௧௬௬
அகநானூறு
[பாட்டு
(மே - ள்.) 1'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், தலைவனது காமக் கிழத்தியாய இளமைப் பருவத் தாளொருத்தி, தன்பாற் றலைவன் வருவது பற்றித் தலைவி புலந்ததாகக் கேட்டவழிப் பெருமிதம் கொண்டு கூறியதாகும் என்பர் நச்.
[தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.]
நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப்
பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற
ரு) இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க்
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த
க0) தறுக ணாளர் குடர்தரீஇத் தெறுவரச்
செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங்
கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப்
புல்லரை யித்திப் புகர்படு நீழல்
எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை
கரு) வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை
ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த
திருந்திலை யெஃகம் போல
அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே.
- மருத னிளநாகனார்.
(சொ - ள்.) ௪. நெஞ்சே வாழிய -,
க-௪. நன்னுதல் பசப்பவும் - நம் தலைவியின் ஒள்ளிய நெற்றி பசந்திடவும், ஆள்வினை தரீஇயர் - முயற்சியால் பொருள் ஈட்டுதற்கு, துன் அருங் கானம் - அடை தற்கரிய காட்டு நெறியில், துன்னுதல் நன்றென - செல்லுதல் நன்றென எண்ணி, பின்னின்று - என் பின்னே நின்று, சூழ்ந்தனையாயின் - எண்ணுதியாயின், நன்று இன்னா சூழ்ந்திசின் - மிகவும் கொடியவற்றை ஆய்ந்து கொண்டனை யாவாய்; (எதனா லெனின்),
௪-௬. வெய்து உற இடி உமிழ் வானம் - இடிகளை உமிழும் மேகம் வெம்மை மிக, நீங்கி - மழை பெய்யாது நீங்குதலால், யாங்க
1. தொல். கற். 40.