பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨அகநானூறு[பாட்டு

புணர்த்தும்' எனவும் போந்த வழுவமைதியால்; பின்னரும் ஆண்டாண்டு இங்ஙனம் வருதல் இவ் விதியின்பாற்படும் என்க. செவ்வாய் முதலியன விலங்கும் என்றது, முன் தலைவியின் உரு வெளிப்பட்டுத் தடுத்தமை கருதியாகும். களையுமாறு என்பது களைமா எனத் திரிந்தது. குழைக்கு - குழையொடு; வேற்றுமை மயக்கம்.

(மே-ள்) இச் செய்யுளில் 'பின்னின்று. . களைமா' என்பதனை மறுத்துரைப்பது போல நெஞ்சினை இளிவரல் பற்றிக் கூறியது என்றார் நச்.

1'இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திர வுரையில், எதிர் பெய்து பரிதல் என்பதற்கு 'அந்தீங் கிளவி . . ஞான்றே' என்பதனை எடுத்துக் காட்டினர் பேரா.


4. முல்லை

[தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.]


முல்லை 2வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப

௫)மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
3நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்

௧௦)பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா 4ஆர்த்த மாண்வினைத் தேரன்
5உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாஅது

௧௫)நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே.

-குறுங்குடி மருதனார்.

(சொ-ள்.) ௧௭. ஆய்தொடி அரிவை - ஆராய்ந்த வளையினையுடைய அரிவையே,

௧-௭. முல்லை வை நுனை தோன்ற = முல்லையினது கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்றவும், இல்லமொடு பைங்கால்


1. தொல். மெய்ப்பாடு, ௩௧. (பாடம்) 2. வைந்நுதி. 3. நரம்பார்ப்பன்ன. 4. யாத்த. 5. உதுக்காண்.