பிறகு, இனிமேல் இருக்க மாட்டேன். மாட்டவே மாட்டேன்” என்று சத்தம் போட்டுக் கத்தி, தன் தலைமுடியைப் பிய்த்துப்பிய்த்து ஆட்டினான். நாற்காலிச் சட்டத்தில் தலையை இரண்டு மூன்று தடவை முட்டிக் கொண்டான். பகவதியம்மா கைகளை நெறித்தபடியே பேச்சற்று நின்றாள். பிறகு அவளும் தன் மகனை மார்போடு சேர்த்து அணைத்த படியே அழுதாள். மகனே கண் கலங்கப் பார்த்த அருணாசலம், மகளை கண் கொதிக்கப் பார்த்துவிட்டு, உடன் பிறந்தே கொல்லும் நோய் மாதிரி ஆயிட்டியேழா ... சண்டாளி! இனிமேல் நான் அப்பனும் இல்ல, நீ மகளும் இல்ல! ஒரு நொடிகூட இந்த வீட்ல இருக்கப்படாது” என்றார்.

தமிழரசி அழுகின்ற அண்ணனையும், அழ வைக்கும் அப்பாவையும் ஒருசேரப் பார்த்தாள். குழந்தைக்குக் குழந்தையாய் அழுத தமையனைப் பார்த்ததும், அவள் தலை தானாகக் கவிழ்ந்தது. விஜயாவும், அண்ணனும், இலை மறைவு காய்மறைவாகப் பேசிக் கொண்டதாகக் கூட முத்துமாரிப்பாட்டி சொல்லியிருக்கிறாள். மனத்துள் நினைத்தவளை, மனத்துள் நினைத்துப் பார்க்கவோ நிறுத்திப் பார்க்கவோ முடியவில்லையானால் அதைவிட ஒருவனுக்கு என்ன கேடு வேண்டும். நான் ஒருத்தி பட்டது போதும். இவன் படக்கூடாது. துளிர்க்கவேண்டும். காதலித்தவளைக் கூட தங்கைக்கு சம்மதம் என்றால்தான் கைப்பிடிப்பேன் என்ற அண்ணாவாச்சே.

தமிழரசியின் மனத்துள் திடீரென்று ஒரு முடிவு. ஏற்பட்டது. எப்படியோ நடந்தது நடந்து போச்சு. அது நடக்க வேண்டிய நல்லதை ஏன் தடுக்க வேண்டும்? வினை தீர்த்தான்-பொன்மணி விவகாரம், ராஜதுரை- விஜயா திருமணத்தை ஏன் விகாரப் படுத்த வேண்டும்? பெண் வீட்டாருக்கு எதிரியாய்ப்போன நானே போனால், அவர்களுக்கு ஒரு வெற்றி மனப்பான்மையும் ஏற்படும். நிறுத்தப் பட்ட கல்யாணமும் நடைபெறலாம். நான் ஏன் இந்த விஷயத்தில் பெருந்தன்மையாக நடக்கக் கூடாது? ஆயிரம் நல்ல தன்மைகளில் முக்கிய தன்மை பெருந்தன்மைதானே!”

தமிழரசி எழுந்தாள். கலைந்த முடியை கொண்டையாக்கிக் கொண்டு நடக்கப் போனாள். உடனே மகனை விட்டு விட்டு, மகளை குறுக்காக வழிமறித்த அம்மாவிடம், “எங்கேயும் போகலம்மா. பெண்வீட்டுக்காரங்க கிட்டே நான் பேசிப் பார்க்கலாமுன்னு போறேன். மொதல்ல, அண்ணனை சமாதானப்படுத்து. நான் நல்ல செய்தியோடு வாறேன்” என்று நடந்தபடியே சொன்னாள்.

பாதப் பெருவிரல்கள் மட்டுமே கண்களில் படும்படி, விழிகளை வேறு பக்கம் செலுத்தாமல் கால்களை செலுத்திக் கொண்டிருந்த தமிழரசி, தாமோதரன் வீட்டுக்கு முன்னால் வந்த பிறகுதான் தலையை நிமிர்த்தினாள். அங்கே திட்டுத் திட்டாய் நின்று திட்டிக்கொண்டிருந்த ஆட்கள் அவளை அதிசயித்துப் பார்த்தார்கள். நம்ப முடியாத ஒன்றை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர்கள் போல், ஒருவருடன் ஒருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள். “இவளுக்கு நம்ம தாமோதரனைப் பார்க்காம இருக்க முடியாது” என்று ஒருவர் கிசுகிசுப்பாய் பேசுவதும், தமிழரசிக்குக் கேட்டது. எதையும் எவரையும் சட்டை செய்யாமல், அவள், தாமோதரன் வீட்டுக்குள் நுழைந்த போது-

‘அரங்கு’ வீட்டில், மார்வாடிப் பலகை ஒன்றின் மேல், ஏதோ ஒரு காகிதத்தில் எதையோ வேக வேகமாய் முத்துலிங்கம் எழுதிக் கொண்டிருந்தார். தாமோதரன் தன் சூட்கேஸிற்குள் ஆடைகளை அலங்கோலமாகத் திணித்துக் கொண்டிருந்தான். ‘தம்பி தம்பின்னு ஒன்னை தலையில் வச்சு குதிச்சேன். நீ என்னடான்னால் என் தலையையே குனிய வைக்கிறது மாதிரி பேசுறே! நீ அவளோட, காசியாபிள்ளை கிணத்துல விளையாடுனே; அவள் ஒன்கிட்ட விளையாடுனது போதாதுன்னு, பொன்மணிகிட்டேயும் விளையாடிட்டாள்...” என்று கத்திவிட்டு, மீண்டும் பேனாவை பயங்கரமாய் உதறியபடியே எழுதுவதைத் தொடர்ந்தார். அண்ணனுக்கு ஆறுதலாகவோ அல்லது அமுக்கலாகவோ பதிலளிக்கப் போன தாமோதரன், தமிழரசியைப் பார்த்து, அவளை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான். பிறகு அமைதியாக வாங்க... தமிழரசி... உட்காருங்க... எண்ணா... யார் வந்திருக்காங்க பாரு” என்றான்.

தமிழரசி நிற்க முடியாமல் நின்று, தாமோதரனை நேருக்கு நேராகப் பார்த்தாள். கொலையுண்ட பல பிணங்களைப் பார்த்துப் பழகிப் போன அவன் முகமோ, பிணக்களையுடன் இருந்தது. ‘இங்க’ போடுறாரே . இதுக்காகவா இங்க வந்தேன்? இதைவிட அவரே என் கன்னத்தில் நாலு அறை போட்டிருக்கலாம்...

முத்துலிங்கம், அவளை ஆவேசமாகப் பார்த்தார். சமையலறைக்குள் அடுப்பைக் குடைந்து கொண்டிருந்த அவர் மனேவி கனகம், அகப்பையுடன் வாசலில் வந்து நின்றாள். அங்கே அவளுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த விஜயா, இரண்டு வகையிலும் அண்ணியாகப் போற தாய் நினைத்தவளை, வில்லியாக நினைத்தோ அல்லது வெறுமையாக நினைத்தோ தொப்பென்று தரையில் உட்கார்ந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.

தமிழரசி, அங்கே நில்லாததுபோல் பாவனைகள். தாமோதரன் சூட்கேஸை பூட்டிக் கொண்டிருந்தான். மனத்தின் உணர்வுகளைப்போல் துணிகள் அலங்கோலமாய் வைக்கப்பட்டிருந்ததால், அவன் இதயத்தைப்போல் அந்தப் பெட்டியும் மூட மறுத்து வம்பு செய்தது. அவன் மீண்டும் சூட்கேஸைத் திறந்தான். முத்துலிங்கம் எழுதுவதை நிறுத்தவில்லை. தடுமாறிப் போன தமிழரசி தன்பாட்டுக்கு தரையையே பார்த்தபடி பேசினாள்:

“ஆயிரம் நடந்திருக்கலாம். அதுக்காக ஆயிரங்காலத்துப் பயிரான இந்தக் கல்யாணத்தை நிறுத்தக் கூடாது. கல்யாணத்துக்கு நான்தான் இடைஞ்சல்னா,இந்த ஊரை விட்டு, என் குடும்பத்தைவிட்டு, ஒரேயடியாய் விலகிப் போக தயாராய் இருக்கேன். எங்கண்ணனையும், ஒங்க தங்கையையும் விலக்கிடப்படாது. முத்துலிங்கம் அத்தான் கிட்டே சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்...!”

முத்துலிங்கம், காகிதத்தில் எழுத்துகள் தப்புத் தப்பாக வந்ததாலோ என்னவோ அதை கையால் கசக்கிக் கிழித்துவிட்டு வேறொரு காகிதத்தை எடுத்தார். பிறகு, தமிழரசியை கண்களால் எரித்தபடியே பதிலளித்தார்:

“ஒன்னைப்பற்றி எனக்குத் தெரியும், இன்னும் எங்களை எப்டில்லாம் அவமானப் படுத்தணுமுன்னு நினைக்கிறியோ? நீ இப்போ, அண்ணனுக்குப் பெண் கேட்டு வரல; ஒனக்கு மாப்பிள்ளே தேடி வந்திருக்கே. என் தங்கச்சியை கடத்துனது மாதிரி, இதோ இவனையும் கடத்த வந்திருக்கே. என்ன ஜெகசாலம் போட்டாலும் சரி, நீ செய்திருக்கிற அக்கிரமத்துக்கும், என் தங்கச்சியை கடத்துனதுக்கும்... ஒன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே. மானம் இருந்தால் இதுக்குமேல இங்கே நிற்க மாட்டே...”

தமிழரசி ஒடுங்கிப்போய் நின்றபோது, அடுப்படியில் இருந்து கனகம் கர்ஜித்தாள்:

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்”. ஆம்புளயப் பார்க்க ஆசப்பட்டு, வீடு தேடி வாரதை விட, தூக்குப் போட்டுச் சாகலாம். ஏய் விஜயா, நான் ஒன்னையாடி வைதேன்? நீ ஏண்டி அழுகிறே? ராஜதுரையை மறக்க முடியாட்டால், வேணுமுன்னால் இவள் கூடவே போய், அவன் கிட்ட சேர்ந்துக்கிறியா? துா... குடி கெடுப்பாள்! எந்த நேரத்துல மெட்ராஸ்ல இருந்து இந்த ஊருக்குள்ள காலடி வச்சாளோ, ஊரே ஆடிப் போச்சு!”

தமிழரசி சமையலறைப் பக்கம் திரும்பினாள். கனகம் எதையோ ஒன்றை சட்டியில் தாளித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பேச்சைக் கேட்கக் கேட்க மூளையோடு சேர்ந்து, உடம்பே குழம்பியதுபோல் நின்ற தமிழரசி, மீண்டும் சுயமரியாதைக்காரியானாள். தாமோதரனைப் பார்த்தாள். அவனே எதுவும் நடக்காதது போல் இன்னும் சூட்கேசோடு போராடிக் கொண்டிருந்தான்.

தமிழரசி தலை நிமிர்ந்தாள். தன்னளவில் தன் மானத்தையே கூலியாகக் கொடுத்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்ட திருப்தி. ஒரு பெண்ணின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு இரண்டாவது தடவையாக தவறியவன் ஆண் மகனே இல்லை. அப்புறம் அவன் எப்படிக் காதலனாக இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து விட்ட அதிருப்திகரமான திருப்தி-சுயமரியாதைக்கு வழி விட்டு, காதலை தேய்பிறையாக்கிய எண்ணக் கம்பீரம்...

தமிழரசி நடந்தாள். சமையலறைக்குள் இன்னும் சுவரில் தலைபட, கண்களில் நீர்பட, காதோரம் அதன் கறைபட, உடைந்த வளையல் துண்டு ஒன்றை கழுத்தில் குத்தியபடியே இருந்த விஜயாவைப் பார்த்தாள். அவளோ, அண்ணியை ஜாடையாகப் பார்த்துவிட்டு, தலைக்குமேல் கரங்களைக் கொண்டுபோய் தமிழரசியை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். தமிழு! இந்தக் கும்புடுக்கு ஒனக்கு அர்த்தம் தெரியுமா? எங்க அண்ணி கனகம் இந்தச் சாக்குல என்னை அவளோட குடிகாரன் தம்பிக்கு பலியாக்க நினைக்கிறாள். ராஜதுரை மச்சானை நினைச்ச இந்த மனசு, ஒனக்குப் புரியலியா? கலாவதியைக் காப்பாற்றுனது மாதிரி என்னையும் காப்பாற்று தமிழு...”

தமிழரசி, விஜயாவிடம் கண்களால் மன்னிப்புக் கேட்டபடியே, அந்த வீட்டைவிட்டு வெளியேறினள். கால்களால் நடக்க முடியவில்லை. கண்களால் பார்க்க முடியவில்லை. மனதால் நினைக்க முடியவில்லை. தாமோதரன் வீட்டின் சுற்று வட்டார ஆண்களும், பெண்களும் தன்னையே கண்களால் சல்லடை போடுவது தெரியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து, ஒரு ஆலமரத்தின் கிளையை, ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தமிழரசி, தன் காதுகளுக்குக் கேட்கும்படியே தானகவே பேசினாள்.

“இழக்கக் கூடாத எல்லாரையுமே நான் இழந்துட்டேன். நான் இழந்தால்கூட பரவாயில்ல. ராஜதுரை, விஜயாவை இழந்தான். கலாவதி, அண்ணனை இழந்தாள். என்னுேட பெற்றாேர், என்னை இழந்துட்டாங்க. இனிமேல் இந்த ஊரையே நான் இழக்கப்போறேன்... இந்த ஊருக்கு இனிமேல் திரும்ப மாட்டேன்... திரும்பக்கூடாது.”

தமிழரசி யந்திரமாய் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். இப்போ புறப்பட்டால்தான் சென்னை ரயிலைப் பிடிக்க முடியும். என்னைப் பொறுத்த அளவில் அது திரும்பி வராத ரயில்-என் காதலைமாதிரி.”

தலையே என்ஜின் ஆகி, உடம்பே ரயில் பெட்டிகளாய் ஆனதுபோல், தமிழரசி தலையை நீட்டி, உடம்பைச் சாய்த்து நடந்தாள்.

“அவளை தடம்புரள வைப்பதற்காக முத்துலிங்கம் இன்னெரு திக்கில் நடந்துகொண்டிருந்தார்.”