பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3]

களிற்றியானை நிரை


வேங்கை மலர்தலும் மணஞ் செய்யுநாள் குறித்தலாகக் கோடலும் அமையும். உம்மை யெச்சத்திற்கு முடிவு கூறும் [1]சூத்திர வுரையிற் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் “வேங்கையும் . . . ஊர் கொண்டன்றே” என்பதில், இணர் விரிதலும் ஊர் கோடலும் மணஞ் செய்யுங் காலங் குறித்தலின் அவை ஒருவினைப் பாற்படும் என்றுரைத்து, அவ்வும்மை எச்சவும்மையாதற் கிழுக்கின்மை தெரித்தமை அறியற்பாலது.

களிற்றியானை நிரையின் குறிப்புரையாசிரியர் 'நெடுவெண்டிங்க ளென்றார்; ஆதித்தனுக்கு மேலாகலான்' எனக் கூறியது பௌராணிக மதம்.

“மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா நயின்றிள மந்திகள் சோரு மிருஞ்சிலம்பா
மெய்யா வரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின்
மொய்யா ரிளவள வேங்கைபொன் மாலையின் முன்னினவே”


என்னும் திருச்சிற்றம்பலக்கோவைச் செய்யுளும், அதனுரையும் இச் செய்யுளின் கருத்துக்களைக் கொண்டு இயன்றிருப்பது அறிந்து இன்புறற்பாலது.

(உள்ளுறை) கடுவனானது தேனை அறியாது நுகர்ந்து, பின்பு தன்றொழிலாகிய மரமேறலு மாட்டாது, பிறிதோரிடத்திற் செல்லவு மாட்டாது, அயலதாகிய சந்தன மரத்தின் நிழலிற் பூமேலே உறங்குகின்றாற் போல, நீயும் இக் களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி, இக் களவினை நீங்கி வரையவு மாட்டாது, இக் களவொழுக்கமாகிய இன்பத்திலே மயங்கா நின்றாய் என்றவாறு.

(மே - ள்.) [2]'நாற்றமும் தோற்றமும்' என்னும் சூத்திர வுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, “விலங்கும் எய்தும் நாட” என்று அந் நாட்டினை இறப்பக் கூறி, இந் நாடுடைமையிற் 'குறித்த இன்பம் நினக்கெவ னரிய' என வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனால் தினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும் 'கங்குல் வருதலு முரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி 'நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே' என்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்ல நாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க” என்றார் நச்.



3. பாலை

[முன்னொரு காலத்து நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப் பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப் பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.]



  1. 1. தொல். எச்ச. ௪௦.
  2. 2. தொல். களவு. ௨௩.