பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦களிற்றியானை நிரை[பாட்டு

 


இருங்கழி முதலி மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்றிளைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய

௫)மான்றுவேட் டெழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதி உவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை

௧௦)கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
[1]புல்லிலை மராஅத்த அகன்சே ணத்தங்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டி
பின்னின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா

௧௫)கவிரித ழன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்கம்
நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே.

-எயினந்தை மகனார் இளங்கீரனார்.

(சொ - ள்)௧-௧௧. இருங் கழி முதலை மேஎம் தோல் அன்ன = பெரிய உப்பங்கழியிலுள்ள முதலையிடத்துப் பொருந்திய தோலை யொத்த, கருங்கால் ஓமை காண்பு இன் பெருஞ்சினை = கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் காண்டற்கினிய பெரிய கிளையின், கடியுடை நனந்தலை = காவலையுடைய அகன்ற இடத்தில், ஈன்று இளைப்பட்ட கொடுவாய்ப் பேடைக்கு = ஈன்று காவற்பட்ட வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு, அலகு இரை தரீஇய = மிக்க இரையைக் கொணர்ந்து தரும்பொருட்டு, மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை = மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த செவியினையுடைய எருவைச் சேவலானது, வான்தோய் சிமைய விறல் வரைக் கவான் = வானை அளாவிய உச்சியினையுடைய சிறப்பு வாய்ந்த மலையின் சாரலில், துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி = அசைந்த நடையையுடைய மரையாவை வலப்பக்கத்தே வீழக் கொன்று வீழ்த்தி, ஒண் செங் குருதி உவறி உண்டு அருந்துபு = அதன் ஒள்ளிய சிவந்த குருதியை ஊற்றியுண்டு ஆர்ந்து, புலவுப் புலி துறந்த = புலால் நாறும் புலி கைவிட்டுப் போன, கலவுக் கழி கடுமுடை = மூட்டுவாய் கழிந்த மிக்க முடை வீசும் புலாலை, கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் = கொள்ளை புரியும் மாந்தரைப்போல விடாது கவர்ந்து செல்லும் (இடமாகிய), புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் = புல்லிய இலைகளையுடைய மராமரங்களைக் கொண்ட அகன்ற நெடிய நெறியில்,


  1. (பாடம்) 1. புல்லிலை யாஅத்த