பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59]

களிற்றியானை நிரை

௧௨௯

________________


வளர்தல். இடம் பார்த்து: இடம் - காலம். ஒற்றி நிற்கும் நிலையென விரித்துரைக்க.

எல்லோரும் இனிது உறங்கும் கங்குலில் தான் உறக்கமின்றி இங்ஙனம் நிற்கும் நிலை இனிதாயிற்றென்று தலைவி கூறினும், குறிப்பினால் வாடையால் எய்திய வருத்தத்தை உணர்த்தினாள் ஆவள் என்க. கொடிச்சியர் தந்தையர் தாம் செய்தொழிற்கு இடம் பெறாது கூதிர்க் காலத்து இல்லிலே செறியும் குன்ற நாட என்றது, புறத்து வினையில்லாக் காலத்து எம்மை நினைக்கின்றாய் என்னுங் குறிப்பிற்று.

(மே - ள்.) 1‘மறைந்தவற் காண்டல்' என்னுஞ் சூத்திரத்து, 'பெற்றவழி மலியினும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்.

2‘வினையுயிர் மெலிவிடத்து' என்னுஞ் சூத்திரத்து, உயிர் மெலிந்த விடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டவை யின்றியும் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு, 'வனைந்துவரல் . . . இனிதாகின்றே ' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர் பேரா.



59. பாலை


[தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.]


தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை

ரு) அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போலப்
புன்றலை மடப்பிடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே தோழி

க0) சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
3சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
இன்றீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறம்

கரு) தாம்பா ராட்டிய காலையும் உள்ளார்
வீங்கிறைப் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்
டருஞ்செயற் பொருட்பிணி முன்னிநப்
பிரிந்துசேண் உறைநர் சென்ற ஆறே.

--மதுரை மருதனிளநாகன்.



1. தொல். கள. ௨௦. 2. தொல். மெய்ப். ௨௦. (பாடம்.) 3. சீர்மிகு முருகன்.