பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௧௧௮

அகநானூறு

[பாட்டு



ரு) நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்

க0) விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும்
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்

கரு) பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே.

- சீத்தலைச் சாத்தனார்.


(சொ - ள்.) க-ரு, தோழி வாழி - , இருள் அற விசும்பு உடன் விளங்கும் - இருள் நீங்க வானிட மெல்லாம் விளங்குதற்கு ஏதுவாய, விரை செலல் திகிரி - விரைந்து செல்லும் ஞாயிற்றின், கடுங் கதிர் எறித்த - கடிய கதிர் எறித்தலாலாகிய, விடுவாய் நிறைய - பிளப்பிடம் நிறையும்படி, நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய் - நீண்ட அடியினையுடைய முருங்கையின் வெள்ளிய பூக்கள் பரக்க, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை - நீர் அற்றுப் போயதால் வறட்சியுற்றதும் செல்லத் தொலையாததுமாய நீண்ட இடத்தினை யுடைய,

௬-க௬. வள் எயிற்றுச் செந்நாய் - கூரிய பற்களை யுடைய செந்நாய், வருந்து பசிப் பிணவொடு - பசியால் வருந்துந் தன் பிண வோடு, கள்ளிக் காட்ட கடத்திடை - கள்ளிக் காட்டினையுடைய கடத்திலே, உழிஞ்சில் - (கோழரையினதாகிய) வாகை மரத்தினை, உள் ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை - உள்ளிருக்கும் ஊன்வாடப் பெற்ற சுரிந்த மூக்கினையுடைய சிறு நத்தைகள், பொரியரை புதைத்த - பொரியரையுடையது போலாக மூடிக்கொண்டிருக்கும், புலம்பு கொள் இயவின் - தனிமை கொண்ட நெறியில், விழுத் தொடை மறவர் வில்லிட - சிறந்த அம்பினை மறவர்கள் வில்லில் வைத்தெய்ய, வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் - இறந்து கிடப்போரது (பெயரும் பீடும் எழுதிய) எழுத்துக்களையுடைய நடுகல்லின் இனிய நிழலிலே தங்கியிருக்கும், அருஞ் சுரக் கவலை நீந்தி - அரிய பாலையிலே கவர்பட்ட நெறியினைக் கடந்து, என்றும் இல்லோர்க்கு இல்லென்று - எந்நாளும் வறியார்க்கு இல்லை யென்று கூறி, இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப - இயைவதைச் செய்யாது கரத்தல் மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலின், நம்மினும் பொருளே காதலர் காதல் - நம் காதலர் காதலித்தது நம்மினுங் காட்டில் பொருளேயாகும், அருளே காதலர் என்றி நீயே - நீயோ காதலர் காதல் நம்பால் அருள் செயலே என்னா நின்றாய்; அறியாய் - ஆதலால் நீ அறியாய்காண்.