இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
தொடர்ந்தாலும் தொழுதாலும் துதித்தாலும் அவமதித்துக் கடந்தாலும் மெய்ஞ்ஞானி கமலஇலைப் புனல்போல்வான்.”
என்றபடி இளமையிலேயே இத்தகைய பெருஞான வள்ளலாய் இவர் பிறங்கி நின்றார். அறுமுகப்பெருமானைப் புடைசூழ்ந்து அமரர் கணங்கள் நிற்பனபோல் இவரைச் சூழ்ந்து முனிவர் கணங்கள் மிக மகிழ்ந்திருந்தன. பாலப்பருவத்தர்; சீலம் பழுத்தவர்; குறுகிய வடிவினர்; பெருகிய அறிவினர்; தெரிவருந்திண்மையர்; பொருவருந்தன்மையர் என இவரது வியக்கத்தக்க மேன்மைகளைக் குறித்து யாவரும் புகழ்ந்துரையாடி நாளும் போற்றி நின்றனர். ஞானவுலகில் இவர் ஒரு வானவொளி போல் வயங்கி விளங்கினர். உலகம் இன்புறப் பிறந்து அருந்தவக்கொழுந்தாய் இங்ஙனம் இவர் விளங்கி யிருந்தார்.
தெண்டிரைசூழ் ஞாலஞ் சிறந்து திகழவான் அண்ட ரெவரும் அகமகிழப் - பண்டைமறை வேதனுயர் வேள்விவாய் மேவிவந்த ஐயனிரு பாத மலர்நமக்குப் பற்று.