பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவு வகைகள் 255


பகை தணிவினைப் பிரிவு: பகை தணி வினைப் பிரிவு என்பது சமாதானத்தை ஏற்படுத்தச் செல்லும் தூதுவர் போலச் செல்லும் செலவு அன்று. தனக்குக் கீழ்ப்பட்ட இரண்டு அரசர்கள் இன்றுப் போர் தொடங்குவேன், நாளைப் போர் தொடங்குவேன்' என்று மாறுபட்ட கருத்துகளால் முரண் கொண்டு இருப்பதைக் கண்டு, இவர்கள் போர் தொடங்கினால் இவர்தம் அகந்தையின் காரணமாக ஒன்றுமறியாத மக்களும் விலங்குகளும் அழிய நேரிடும் என்று கழி பேரிரக்கம் கொண்டு, எப்படியாவது-அவர்களை இரந்தாவது -அப்போரை ஒழிப்பதற்குப் பிரியும் பிரிவுதான் பகை தணி வினைப் பிரிவு என்பது. இன்று மேற்கு நாடுகள் அறிவியல் அறிவின் மமதையால் நீரியக் குண்டு, யுரேனியக் குண்டு போன்ற உருத்திரக் கூறு பொருந்திய அணு ஆயுதங்களை ஆயத்தம் செய்து விட்டதன் செருக்கால், போர் தொடங்க முனைந்து கொண்டிருக்கும்பொழுது அகிம்சை நெறி யொழுகும் இராஜாஜி, இராசேந்தி பிரசாத், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற பெரியோர்கள் அவர்களை இரந்தாவது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட செலவினைப் 'பகை தணிவினை என்று கூறி விளக்கலாம். சமாதானத்தின் பொருட்டுக் கூட்டப் பெறும் ஐ. நா. அவையின் மாநாட்டிற்குச் செல்வதும் இத்துறையின்பாற் பட்டதே. அரசன் தூது சென்றதற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாரதத்தில் தூது சென்ற வாசுதேவனை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வேந்தர்க் குற்றுழிப்பிரிவது: வேந்தர்க் குற்றுழித் தலைவன் பிரிவான் என்பதனால், அந்த அரசன்கீழ்ச் சேவகம் செய்து பிழைக்கின்றான் என்று நினைக்க வேண்டா. தனக்கு நண்பனாக இருக்கும் ஒர் அரசனுக்கு யாதாவது ஒரு காரணத்தால் விபத்து நேருமாயின் அதனை நீக்குதற்குப் பிரிவான் என்று கூறுவர் இறையனார் களவியலுரையாசிரியர். நாடக் வழக்காக அவ்வா சிரியர் அங்ஙனம் கூறினாராயினும் இதனை இவ்வுலக வழக்கிலும் வைத்தெண்ணலாம். இரண்டாவது உலகப் பெரும் போர் நடை பெற்றபொழுது போர்க் காரணமாக எத்தனையோ வீரர்கள் பல்வேறு போர்த் துறைகளில் பெரிய பெரிய பதவிகளை வகித்தனர். அவர்கள் அவசியத்தின் நிமித்தம் அடிக்கடி தத்தம் நாட்டைவிட்டு அயல் நாடு போக வேண்டி வந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளை வேந்தர்க் குற்றுழிப் பிரியும் பிரிவுகளாகக் கருதலாம்