௮
அகநானூறு
[பாட்டு
இவளும், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு இனையள் ஆயின் - நிறுத்தவும் நில்லாது ஓடும் நெஞ்சினளாய் நின்னிடத்தே இத்தகைய காதலுடையளாயின், தந்தை, அருங்கடிக் காவலர் சோர் பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை - இனி நீ இவள் தந்தையின் அரிய காத்தற் றொழிலையுடைய காவலாளர் சோர்வுற்றிருக்குஞ் செவ்வியை மறைய உணர்ந்து இரவில் வருதற்கும் உரியை;
கரு—எ. பைம்புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன - அன்றியும் பசிய புதர் சூழ்ந்த வேங்கை மரங்களும் ஒள்ளிய பூங்கொத்துக்கள் விரியப் பெற்றன ; நெடுவெண் திங்களும் ஊர் கொண்டன்று - மிக்க வெண்மையையுடைய திங்களும் நிரம்புதலுற்றது.
(முடிபு) நாடனே, குறித்த இன்பம் நினக்கு எங்ஙனம் அரியன; இவளும் இனையளாயின் கங்குல் வருகலும் உரியை; வேங்கையும் இணர் விரிந்தன; திங்களும் ஊர் கொண்டன்று.
(வி-ரை.) சுளையொடு- சுளையால். ஒடுவைக் கனியொடுங் கூட்டுக. கனியாலும் சுளையாலும் விளைந்த ஊழ்படுதேறல் என்றுமாம்; ஊழ் படு - முறைமைப்பட்ட. உண்ணுநர்த் தடுத்த என்னும் அடை கனிக்கும் பொருந்தும். வாழைக் கனியையும் பலவின் சுளையையும் உண்டு, அவற்றால் விளைந்த தேறலையும் அறியாது மாந்திய கடுவன் என்றுரைத்தலும் பொருந்தும். அறியா துண்டல் - நீர் வேட்கையால் இதனைத் தேறலென் றறியாது நீரென்றுண்டல். சாந்த மேறாது என்றது மரமாயிற் சந்தனமே ஆண்டுள்ள தென்னுங் குறிப்பிற்று. வீ அடுக்கம் - பூப்படுக்கை. குறியா இன்பம் - சிந்தனையும் முயற்சியுமின்றி வந்த இன்பம். கடுவனெய்திய குறியா வின்பத்தை அதுவேயன்றி வேறு பல் விலங்கும் எய்தும் நாடென்க. எய்துமென்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. விலங்குமென்னும் உம்மை இழிவு சிறப்பு. வெறுத்தல் - செறிதல், மிகுதல். ஏரினையுடைய தோள் என்க. நிறுப்ப- நின்ற நிலையினின்று அழியாமல் நிறுத்தவும்.
கங்குல் வருதலு முரியை - பகற்குறியே யன்றி இரவுக் குறியில் வருதற்கு முரியை. வேங்கையும் விரிந்தன என்றது தினைப்புனம் அறுத்துத் தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்றபடி; என்னை? வேங்கை மலருங்காலம் தினை முற்றி அறுக்குங் காலமாகலின். இதனாற் பகற்குறி மறுத்ததாம். காவலர் சோர்பத னொற்றி என்பதனால் இரவுக்குறி யருமை கூறி அதுவும் மறுத்ததாம். இரண்டிற்கும் உடம்படுவாள் போன்று இரண்டினையும் மறுத்துத் தோழி வரைவு கடாயினவாறு.
நெடுவெண்டிங்கள் என்பதற்கு நெடும்பொழுது ஒளி செய்யும் நிறைமதியெனப் பொருள் கொண்டு, ஊர்கொண்டன்று என்பதற்குக் குறைவின்றி வட்டமாக ஒளி பரந்தது என்றுரைத்தலுமாம். திங்கள் நிரம்புதலுற்றது என்றமையால் திருமணத்திற்குரிய நாளாதலும், நொதுமலர் வரைய முற்படுவர் என்பதும் புலப்படுத்தி, விரைவில் வரைந்து கொள்ளுமாறு தூண்டியவாறாயிற்று.