நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 17

17

த்து நாட்கள், மாடக்கண்ணுவைப் போல் கடந்த காலமாயின.

சினிமா தியேட்டர் ஒன்றிற்கு, ‘டூட்டியில்’ போயிருந்த நான்கைந்து போலீஸ்காரர்கள், அந்த நள்ளிரவில் கலாவதியைத் தூக்கிக் கொண்டு போன பேச்சிமுத்துலையும், வீரபத்திரனையும் வழிமறித்து, அவர்கள் பிடறியில் இரண்டு போடு போட்டார்கள், லத்திக்கம்புகள் உயர்ந்த போது, அவர்கள் நடந்தனத நடந்தபடி சொல்லிவிட்டார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாய் துடித்த கலாவதியைப் பார்த்த அந்த மனிதப் போலீசார், பேச்சிமுத்துவையும், வீரபத்திரனையும், லத்திக்கம்புகளால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள். ஆனால், அந்த சூட்டுக்கோல்காரர்களின் நல்லகாலம், கலாவதி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய கெட்ட காலத்தில் இருந்தாள். இல்லையானால், அப்போதைக்கு மனிதாபிமானத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த அந்த போலீசார், அங்கேயே, அந்த இருவரையும், கலாவதியை மாதிரி ஆக்கியிருப்பார்கள். ‘யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பதுபோல், அவர்கள் உயிர் தப்ப, கலாவதியே காரணமானாள்.

போலீசார், கலாவதியை அருகே இருந்த அரசாங்க மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்தார்கள். குற்றவாளிகளின் கைகளை சேர்த்துக்கட்டி, ‘ஏரியா’ போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். ‘ஏரியா’ போலீசார், பேச்சிமுத்துவையும், வீரபத்திரனையும், ஊருக்குள் கொண்டு வந்தபோது, தோட்டத்தில் இருந்து திரும்பிய ஒருவன் அகப்பட்டான். அவனையும் ‘கட்டிப்பிடித்த’ போலீசார், சூடுபோட்ட இடத்திற்கு, கூட்டத்தோடு கூட்டமாய் ஓடியபோது தான், முத்துலிங்கம் எதிர்ப்பட்டார்.

அவரைத் துரத்தினால், ஆசாமி தப்பித்து விட்டார். அப்புறம் அவரைக் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்களோ அல்லது அவர் ஒரு சப்- இன்ஸ்பெக்டரின் அண்ணன் என்ற எண்ணமோ, போலீசார், முத்துலிங்ககத்தை விட்டு விட்டு, அவர் தோட்டத்தை முற்றுகையிட்டார்கள். மாடக்கண்ணுவின் பிணத்தைத் துழாவி எடுத்தார்கள். ஊர் வழியாய் போனால் ரகளை நடக்கும் என்று நினைத்து, கலாவதி எந்த வழியாகத் தூக்கிக் கொண்டு போகப்பட்டாளோ அந்த வழியாக, அவள் அப்பாவையும் தூக்கிக் கொண்டுபோய், அரசாங்க மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காகச் சேர்த்தார்கள். பிறகு பிணத்தை ஒப்படைப்பதற்கு, தமிழரசியின் தந்தை அருணாசலத்தை அணுகினார்கள். அவர் முதலில் தயங்கினார். பிறகு ஊருக்கும், உறவுக்கும் பயந்து, பிணத்தை வாங்கி ‘நல்லடக்கம்’ செய்தார். அப்போது ஊரே அழுதது. குற்றவாளிகளை கண்டதுண்டமாய், வெட்டி, காக்காக்களுக்குப் போடவேண்டும் என்று போர்க்கீதம் எழுப்பியது.

என்றாலும் ஊராரின் ஆவேசம் சோடாபாட்டல் ஆவேசம் மாதிரிதான். அதாவது, சோடாவைத் திறந்தால் பெரிதாய் ஏதோ நடக்கப் போவதுபோல் ‘உஷ்’ என்ற சத்தம் வரும். அப்புறம் அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இதுபோல், மூன்று நாட்கள் கொதித்துப்போன ஊரார், படிப்படியாய் ஆறி, பனிக் கட்டியாய் மாறி தத்தம் வேலையை மட்டுமே கவனிக்க முற்பட்டார்கள்.

அதோடு, கலாவதியின் பங்காளிகளில் பெரும்பாலோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். ‘அம்பாசமுத்திரத்திற்கு’ தங்கியிருந்து கதிரறுக்கப் போய் விட்டார்கள். ஆகையால் மாடக்கண்ணுவின் இழவில், கொடுமைக்காக அழுதவர்களே அதிகம். உறவுக்காகக் கொதித்தவர்கள் குறைவு. என்றாலும் சும்மா சொல்லப்படாது, அருணாசலம் “தம்பி... தம்பி” என்று நான்குபேர், ஆறுதலாய் தன்னைப் பிடித்துக் கொள்ளும் வரை அழுதார். அவர் மனைவி, “தர்மத்துரையே... கொழுந்தா” என்று கூப்பாடு போட்டாள். ராஜதுரை துக்கமே உருவானவன் போல், துண்டை எடுத்துத் தலையை மூடியபடியே பிணத்தின் பின்னால் நடந்தான். பிண ஊர்வலம் முத்து லிங்கம் வீட்டை நெருங்கியபோது கில்லாடியார் “மொதல்ல இவன் வீட்டை நொறுக்கணும்பா” என்று மண்டையனிடம் பேசினார். ஆனால், ராஜதுரையோ யார் செத்தாலும் காதல் சாகாது என்பது போல், விஜயா தென்படுகிறாளா, தான் சோகமாக இருப்பதைப் பார்த்து, சோகப்படுகிறாளா என்று கண்களை சோதனைப் பார்வையில் விட்டான்.

மாடக்கண்ணு புதைக்கப்படுவதற்கு முன்பாகவே போலீசார், முத்துலிங்கத்தின் மிச்சம் மீதி கையாட்களையும் கைப்பற்றி காவலில் வைத்தார்கள். இப்போதும் அவர்கள், காவலில் தான் காத்துக் கிடக்கிறார்கள் இந்த விவகாரம் முழுவதையுமே ஊர் மறந்தது போல் தோன்றினாலும் இந்த ஐந்து பேர் குடும்பத்தினரும் மறக்கவில்லை. காவல் நிலையத்திற்குப் போய் தத்தம் குடும்பத்து சாதனையார்களைத் திட்டிவிட்டு அவர்கள் திரும்பும் போதெல்லாம், வீடுகளுக்கு போகும் முன்னாலேயே, முத்துலிங்கத்தின் வீட்டிற்கு முன்னால் போய் நின்று மண்ணை அள்ளி தட்டினார்கள்.

“அடியே கனகம்...கழிசடை... ஒன் புருஷன் மட்டும் வெளில சுத்தணும், எங்க புருஷன்மாரு ஜெயிலுல இருக்கணுமா? வெளில வாடி...முண்டை. ஒன் புருஷன் இருக்கிற இடத்த சொல்லுடி. அந்த தடிப்பயல ... கொலைகாரப் பயல... எங்கேடி ஒளிச்சி வச்சிருக்கே? சொல்லுடி, வாடி வெளியே” என்று அவர்கள் போடும், கண்மண் கலந்த கூப்பாடு, அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. ஊரார் யாரும் இதைத் தடுக்கவில்லை. ஒரு தடவை கூனிக்குறுகி வயலுக்குப் போகப்போன, முத்துலிங்கத்தின் தந்தையை, சில பெண்களும், ஆண்களும், அவர்களின் பிள்ளை குட்டி களும் வழிமறித்து “ஒன் மகன் இருக்கிற இடத்த சொல்லாமல் ...கிழட்டுப் பயலே ...நீ இப்போ ஒரு அடி கூட நகர முடியாது..” என்றார்கள்.

கிழவர்“ சத்தியமாய் எனக்குத் தெரியாது” என்றார். மாமனாரை மீட்டு வந்த, முத்துலிங்கத்தின் மனைவி, கூட்டத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடியே “அந்த கரிமுடிவான்... நாசமாப் போற பாவி ... இப்படிச் செய்வான்னு நாங்க நினைக்கல... அவன் தங்கச்சி எங்க வீட்ல இருந்தும் கெடுத்தாள். இல்லாமலும் கெடுத்தாள். சத்தியமாய் அந்த குடிகாரன் போன இடம் எங்களுக்குத் தெரியாது. இவர விட்டுடுங்க...” என்று, கலாவதி, தோட்டத்திலும், போலீசாரிடமும் புலம்பியது போலவே கனகமும் புலம்பினாள், அவள் கணவனை கண்டபடி திட்டினாள், லாக்கப்காரர்களின் மனைவிகள் அவளை விடவில்லை.

“நீ சொல்லிக் கொடுத்துத்தாண்டி ஒன் புருஷன் பைத்தியாரத் தர்மரைக் கொன்னான். அப்பாவிப் பொண்ணை அலங்கோலம் பண்ணுனான். அந்த சோம்பேறிப்பயல் எங்கடி இருக்கான்? சொல்றியா, சொல்ல வைக் கட்டுமா?” என்று அவள் தலை முடியைப் பிடித்து இழுத்தார்கள். அந்தச் சமயத்தில், ஊருக்குள் ‘தீவிர’ புலன் விசாரணை செய்வதற்காக மூன்று போலீசார் மட்டும் வராதிருந்தால், மிஸ்ஸஸ் முத்துலிங்கமும், அவள் மாமனாரும், படாதபாடு படவேண்டியதிருக்கும்.

போலீசார், அவர்களை மீட்டியதுடன், மிரட்டியவர்களை அதட்டினார்கள். ஆண்களை அடித்தார்கள். பெண்களை அடிக்கப் போவதுபோல், கைகளை ஓங்கினார்கள். “தொலைச்சிப் பிடுவோம் தொலைச்சி” என்றார்கள். லாக்கப்கார குடும்பத்தினரும், எந்த வேகத்தில் முதலில் கோபப்பட்டார்களோ, அதே வேகத்தில் இப்போது பயந்தார்கள். போலீசாரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். முத்துலிங்கம் மனைவி, தன்னையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போல எகிறப் போனாள். போலீசார், அவளையும் கையோங்கினார்கள்.

மறுநாளிலிருந்து, இரண்டு போலீசார், முத்துலிங்கம் வீட்டில் காவலுக்குப் போடப்பட்டார்கள். இன்னும் காவல் காத்து வருகிறார்கள். தற்செயலாய், அந்தப் பக்கமாய் போகிறவரையும் அதட்டுகிறார்கள். பணமோ, செல்வாக்கோ அல்லது இரண்டுமோ இடையில் விளையாடி விட்டது என்பதையும், இயல்பான மனிதாபிமானத்தில் துவக்கத்தில் துடித்துப் பேசிய போலீஸ் வாய்கள், ‘இனிப்புக்களாலோ’ அல்லது இன்புளுயன்சாலோ அடக்கப்பட்டு விட்டன என்பதைப் புரிந்து கொண்ட ஊரார், யாரும் அடக்காமலே அடங்கி விட்டார்கள்.

என்றாலும்—

தாமோதரன் முயற்சியால், பெருமளவு சரிக்கட்டப்பட்ட இந்த விவகாரத்தை, சட்டப்படி சரிக்கட்டவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பிரேத பரிசோதனை. ரிப்போர்ட் இன்னும் பூர்த்தியாகவில்லை. எப், ஐ. ஆர். நீக்குப்போக்காக நிரப்பப்பட்டுள்ளது. கலாவதிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ‘பாஸிட்டிவ்’ மனிதாபிமானத்துடனும், ‘டிபார்ட்மென்ட் மேன்’ குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற ‘நெகட்டிவ்’ மனிதாபிமானத்துடனும் முழுப் பூசணிக்காயை, தன்னந்தனியாய் தாங்கள் மட்டுமே மறைக்கக் கூடாது என்ற ராஜதந்திரத்துடனும், காவல் நிலையத்தினர், தங்களிடம் தவம் கிடக்கும் லோகல் லீடர்களிடம், ஒரு யோசனை சொன்னார்கள்; அது தான் பஞ்சாயத்தார் தீர்ப்பு—

இதன்படி, ஊர்ச்சாவடி முகப்பில் கூட்டம் நிரம்பியிருக்கிறது. உள்ளூர் பிரமுகர்களும், வெளியூர் பிரமுகர் களும், சாவடிக்குள் விரிக்கப்பட்ட ‘கோரம்பாய்களில்’ உட்கார்ந்திருக்கிறார்கள். பிள்ளையார் கோயில் தர்ம கர்த்தா சோமசுந்தரம், அந்த ஏரியாவின் பாதிரியார், சர்வகட்சி லோகல் தலைவர்கள், ஒருவர் உடம்பை ஒருவர் இடிக்கும்படி, வெற்றிலை பாக்கைப் போட்டுப் போட்டு, துப்பித் துப்பி, பேசிப் பேசி, அந்த விவகாரத்தை மூடுமந்திரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாவடி முகப்புக்கு வெளியே, கில்லாடியார், மண்டையன் உட்பட வாயாடிகள் முன்னாலும் வாய் செத்தவர்கள் பின்னாலு மாய் இருக்கிறார்கள். கூட்டத்தின் விளிம்பு போல, லாக்கப்பில் இருக்கும் ஐவரின் தேவியரும் அவர் தம் பிள்ளை பெண்டுகளும், பிரமுகர்களையே பரிதாபமாகப் பார்த்த படி, ஏங்கிய முகங்களோடு, தொங்கிய கோலத்தோடு, காட்சி தருகிறார்கள். சற்றுத் தொலைவில் கசா.முசா சத்தத் துடன் பெண்கள் கூட்டம். கூட்டத்திற்கு வலது பக்கம், பாதிரியாரின் மோட்டார் பைக். இடது பக்கம், தாகர் கோவிலைச் சேர்ந்த அதே அந்த படகுக்கார்.

எல்லாவற்றிற்கும் மேலாக—

பிரமுகர்களின் வட்டத்திற்கு மையமாக கலாவதி உட்கார்ந்திருந்தாள், இல்லை... உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தாள். அன்று தான் அவளை, அவசர அவசரமாக, அரையும் குறையுமாக, மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்தார்கள். அம்மணமாகப் போனவள், இப்போது புத்தம் புது சேலையோடு, கண்ணைப் பறிக்கும் வண்ண ஜாக்கெட்டோடு இருக்கிறாள்.

என்னதான் அவள் உடம்பைப் பூசி மெழுகினாலும், உடம்பில் சூடுபட்ட பல பகுதிகளைப் பார்க்க முடியவில்லையானாலும், அவள் கண் விழிக்குக் கீழே இருந்த வெள்ளை வெளேர் தோலையும், நெற்றிப் பொட்டில் பத்துப் பைசா அளவிற்கு இருந்த புண்பட்ட பொத்தலையும் யாராலும் மறைக்க முடியவில்லை. இவை மட்டுமா? உதடுகள் வெள்ளையாய் வெந்திருந்தன. கழுத்தில் இரும்பு நெக்லஸ் போட்டதுபோல், ‘சூட்டாரம்’. தொண்டையில் சாம்பல் நிறக் குழி. கை கால்களிலும், பார்ப்பவர் கண்ணுக்குப் புலப்பட்ட அத்தனை அங்கப் பகுதிகளிலும் தோலுரிக்கப்பட்டது போன்ற சதைத் திரட்டுக்கள். இந்த புண்பட்ட பெண்ணிற்கு மகுடம் சூட்டுவதுபோல், தலை மொட்டையடிக்கப்பட்டு, அதில் களிம்பு போடப்பட்டிருந்தது.

கலாவதி, மலங்க மலங்க, விழிகள் பிதுங்கப் பிதுங்கப் பார்த்துக் கொண்டாள். ஒரு தடவை தன்னையும், மறு தடவை சூடுபட்ட தோட்டம் இருந்த திக்கையும் பார்த்துக் கொண்டாள். உடம்பை ஒடிக்காமல், தலை மட்டும் தனியாய் இருப்பது போல் பார்த்தாள். பிறகு “எய்யோ ... யோ ... யோ...” என்று தன்பாட்டுக்கு இழுத்தபடியே மெள்ளப் புலம்பினாள். அருகே தலை கவிழ்ந்து இருந்த தாமோதரனையும், தலை நிமிர்ந்து இருந்த அவன் தந்தையையும் பார்த்துப் பயந்தவள்போல், சற்று விலகிப் போனாள். உட்கார்ந்து களைத்தவள் போல் படுக்கப் போனாள். மொத்தத்தில் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வோ, யாருடன் இருக்கிறோம் என்ற ஒளிவோ இல்லாமல், ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது மாதிரி இருந்தாள்.

“நாசமா போற பயலுவ! அச்சடிச்சது மாதிரி இருந்த பொண்ண, அடையாளம் தெரியாமல் பண்ணிட்டாங்களா. இவங்க மட்டும் வாழ்ந்திடுவாங்களாக்கும்” என்று தொலைவில் நின்ற தாய்மார்கள், சத்தம் போட்டே பேசினார்கள். முத்துலிங்கம் வீட்டில் காவலுக்குப் போட்டிருந்த போலீசார், இப்போது கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தபடியே, தங்களை உற்றுக் கவனிப்பதைப் பொருட்படுத்தாமலே பேசினார்கள். முத்துமாரிப் பாட்டி, கையில் கற்களையும், தோளில் வாதமடக்கி இலைகளையும் வைத்தபடி, அந்தப் பக்கமாய் போய் தலையை ஆட்டினாலும், அவளைக் கிண்டல் செய்யவேண்டும் என்ற வழக்கமான உணர்வற்று வைதுகொண்டிருந்தார்கள். தாமோதரனுக்கும் திட்டு; அவன் தகப்பனுக்கும் திட்டு; நீதிக்கும் திட்டு; சாமிக்கும் திட்டு.

தாமோதரன், தலை கவிழ்ந்தபடியே தன் கண்களை தோளில் வைத்து தேய்த்துக் கொண்டான். கலாலதியைப் பார்க்கப் பார்க்க, அவன் பார்வை இழந்தான், மண்ணுலகு இல்லாத விண்ணுலகில், மனிதர்கள் இல்லாத பொன்னுலகில், தமிழரசி மனிதப் பெண் என்பதால் அவளையும் சேர்க்காமல், தான் மட்டும் தன்னந்தனியாய் சஞ்சரிப்பது போல் தோன்றினான். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட விரக்தியில், உள்ளமே அற்றுப் போனவன் போல் உட்கார்ந்து கிடந்தான்.

ஒரு லோகல் லீடர் பேசத் துவங்கினார்:

“பெண்ணுக்கு உரியவரு யாரு?”

இன்னொரு லோகல் லீடர் மொய்தீன் பதட்டப்பட்டுப் பேசினார்:

“அடடே! அருணாசலம் வர்லியா? கையோட கூட்டி வாங்க.”

அருணாசலம் வருவது வரைக்கும், லோகல் லீடர்கள் எம்.ஜீ.ஆர். ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சிகளின் பேரணி வரைக்கும், காரம் இல்லாமலும், சாரம் இல்லாமலும் விசாரித்துக் கொண்டிருக்க, அரசியல் கலப்பற்ற இதரப் பிரமுகர்கள் சில்க் சுமிதாவில் இருந்து, வெளியூர் பெண் வில்லுப் பாட்டாளி ‘அசக்’ லட்சுமி வரைக்கும் பரிசீலனை செய்து கொண்டிருந்தார்கள். இதற்குள், அருணாசலமும், அவர் பின்னால் ராஜதுரையும், துக்கம் தாளாதவர்கள் போல, தோள் துண்டை தலையில் போட்டபடி வந்து, பிரமுகர்கள் கூட்டத்தில், சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள்.

லோகல் அரசியல்வாதிகளிலேயே படுலோகலான ஒருவர், சமரசத்தின் முதல் ரசத்தைத் தெளித்தார்.

“ஏதோ நடந்தது நடந்து போச்சு. இனிமேல் அதை மாற்ற முடியாது. முத்துலிங்கத்தையோ, மற்றவங்களையோ தூக்கில போடுறதுனால போன உயிர் திரும்பப் போறதில்ல. ஒருவேளை அப்படி திரும்புமுன்னு ஒரு நிலைமை இருந்தால், நானே இவங்கள தூக்குல தொங்கப் போடுவேன். அருணாசலம் மச்சான் கொஞ்சம் பெரிய மனசு செய்து, கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.”

அருணாசலம், காரமாகக் கேட்டார்: “எப்டின்னேன்! என் தம்பியை அநியாயமாய் கொன்னதும் இல்லாமல், இவளை இந்தப் பாடுபடுத்திட்டாங்க. இதை எப்டி விட முடியும்?”

பாதிரியார், வினயமாகப் பேசினார்:

“ஒங்களோட பாசம், எனக்குப் புரியாமல் இல்லை. அதே சமயம், தீமை செய்தவர்களையும் மன்னிப்பது தான் வீரத்திலேயே பெரிய வீரம். ஏசுநாதர் சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவை வேண்டலையா? பொறுத்தவர் பூமியாள்வார்.”

பூமியாளும் அருணாசலம், பொறுத்துக் கொண்டார். ஆனால் அது இல்லாத மண்டையனால் பொறுக்க முடியவில்லை. கூட்டத்துள் இருந்தவன் சத்தம் போட்டே கேட்டான்!

“என்ன ஃபாதர் பேசுறீங்க பேச்சு? ஏசாண்டவர் மரித்தெழுந்தார்; ஆனால் மாடக்கண்ணுவால மரித்தெழ முடியுமா? இந்த கலாவதிப் பெண்ணால இனிமேல் சுய நினைவுக்கு வரமுடியுமா? வாய் வயிற்றைக் கழுவ வேலைக்குத்தான் போக முடியுமா?”

பாதிரியார், எல்லோரையும் சங்கடமாய் பார்த்த போது, மண்டையனின் டீக்கடை, தேங்காய் கடை வாய்க்குப் பயந்தவர்போல், அருணாசலமும் வீறாப்பாய் கேட்டார்.

“ஆமா, மண்டையன் சொல்றது மாதிரி, என் தம்பியை இனிமேல் என்னால் பார்க்க முடியுமா? தம்பி மகள் பழைய நிலைக்குத் திரும்பத்தான் முடியுமா? பேசாமல் கோர்ட்டுத் தீர்ப்புக்கு விட்டுடலாம். உப்பைத் தின்னவங்க தண்ணீரைக் குடித்துத்தான் ஆகணும்.”

பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா, பேரத்திற்குள் போனார்.

“நாங்களும் மனுசங்கதான். சும்மா விட்டுடுவோமா? கலாவதிக்கு தாமோதரன் அய்யா ஐயாயிரம் ரூபாய் கொடுத்திடணும்.”

அருணாசலம் எகிறினார்.

“இது என்ன, விலை பேசுற விவகாரமா?”

“சரிப்பா, ஒரே பேச்சு! கலாவதியை கட்டிக் காப்பாத்துறதுக்காக, அருணாசலம் கையில, கூட இரண்டாரயிரம் போட்டு, ஏழாயிரமாய் கொடுத்துடணும்.”

அருணாசலம், பெரிய மனிதர்கள் பேச்சை தட்ட முடியாதவர்போல், ஏதோ ஒரு மனக்கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தார். தாமோதரனின் தந்தை ராமையா மடிக்குள் இருந்து, நூறு ரூபாய் நோட்டுக்களாக எடுத்து எண்ணி, அருணாசலத்திடம் பயபக்தியுடன் கொடுத்தார்.

“எல்லாம் முன்னேற்பாடோட நடக்குதுடா...” என்று மண்டையனிடம், ரகசியமாய் முணுமுணுத்த கில்லாடியார், ‘கலாவதிக்கு சம்மதமா’ன்னு ஒரு வார்த்தை கேளுங்க” என்றார். உடனே தர்மகர்த்தா, அதர்மமான ஒரு ஆபாச வார்த்தையால் கில்லாடியாரை மனதுக்குள்ளேயே திட்டியபடி “கலாவதி, ஒனக்கு இது சம்மதத்தானே? சொல்லும்மா!” என்றார்.

கலாவதியோ, தன் கையைத் தொட்ட தர்மகர்த்தாவை, சூடு போடப் போகிறவர்போல் பார்த்தபடியே “வேண்டாம் மச்சான், வேண்டாம் மச்சான். அவன் நொறுங்குவான், கூடப்பிறந்த குற்றத்த தவிர, எந்தக் குற்றத்தையும் அறியாதவள் நான்” என்று சொல்லிவிட்டு, அப்படிச் சொன்னதை மறந்தவள்போல் “எய்யோ... ஓ...யோ...” என்று வாயை இழுத்தாள்.

முன்னுரை சொன்ன லோகல் லீடரே, இப்போது முடிவுரையும் சொன்னார்:

“எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க. மகன் வினை தீர்த்தான் இன்னொருத்தன் பொண்ணோட ஓடிப்போன அவமானம் தாங்காமல், மாடக்கண்ணு கிணத்துல விழுந்து தற்கொலை செய்து கிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும். அதனால, கையைக் காலைக் கட்டிக்கிட்டு கிணத் துல குதிச்சார். இதுதான் பஞ்சாயத்தார் தீர்ப்பு, யாராவது ஏதாவது சொல்லணுமுன்னால் இப்பவே சொல்லுங்க .”

கில்லாடியார் கிள்ளுவது பொறுக்க முடியாமல், மண்டையன் கேட்டான்:

“பக்கத்துல எத்தனையோ கிணறுங்க இருக்கும் போது, மாடக்கண்ணு ஏன் முத்துலிங்கம் கிணத்துல விழணும்? இதை நானா கேட்கல? போலீஸ் கேட்குமேன்னு கேட்கிறேன்.”

“அதுவா? மாடக்கண்ணு மானஸ்தர். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த மவனுக்கு பாடஞ் சொல்ல நினைச்சார். “அடேய் நீ எவன் வீட்டுப் பெண்ண கூட்டிக்கிட்டுப் போனீயோ, அவன் வீட்டு கிணத்துலயே விழுந்து நான் சாகுறேண்டா...சண்டாளா”ன்னு வாயால் சொல்லாமல், செய்கையில் காட்டிட்டார். அவ்வளவுதான்.”

“அப்புறம், கலாவதி சூடுபட்ட சமாச்சாரம்?”

“அது போலீஸ் கணக்குல வராது. இந்தாப்பா மொய்தீன், பஞ்சாயத்தார் தீர்ப்பை எழுது. சட்டுப் புட்டுன்னு கையெழுத்து வாங்கலாம்.”

எத்தனையோ பஞ்சாயத்தார் தீர்ப்புக்களை எழுதிப் பழக்கப்பட்ட லோகல் அரசியல்வாதியான மொய்தீன், தாமோதரன் தந்தையின் காதில் “இன்னும் ரெண்டாயிரம் ரூபாய் எடுத்துக்கங்க; போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சாயத்தார் தீர்ப்போட போகணும்” என்றார். உடனே அவர் “நான் அழ வேண்டியத அழுதாச்சு. மிச்சம் மீதியை கையாள் பயலுவகிட்ட வாங்குங்க. அந்தப் பயலுவதான், என் மகனைக் கெடுத்தது” என்றார்.

இந்தச் சமயத்தில் வாயால் கெட்ட பூணிக் குருவி மாதிரி லாக்கப்வாசி பேச்சிமுத்துவின் இரண்டாவது சம்சாரம் “இந்தப் பஞ்சாயத்தால, பிடிபடாத முத்துலிங்கம் மட்டுந்தான் தப்பிக்காரா, பிடிபட்ட எங்க ஆட்களும் தப்பிக்காங்களா?” என்றாள் அழுகையோடு.

அந்த அழுகையில் உள்ள மூலதன முதலீட்டைப் புரிந்து கொண்ட மொய்தீன் “ஒங்க புருஷன்மாரு உயிரோட திரும்பணு முன்னால், ஆளுக்கு ஐநூறு ரூபாய் சீக்கிரமாய் கொண்டு வரணும்” என்றார். இதை ஆட்சேபிக்கப் போன குற்றேவல்காரர்களின் குடும்பத்தினர், வீரியத்தை விட காரியம் முக்கியம் என்பதை உணர்ந்தவர்களாய், உள்ளூர் வட்டிக் கடைக்காரரைத் தேடி காதுகளையும் கழுத்துகளையும் தடவியபடியே ஓடினார்கள்.

கில்லாடியார் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்.

“மாடக்கண்ணு தற்கொலை பண்ணுனார்னு சொல்றதைவிட, வினை தீர்த்தானே வந்து, நம்ம அப்பாவி முத்துலிங்கம்மேல பழிவரட்டுமுன்னு, அப்பனை ராத்திரியோட ராத்திரியா வந்து சாகடிச்சிட்டுப் போயிருப்பான்னு நினைக்கேன். பஞ்சாயத்தார் தீர்ப்பு இப்டி இருந்தால் நல்லா இருக்கும்.”

தர்மகர்த்தா, இப்போது அதட்டலோடு பேசினார்.

“ஏல கில்லாடி! ஒனக்குத் தான் பேசத் தெரியுமுன்னு பேசாத. அப்புறம் நீதான் வருத்தப்படப் போறே. இந்த விவகாரத்துக்குப் பின்னால், யாருல்லாம், எதுல்லாம் இருக்குன்னு தெரியாமல் கிண்டல் பண்ணாதடா.”

கில்லாடியார் அடங்கிப் போனவர் போல், தலையைத் தாழ்த்திக் கொண்டார். சப்தம் அடங்கியதும், பாதிரியார் எல்லோரையும் கையமர்த்திவிட்டு, நிதானமாகப் பேசினார்.

“ஒரு கெட்டதை முடித்த கையோட இன்னொரு நல்லதையும் நடத்திடுவோம். நம்ம ராஜதுரைக்கும், தாமோதரன் தங்கை விஜயாவுக்கும் நடக்கறதாய் இருந்த கல்யாணம் நின்னுட்டதாய் கேள்விப்பட்டேன். கல்யாணம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுறது. அதை நாம் தடுக்கப் படாது. அருணாசலம் என்ன சொல்றீங்க? ராமையா, சொல்லும்!”

“அவருக்குச் சம்மதமுன்னால், எனக்கும் சம்மதம்.”

“எனக்கும் சம்மதந்தான்.”

அருணாசலமும் தாமோதரன் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிரமுகர்கள், “பேஷ் பேஷ்” என்று சொல்லிக் கொண்டார்கள், கலாவதி “எய்யோ...” என்று கத்திக் கொண்டாள்.

கம்பீரம் கலைந்துபோன தாமோதரன், எஸ்டேட் முதலாளி இருந்த படகுக்காரை நோக்கி, நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தான்.