நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 20

20

ஒரு சில நாட்கள், ஊரார் ஒட்டுமொத்தமாக அழுத போது அந்த அழுகையை, கோபமாக மாறு முன்பே பயமாக மாற்றிக் காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன், வினாடி விடனாடியாய், அணு அணுவாய், நினைவு நினவாய், கனவு கனவாய், உணர்வு உணர்வாய் அழத் துவங்கினான். அன்றும், காவல் நிலையத்தில், தனித்திருந்த  அறையில், உள்ளுற அழுது கொண்டுதான் இருந்தான். அதேஅறை. அதே ஏட்டு பொன்னுச்சாமி. அதே ரைட்டர் சபாஸ்டின். அதே போலீஸ்காரர்கள். ஆனாலும் ஒரே ஒரு கூடிய மாற்றம்.

எஸ்டேட் முதலாளி பூமிநாதன், புதிதாய் முளைத்திருந்தார். சினிமாவில் எஸ்டேட் ஆதிக்க இளைஞர்கள் வருவது போல, இந்த ஐம்பத்தைந்து வயது முதலாளியும், டவுசரும், டி சட்டையும் போட்டு, கையில் ஒரு பேட் மிட்டனோ, குட்மிட்டனோ.அதற்கான வலைக் கம்பை கையில் பிடித்தபடி, தாமோதரனுக்கு எதிர் நாற்காலியில், இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு, என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார்.

தாமோதரனுக்கு, அவரைப் போலவே, அவரது பேச்சும் புரியவில்லை. இவ்வளவுக்கும், அவர் போட்ட சத்தத்தில், சாலையில் போன ஒரு நாய்கூட வாலை வளைத்து, காதுகளை நிமிர்த்தி திரும்பிப் பார்த்தது. என்றாலும், தாமுவுக்கு அவரின் ஒலிதான் கேட்டதே தவிர, அதில் உள்ளடங்கிய வார்த்தைகள் கேட்கவில்லை. ஆனாலும் ஒப்புக்கு, அவ்வப்போது தலையை ஆட்டிக் கொண்டான். அவர் இடையிடையே சிரிக்கும் போது, இவனும் அரை குறையாய் சிரித்துக் கொண்டான். அவனது கேட்பு ஞானம் மட்டுமல்ல; பார்வை ஞானமும் பாதிக்கப்பட்டிருந்தது.

எதிரில் பூமிநாதன் மட்டும் அவனுக்குத் தோன்ற வில்லை. அவர் வாய்க்குள், மாடக்கண்ணு விழுந்த கிணற்றைப் பார்த்தான். அவர், லைட்டரை வைத்து சிகரெட்டைப் பற்றவைத்த போது, அந்த நெருப்பில், கலாவதி சூடுபட்ட காட்சியைப் பார்த்தான். பயந்து போன தாமு, தலையைத் தூக்கி மின் விசிறியைப் பார்த்தான். அது மின் விசிறியல்ல. பூமியின் பேய் வாயான கிணற்றுக்குள் வீழ்த்தப்பட்ட மாடக்கண்ணு மாமா 

சுற்றிக் கொண்டிருந்தார். கலாவதி எய்யோவ் யோ... யோ...’ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென்று பூமிநாதனை மறைத்தபடி, தமிழரசி இடுப்பில் கை வைத்தபடி, அவனை இளக்காரமாகப் பார்ப்பது போல் தோன்றியது. உடனே ஊருக்குப் போவதற்கு முன்பாக, அண்ணன் சொன்ன ஆலோசனையும் நினைவுக்கு வந்தது. வெற்றியுடன் புறப்பட்ட அண்ணன் காரர், ‘எதுக்கும் மெட்ராசிக்குப் போய், தமிழரசியையும் கொஞ்சம் கைக்குள்ள போட்டுக்கோ. அவள் விஷயம் தெரிஞ்சு...ரகளை பண்ணாமல் பார்த்துக்கணும். இல்லன்னா, நம்ம எல்லாருக்கும் ஆபத்து’ என்றார்.

உடனே தாமோதரன், ஊர் உலகத்துல, குறிப்பாய் ஆபீஸ்கள்ல காரியத்தை முடிக்கிறதுக்காக, பொம்பிளைய கூட்டிக் கொடுப்பார்கள். நீ ஆம்புளய கூட்டிக் கொடுக்க பார்க்கிறியாக்கும்’ என்றான் சூடாக. அண்ணனை அப்படிக் கேட்டதற்காக, இப்போது கூட, அவன் வருத்தப்பட வில்லை. எதற்காக வருந்த வேண்டும்?

கொலைகாரர்களை விட, கொடியவர்களாய் நடந்து கொண்டவர்கள், விடுதலையாகி, ஊரில் கோவில் மாடு மாதிரி சுற்றித் திரிகிறார்கள். சூடுபட்ட கலாவதியோ, அய்யா விழுந்த கிணற்றை எட்டி எட்டிப் பார்த்தபடியே ‘எய்யோ...வ்...’ என்று கூப்பிடுகிறாளாம். அப்பாவைத் தேடுகிற சாக்கில், அவரைப்போல் போன நீதி தேவனைத் தேடுகிறாளோ? மனிதன் கிணற்றுக்குள் விழுந்தால் சடலமாவது நீரில் மிதக்கும். ஆனால் நியாயம் விழுந்தால்? இதற்கெல்லாம் காரணம் யார்? யாரோ, எவரோ? ஆனால் இதன் கிளைமாக்சை முடித்தவன் நான். இதனால் வாழ்க்கையில் எந்த கிளைமாக்சும் இல்லாமல் போய் விட்டேன்.

தாமோதரன் தனக்குள்ளே முனங்கிக் கொண்டான் அவனுக்குத் தேவைப்படுவது தமிழரசி கூட இல்லை.

நெ. 14

தனிமை, தனிமையேதான். இது தெரியாமல், அவனை இருப்பிடத்தில் காலை ஒன்பது மணிக்கே பிடித்துக்கொண்ட இந்த பூமிநாதன், அவனை அதே படகுக்காரில் ஏற்றிக் கொண்டு இங்கே வந்து விட்டார். அவனுள் இருந்த பழைய தாமோதரன் காரில் ஏறத் தயங்கினான். ஆனால் ‘புதுமை தாமோதரன் புறப்பட்டான்.

நேர்மை என்பது கற்பு மாதிரி. கற்பழிக்கப்பட்ட பிறகு முத்தமிட்டது பெரிய குற்றமா? அதற்காக இந்த மனிதர் இப்படியா அறுப்பது? பெரிய யோக்கியர் போல நாடே குட்டிச்சுவராயிட்டு என்கிறார். நல்லவன், கெட்டவன் கைல சிக்கியிருப்பதால் அவரே சொல்லிக் கொள்கிறார். அதற்கு விளக்கமும் கொடுக்கிறார். தப்புச் செய்கிறவனை எல்லாம், சவூதி அரேபியாவுல மாதிரி, ஒரு கை, ஒரு காலை எடுத்திடணும் என்கிறார். அப்படியானால் தனக்கு இன்னும் எத்தனையோ உறுப்புக்கள் தப்புக்கு தண்டனையாக தேவை என்பது தெரியாமலே...

பூமிநாதனும் இறுதியில் பூமிக்கு வந்து விட்டார்.

“அப்புறம் எஸ்டேட் பசங்க இங்க வந்தாங்களா சார்?'’

தாமோதரன், அவர் கேள்வி புரியாமல், அரை குறையாய் சிரிப்பதுபோல் பாவலா செய்தான். அந்தக் குறை பிரசவ புன்னகையை “நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்’ என்று அவன் சொல்வதாக, பூமிநாதன் பொருட்படுத்திக் கொண்டார். பிறகு தான் அந்த எஸ்டேட்டை, எப்படியெல்லாம் உருவாக்கி, எப்படியெல்லாம் முன்னுக்குக் கொண்டு வந்த புராணத்தை, தொடுத்துக் கொண்டிருந்தார். தாமு அவ்வப்போது தலையை ஆட்டி, அவர் பாட்டுக்கு தப்பாத தாளமாகிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவர் லூட்டியை அவனால் தாள முடியவில்லை. நரை முடியில் மை தொங்க, கழுத்தில் பணம் கட்டிய தாலி போன்ற மைனர் செயின் தொங்க, மேலுதட்டின் மேலே டிரிம் செய்யப்பட்ட மீசை மின்ன, அட்டகாசப் பட்டுக் கொண்டிருந்த அவரை, அவனால் போகச் சொல்ல முடியவில்லை.

  எப்படி முடியும்?
  அண்ணனையும், தன்னையும் ஏவி வைத்த பட்டுக் காரில் நாகர்கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போனவர். அந்த பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து, அவன் விவகாரத்தைச் சொன்னபோது, அதற்கு ஒனக்காக நான் மாட்டிக்க முடியுமா? மொதல்ல பொலிடிக்கலாய் ஏதாவது செய். அப்புறம் அபிஷியலாய் செய்யுறதைப் பற்றி யோசிக்கலாம்’ என்று அந்த அதிகாரி பதிலளித்தபோது, தன்னையும் தமையனையும் பல அரசியல்வாதிகளிடம் அழைத்துச் சென்றவர். அவர்கள் கேட்ட டொனேஷன்களை அள்ளிக் கொடுத்தவர். எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கான ரூபாயில் ‘காக்டெய்ல் காட்டி, அரசியல்வாதிகளை அதில் முக்கி, தன் கட்சியை அவர்களிடம் எடுத்துரைத்தவர். அர்ச்சுனனுக்குக் கண்ணன் தேரோட்டியதுபோல் தனக்காக சொந்த ஊருக்கே காரோட்டியவர். அப்படிப்பட்ட ‘நல்ல மனிதரை எப்படிப் போகச்சொல்வது? அண்ணனை ஜெயிலுக்குப் போக விடாமல் செய்தவரை, எப்படிப் போகச் சொல்ல முடியும்? மனிதனுக்கு நன்றி வேண்டும். அந்த நன்றி, கடமைக்கு துரோகமாய் ஆகக்கூடாதா? எவன்யா சொன்னான்? கொண்டுவா... லாக்கப்ல... போடுறேன்... பார்...
  ‘நன்றியுள்ள தாமோதரனால் பூமிநாதனை போகச் சொல்லவும் முடியவில்லை. அவரோடு சேர்ந்து இருக்கவும் முடியவில்லை... அவன்பாட்டுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தான். பூமிநாதனே அவனை உரிமையோடு கண்டித்தார்.
  "என்ன சார், நான்பாட்டுக்குப் பேசுறேன், நீங்க பாட்டுக்கு தலையை ஆட்டு றீங்க. எதுல விட்டேன்? சொல்லுங்க பார்க்கலாம்!" 

“ஒ அதுவா? மாடக்கண்ணுவ கிணத்துல விட்டாங்க; கலாவதியை சூட்ல விட்டாங்க, என்னை எங்கேயோ விட்டாங்க...’ -

பூமிநாதன், அதிர்ந்து போய் அவனைப் பார்த்தார். உற்றுப் பார்த்தார். அவனை, அவர் பார்ப்பதைப் பார்க்காமல், தனக்குள்ளையே தன்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அடப் பாவி, எஸ்டேட் பசங்க இன்னிக்கு ஸ்டேஷனுக்கு வந்து நியாயம் கேட்கப் போறாங்களாம். அதைச் சொல்றதுக்காக வந்தேன். அதுக்குள்ளே இவன் இப்படி ஆயிட்டானே. -

பூமிநாதன். அங்கிருந்தபடியே, ‘பொன்னுச்சாமி! பொன்னுச்சாமி!” என்று ஏலம் போட்டார். எஸ். பி. மாதிரி அதட்டிக் கூப்பிட்டார். உடனே, ரைட்டரிடம் ஏதோ வாதிட்டுக் கொண்டோ, வைதுகொண்டோ நின்ற பொன்னுச்சாமி, ஒடோடிவந்தார். விறைப்பாய் ஒரு சலூட் அடித்தார். அது, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனுக்கா, எஸ்டேட் முதலாளி பூமிநாதனுக்கா என்பது தெரியவில்லை. பூமிநாதன் வாய் திறந்தார்.

“பொன்னுச்சாமி! என் எஸ்டேட்ல நடந்த தற்கொலை விஷயமாய் எஸ்டேட் பசங்க ஒங்க ஸ்டேஷனுக்கு வாராங்களாம். காதுல போட்டுட்டேன். இனிமேல் கம்புலயோ, துப்பாக்கியிலயோ போடுறது ஒங்க பொறுப்பு. ஒங்க அய்யாவுக்கு ஊர் விஷயத்துல மூளையில விஷம் பாஞ்சுட்டு. அவரைக் குழப்பாதீங்க. ஒங்களால செய்ய முடியுறதை யெல்லாம் செய்யுங்க.’

ஏட்டு பொன்னுச்சாமி, தாமோதரனைப் பார்த்தார். வெளியே இருந்த ரைட்டரைப் பார்த்தார். பிறகு கிசு கிசு குரலில் ‘எங்க சப்-இன்ஸ்பெக்டர் அய்யா ஒரு வார்த்தை சொல்லட்டும், ஒங்களுக்கு எவன் எவன்லாம் எதிரியோ, அவன்களை வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல சிக்க வச்சுடுறேன். ஆனால் , அய்யா ஒரு வார்த்தை சரின்னு சொல்லணும்.’’

பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பை மேற்கொண்டார்.

‘என்னய்யா பேசுறீங்க பேச்சு? தாமு தம்பி சும்மா இருக்கதுல இருந்து, ஒங்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திட்டார்னு அர்த்தம் ஆகலியா? இதுக்கு மேல எழுதிக் கொடுப்பாராக்கும்? தாமோதரன் சார், ஒங்ககிட்ட இந்த ஏட்டையா எவ்வளவு விசுவாசமாய் இருக்கார் பாருங்க. ஒரு வார்த்தை நீங்களும் சொல்றது! ஒங்களத்தான் சார்!’

தாமோதரன் மோவாயைத் தடவியபடியே ‘ஆங்... ஆமா...அப்படித்தான் செய்யணும்’ என்றான். பொன்னுச்சாமி, தாமோதரனை மோவாயில சுட்டிக் காட்டி, பூமிநாதனிடம் கண்ணடித்து விட்டு ரைட்டரிடம் போனார்.

சிறிது நேரத்தில், பூமிநாதன் புறப்பட்டார். தாமோதரன் நாற்காலியில் மல்லாந்து கிடந்தபடி, அவருக்கு அரைகுறை கண்களை நிமிர்த்தி குலுக்கி வழியனுப்பினன். பிறகு அப்படியே சாய்ந்தான். அந்த நாற்காலி தேர் போலவும், அவன் பிணம் போலவும் கிடந்தான்.

எவ்வளவு நேரமோ அவனுக்குத் தெரியாது. பயங்கரமான சத்த பரிவர்த்தனை கேட்டு கண் விழித்தான். உடம்பை நிமிர்த்தாமலே, வெளியே பார்த்தான். ரைட்டர் சபாஸ்டினும், ஏட்டு பொன்னுச்சாமியும், ஒருவரை ஒருவர் அடிக்காத குறையாக கத்திக் கொண்டிருந்தார்கள். தாமோதரன், எதுவுமே நடக்காதது போல் எழுந்து, அவர்களிடம் போய் மவுனமாக நின்றான். ரைட்டர் அவனை தார்மீகக் கோபத்தோடு சாடினார்.

‘இந்த ஸ்டேஷனுக்கு நீங்க இன்சார்ஜா, இல்ல எனக்கும் ஜூனியரான இந்த பொன்னுச்சாமியா சார்? 

வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல வெட்டுனவனையும், வெட்டுப்பட்டவனையும் பார்த்தவங்க, மூணு பேர் பெயருங்களைத்தான் கொடுத்தாங்க. இந்த மனுஷன், ‘அடையாளம் தெரியாத.ஆனால் நேரில் பார்த்தால் காட்டக்கூடிய.நாலைஞ்சு பேரும் கொலை செய்தாங்கன்’னு எப். ஐ. ஆர்ல சேர்த்துக்கச் சொல்றார். இந்த மாதிரி பிளாக் மெயில் மற்ற ஸ்டேஷன்கள்ல நடக்கலாம். ஆனால் நம்ம ஸ்டேஷன்ல எதுக்காக சார் நடக்கணும்? அப்படி அடையாளம் தெரியாத நபர் யாராவது கொலையில சம்பந்தப்பட்டிருந்தால், அது இந்த பொன்னுச்சாமியாய் தான் இருக்கும்.’’

ஏட்டு பொன்னுச்சாமி, ரைட்டரை வன்முறை அங்கலாவயங்களோடு அணுகினார். உடனே ரைட்டரும் எழுந்தார். ஆங்காங்கே, துப்பாக்கிகளை துடைத்துக் கொண்டிருந்த இதர போலீஸ்காரர்கள், அங்கே தடதட வென்ற சத்தத்தோடு ஓடி வந்தார்கள். ரைட்டருக்கும், ஏட்டுக்கும் தடியடியில்லாத வாயடிகள். அம்மாக்களையும், அக்காக்களையும் கூட வாய் வழியாக இழுக்கப் போனார்கள். ஒரு காலத்தில் - ஒரு காலத்தில் என்ன காலத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அவனைப் பார்த்ததும், கட்டுண்டு நிற்கும் அந்த இருவரும், இப்போது அவன் முன்னாலயே மல்கட்டப் போனார்கள்.

அவனோ தனது ஸ்டேட்டஸ்’ போனதை உணராதவனாய் அவர்களை நோக்கினான். பிறகு தலைக்கு மேல் கைகளை கொண்டுபோய் கும்பிட்டான். அதைப் பார்த்த ரைட்டருக்கு, இதயம் வெடிப்பது போலிருந்தது. இந்த ஆபீஸர் எப்படிப் போயிட்டார். உடம்பு மாறியது மாதிரி, போக்கும் எப்படி மாறிட்டு. என்னால் இவருக்கு சிரமம் வரப்படாது. இவரால் நியாயத்திற்கு சிரமம் வரப்படாது. பரம பிதாவே! தேவகுமரா! பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்துக் கொள்ளுங்கள்.” 

ரைட்டர் சபாஸ்டின் வெளியே ஒடியதும், தாமோதரனும் தனது அறைக்குள் வந்தான். எந்தத் தாக்குதலுக்கும் இலக்காகாத தூரத்திற்குப் போய்விட்டவன் போல் வந்தான். இந்த பொன்னுச்சாமி அதிகார நடனம் ஆடுவது அவனுக்கு லேசாய் புரிந்தது. என்ன செய்ய? பொன்னுச்சாமி இல்லையானால் பூமிநாதன் வந்திருக்க மாட்டார். பூமிநாதன் வராவிட்டால், அண்ணன் போக வேண்டிய இடத்திற்குப் போயிருப்பான். நல்லவர்களுக்கு, கெட்டவர்களே பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது. ஒரு நேர்மைவானின் தர்மத்தை, அதர்மவான்களே விசாரிக்க வேண்டிய காலம் இது. கலாவதி, என்னை மன்னிச்சுடும்மா! ஒனக்கு போடப்பட்ட சூடு ஒன்னோட மட்டும் முடியலம்மா, அது என்னையும் சுட்டு, இந்த போலீஸ் நிலையத்தையும் சுடுதம்மா. என் காதலையும் எரிச்சுட்டும்மா. ஒன் அப்பாவையும், ஒன்னையும் நாங்க அடிக்க வச்சபோது, தமிழரசி மேலதிகாரியிடம் போகப் போனபோது தாமுத்தான் என்னால கஷ்டப்படப்படாதுன்னு சொன்னியே... அதை நான் மறக்கலாமா? மறக்க லம்மா!’

நெற்றி நெளிய, விழி பிதுங்க, தானாய் புலம்பிக் கொண்டிருந்த தாமோதரன், சார்’ என்ற சத்தம் கேட்டு, வாயை மூடி, கண்களைத் திறந்தான். நான்கைந்து எஸ்டேட் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள். ஏற்கனவே ஒரளவு அறிமுகமானவர்கள்தான் - ஆனால் இப்போது அவர்கள் சரியாகத் தெரியவில்லை.

‘நீங்க யாருங்க?”

“மார்த்தாண்டன் கொலையை மறந்தது மாதிரி... எங்களையும் மறந்துட்டிங்க சார்.’

‘ஒ, நீங்களா? உட்காருங்க.”

‘நாங்க உட்கார வர்ல. நீங்க எங்களை உட்காரவச்சு, அநியாயம் வழங்குறதை விட நிற்க வச்சே நியாயம் வழங்கினால், அதுவே போதும். பூமிநாதன் எஸ்டேட்ல,

எங்க தோழனை முதலாளியும், அடியாட்களுமாய் சேர்ந்து கொலை செய்துட்டாங்கன்னும், ஏட்டு பொன்னுச்சாமி அதை மழுப்பிட்டாருன்னும் சொன்னோம். என்ன ஆக்ஷன் எடுத்தீங்கன்னு கேட்கிறதுக்கு வந்தோம்.”

“ஆக்ஷன? ஆமா, ஆக்ஷன் எடுத்தேன். அது கொலையில்ல, தற்கொலை. போஸ்ட் மார்ட்டம்-அதுதான் டாக்டர் ரிப்போர்ட்லயும் கொலைன்னு சொல்லல.”

டாக்டர் ரிப்போர்ட்டைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா சார்? போலீஸ் சொல்றபடி டாக்டருங்க ரிப்போர்ட் கொடுக்காட்டால், அவங்க வீட்ல கல்லு விழும். பொறுக்கிப் பசங்க வம்புச் சண்டைக்குப் போவாங்க. அந்தக் கதை பெரிய கதை. அது இப்போ வேண்டாம். இப்போ, எங்களுக்கும் சில விவரம் கிடைச்சிருக்கு. பூமி நாதன் எஸ்டேட்ல, எங்கள் தோழன் மார்த்தாண்டன் தொழிலாளர் சங்கம் துவக்குறதுக்குப் போயிருக்கான். பூமிநாதன் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கல அதனால, பகலுல அவனை சாகடிச்சுட்டு, ராத்திரில மரத்துல தொங்கப் போட்டுட்டாங்க மனச்சாட்சிக்குப் பயந்த பூமிநாதனின் வீட்டு வேலைக்காரப் பையன், எங்ககிட்டே வந்து அழுதுட்டு, இப்போ... எங்க கூடயே இருக்கான்.”

தாமோதரன், பேச முடியாத குரலில் பேசினான்:

‘இது ஒங்களோட வெர்ஷன். நான் நல்லாத்தான் விசாரிச்சேன். அது சூயிசைட் தான்.’

“ எப்போ விசாரிச்சீங்க? பூமிநாதன் உங்களை நாகர் கோவிலுக்கு கார்ல ஏற்றிக்கிட்டுப் போகும்போதா, அல்லது ஒங்க ஊருக்கு கூட்டி கிட்டுப் போகும்போதா? இல்ல அவர் எஸ்டேட்ல நடந்த காக்டெயில் பார்ட்டி யிலயா? எப்போ விசாரிச்சீங்க.’’

தாமோதரன், தமிழரசி போல் துடித்தான். கலாவதி போல் மருண்டான். மாடக்கண்ணுபோல் 

நிர்க்கதி பார்வையை நிலைநாட்டினான். பேசவாயற்று, பார்க்க கண்ணற்று, கேட்க காதற்றுப் போனவன் போல் அவன் அவர்களைப் பார்க்கும் தோரணையோடு எதையோ பார்த்தான். தொழிலாளர் தலைவர்கள், அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்து நின்றார்கள். அது கிடைக்காததால் ஒருவர், எஸ். பி. ஆபிசும் எங்களுக்குத் தெரியும். மறியல், ஆர்ப்பாட்டமும் எங்களுக்குப் புதுசில்ல’ என்றார்.

தாமோதரனும், தொழிலாளர் தலைவர்களும், எதிரும் புதிருமாய் விழித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஏட்டுப் பொன்னுச்சாமி, கையில் லத்திக் கம்போடு உள்ளே வந்து, தாமுவின் அருகே போய் நின்று கொண்டார். கையில் உருண்டைக்கம்பை உருட்டி, கண்களில் விழிகளையும் உருட்டி வாய்வழியாய் முரட்டுச் சொற்களை ஏவி விட்டார்.

என்னடா ஒங்க மனசுல நினைச்சீங்க? பொறுக்கிப் பசங்களா! இது போலீஸ் ஸ்டேஷன, ஒப்பன் வீடா? ஒரு போலீஸ் ஆபீசர் கிட்டே, இந்த அளவுக்கு மரியாதை இல்லாம பேசுற அளவுக்கு ஒங்களுக்குத் தைரியம் வந்துட்டா? பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டுட்டு, அவள் சோரம் போனாளோ, பேரம் போனாளோ யார் கண்டாங்க? அவள் கிட்ட வாழப் பிடிக்காமல் தூக்குப் போட்டு செத்த லூசுப்பயலுக்காக, ஏண்டா பைத்தியக் காரங்க மாதிரி வந்து எங்க பிராணனை எடுக்கிறீங்க? செத்துப் போனவன் பெண்டாட்டியே ஜாலியா இருக்கும் போது, ஒங்களுக்கு என்னடா வந்தது? ஒங்களை உள்ளே தள்ளினால்தான் புத்தி வரும். இந்தாப்பா பை நாட் செவன்...’

தொழிலாளர் பிரதிநிதி ஒருவர் ஏதோ சொல்லப்போன போது, தலைவர் போல் தோன்றிய ஒருவர், அவரை அடக்கினார். தாமோதரன், ஏட்டை அடக்குவார் என்று எதிர்பார்த்து, அவனையே பார்த்தார். அவனோ, அடங்கிப் 

போய் கிடந்தான். வாய் செத்துப் பார்த்தான். அவனுக்கு எல்லோருமே கோடுகோடுகளாய்த் தெரிந்தன. மங்கிய நிஜங்களாக, கசங்கிய நிழல்களாகத் தெரிந்தன. -

தொழிலாளர் தலைவர், தன் தோழர்களைப் பிடித் திழுத்தபடி, மவுனமாக வெளியேறினார். அவர்கள் போவதையே பார்த்த ஏட்டு பொன்னுச்சாமி, எகிறினார்:

“எல்லாம் நீங்கள் கொடுக்கிற இளக்காரம் சார். ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்ன, உள்ளே போட்டிருப்பேன். இதுக்குத்தான் அந்த ரைட்டர் கிட்டே அப்பவே சொன்னேன், வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல அடையாளம் தெரியாத-ஆனால் நேரில் காட்டக் கூடிய’ என்கிற வரியை எழுதியே ஆகணும்; அப்போதுதான், இப்போ வந்துட்டுப் போன பசங்கள பிடிச்சிட்டு வந்து பாரேட்” பண்ணலாம்; பண்ணணும்.”

தாமோதரன், பேசுபவர் தெரியாமல், பேசுவதும் புரியாமல் அப்படியே கிடந்தான். ஏட்டுப் பொன்னுச்சாமி, அவனை இளக்காரமாகப் பார்த்தபடியே, ரைட்டரை நோக்கிப் போனார்.

இருவருக்கும் இடையே பயங்கரமான சத்தம். நீ ஆயிரம் சொன்னாலும் நான் அப்படி எழுத மாட்டேன்’ என்றும், ஒன்னை எழுத வைக்காமல் விடமாட்டேன்’ என்றும் ஏட்டின் சவால்; ரைட்டரின் எதிர் சவால்.

தாமோதரனோ, சவலை மனிதனாகக் கிடந்தான். ஒரு மணி நேரம் ஒடியிருக்கும். பலத்த சத்தம் கேட்டு, ரைட்டரும், பொன்னுச்சாமியும் பதறியடித்து வெளியே ஒடினர்கள். ஏட்டு பொன்னுச்சாமி, ஒடிய வேகத்திலேயே திரும்பினார். நாற்காலியில் தொங்குவது போல் கிடந்த தாமோதரனை உலுக்கியபடியே கதறினார். முரடனுக்குப் பயம் வந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவதுபோல் பேசினார். சார், சார்: எஸ்டேட் தொழிலாளிங்க திரண்டு. வாராங்க. முந்நூறு பேருக்கு மேல வாராங்க. துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமல், நாம் தப்பிக்க முடியாது.”