௧௩௪
அகநானூறு
[பாட்டு
தோர் - பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி மரித்தோர், நோற்றோர் மன்ற உறுதியாக நோற்றோராவர், என - என வற்புறுத்தி, தாள் வலம் படுப்ப- ஊக்கத்தினை வெற்றி யுறுவிக்க, சேட்புலம் படர்ந்தோர் - சேணிலத்தே வினைவயிற் பிரிந்தோர்,
ரு-கஅ. தாழாது உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு - தாழ்க்காது இடியென ஒலிக்கும் ஊக்கத்துடன், பைங்கால் வரி மாண் நோன் ஞாண் வெஞ்சிலைக் கொளீஇ - பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிய வில்லில் வலிய நாணினைக் கொளுத்தி, அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்-பகைவரது அரிய மார்பிற் செலுத்தும் அம்பினை யுடைய இளையர் பலருடன், அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளைக் கொண்டு, நறவு நொடை நெல்லின் நாண் மகிழ் அயரும் - அக் கோட்டுடன் கள்ளினை விற்றுக் கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும், கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான் - கழலினைத் தரித்த திருந்திய அடியினையுடைய கள்வர் பெருமானாகிய, மழபுலம் வணக்கிய - மழவரது நிலத்தை வணங்கச் செய்த, மாவண் புல்லி - மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது, விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் - திருவிழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கடத்தைப் பெறுவதாயினும், முனா அது - மிகப் பழமை வாய்ந்த, முழவு உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி- முழவினை யொத்த வலிய தோளினை யுடைய பெரிய வேளாகிய ஆவியின், பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன - பொன் மிக்க பெரிய நகரமாகிய பொதினியை ஒத்த, நின் ஒண் கேழ் வனமுலைப் பொலிந்த - நினது ஒளி விளங்கும் அழகிய முலையாற் சிறந்த, நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்து - நுண்ணிய பூணினை யணிந்த ஆகத்திற் பொருந்துதலை மறந்து, பழகுவர் ஆதலோ அரிது . ஆங்குப் பழகி யிருத்தல் இல்லையாகும்.
(முடிபு) தோழி வாழி! நீ நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல்; சேட்புலம் படர்ந்தோர் புல்லி வேங்கடம் பெறினும் நின் ஆகம் பொருந்துதல் மறந்து பழகுவர் ஆதல் அரிது.
(வி-ரை.) கூற்றங் கோடலுற விளிதலாவது - ஒருவர்க்கும் பயனின்றி வறிதே மரித்தல். பிறர் கொள விளிதல் - பிறர்க்குத் தம் பொருளை உதவிப் பயன்பட்டு மரித்தல். இதற்கு அமர்க்களத்தில் உயிர் துறத்தல் என்று பொருள் கொள்வர் நச். அவர் கருத்தின்படி தலைவன் வினை வயிற் பிரிந்தானாம். என - என்று வற்புறுத்தி என ஒரு சொல் வருவித்துரைக்க; எனவே உதவி செய்தற்காகப் பொரு ளீட்டவேண்டு மென்றார் என்றாளாம். நாள் இழை நெடுஞ் சுவர் - நாடோறும் ஒவ்வொரு கோடாகப் பிரிந்த நாட்களிற் கீறிவைத்துள்ள நெடிய சுவர். காலினையும் வரியினையுமுடைய சிலையில் ஞாண் கொளீஇ என்க. மழபுலம் வணக்கிய - மழவர் தேயத்தை வணக்கி அவர்பால் திறைகொண்ட. பழகுவராதல் - பயின்று தங்குதல். முனாஅது பொதினி என்க ; பொதினி - பழனி. நுண் பூண் - நுண்ணிய தொழிலுடைய பூண்.