பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93]

களிற்றியானை நிரை

௧௯௭/197


க-௩. கேள் கேடு ஊன்றவும் - உறவினரைக் கேட்டினை நீக்கித் தாங்கவும், கிளைஞர் ஆரவும் - கிளைகளாயுள்ளார் உண்ணவும், கேள் அல் கேளிர் கெழீயினர் ஒழுகவும் - நொதுமலாளர் கெழுதகையினராகி ஒழுகவும் வேண்டி, ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு - பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதாய ஊக்கங்கொண்டு, புகல் சிறந்து - விருப்பம் மிக்கு,

௪-எ. ஆரம் கண்ணி அடுபோர்ச் சோழர் - ஆத்திமாலை யணிந்த அடும் போரினையுடைய சோழரது, அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன - அறம் பொருந்திய நல்ல அவையினையுடைய உறையூரை யொத்த, பெறல் அரும் நன்கலன் எய்தி - பெறுதற்கு அரிய நல்ல அணிகலன்களை எய்தி, நாடும் செயல் அரும் செய்வினை முற்றினம் ஆயின் - யாவரும் விரும்பும் செய்தற்கரிய பொருள் செய்வினையினை நாம் முடித்தனம் ஆதலின், -

அ-கக. அரண் பல கடந்த முரண் கொள் தானை - பகைவர் அரண்கள் பலவற்றை வென்ற மாறுபாடு கொண்ட தானையினை யுடைய, வாடா வேம்பின் வழுதி - வாடாத வேப்பமாலையினைத் தரித்த பாண்டியனது, கூடல் நாள் அங்காடி நாறும் - மதுரையின் காலைக் கடை வீதியென மணக்கும், நறு நுதல் நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு - நறிய நெற்றியினையும் நீண்ட கரிய கூந்தலினையுமுடைய மாமை நிறத்தாளாய நம் தலைவியுடன்,

கஉ--ரு. வரை குயின்றன்ன வான்தோய் நெடுநகர் - மலையைக் குடைந் தியற்றியதை யொத்த வானை அளாவிய நீண்ட மனையின் கண்ணே, நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை - நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூக்களாலாய படுக்கையையுடைய, நிவந்தபள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து - ஓங்கிய கட்டிலினிடத்து நெடிய விளக்கின் ஒளியிலே, நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப - நன்மை பொருந்திய நம் மார்பிலே தலைவியின் மார்பகத்துப் பூண்கள் வடுக்களைச் செய்ய,

க௬-உ௩. வரி நுதல் - வரி பொருந்திய நெற்றியினையும், வயம் திகழ்பு இமிழ்தரும் - வலி விளங்குதலின் முழங்கும், வாய் புகு கடாத்து - வாயிற் புகும் மதத்தினையும், மீளி மொய்ம்பொடு - கூற்றுவனை யொத்த வலியுடன், நிலன் எறியா - நிலத்தின்கண்ணே சுருட்டி எறிந்து, குறுகி ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக்கை - நெருங்கி வந்து ஆட்களைக் கொல்லுதலைத் தப்பாத அச்சம் வருகின்ற பெரிய கையினையும் உடைய, கடும் பகட்டு யானை - கடிய பெரிய யானைப் படையினையும், நெடுந் தேர்க் கோதை - நெடிய தேர்ப் படையினையுமுடைய சேரனது, திருமா வியன் நகர்க்கா முன்றுறை - செல்வம் மிக்க சிறந்த அகன்ற நகராகிய கருவூரின் துறைமுன், தெள் நீர் - தெளிந்த நீரினையுடைய, தண் ஆன் பொருநை - தண்ணிய ஆன் பொருநை என்னும் ஆற்றின், உயர் கரை குவைஇய - உயர்ந்த கரைக்கண் குவிந்துள, மணலினும் பல - மணலினும் பலவாக,