பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦௦/200

அகநானூறு

[பாட்டு


தொடுத்த நீர்வார் கண்ணியன் - வண்டுகள் மொய்க்கத் தொடுத்த நீர் ஒழுகுகின்ற கண்ணியனாய், ஐதுபடு கொள்ளி அங்கை காய - மென்மை வாய்ந்த கொள்ளியின் தீயில் அகங்கை காய்ந்திட, கூர் இருள் குறு நரி உளம்பும் நெடு விளி - மிக்க இருளில் குறு நரிகளை அலைத்தோட்டும் நீண்ட ஒலி,

கூ- கஉ. சிறு கண் பன்றிப் பெருநிரை கடிய - சிறிய கண்ணினையுடைய பன்றியின் பெருங் கூட்டத்தை ஓட்டற்கு, முதைப்புனங் காவலர் - முற்றிய தினைப்புனம் காத்திருப்போர், நினைத்திருந்து ஊதும் கருங் கோட்டு ஓசையொடு - அவை வருங்காலத்தை எண்ணியிருந்து ஊதும் பெரிய கொம்பின் ஓசையோடு, ஒருங்குவந் திசைக்கும் - ஒரு சேர வந்தொலிக்கும், வன் புலக் காட்டு நாட்டதுவே - வன்புலமாகிய காட்டின் அகத்ததாகிய நாட்டினிடத்ததாகும்; (பாக! விரைந்து தேரினைச் செலுத்து வாயாக.)

(முடிபு) (பாக!) திருந்திழையூர், கங்குலில் இடையன் குறு நரி உளம்பும் நெடுவிளி புனங் காவலர் ஊதும் கோட்டோசையொடு ஒருங்கு வந்திசைக்கும் காட்டு நாட்டதுவே, (ஆகலின் தேரை விரைந்து செலுத்துவாயாக.)

(வி - ரை.) தேம் - தேன் ; தேனிறால், குழைதல் - தழைத்தல், வான் எனப் பூத்த - வான் மீனைப் பூத்தாற்போலத் தோன்றுமாறு பூத்த என்று விரித்துரைக்க. துரூஉ - செம்மறியாடு. மறி - குட்டி. பறி - மழையைத் தடுப்பதற்கு ஒலைப் பாயால் வளைத்து இயற்றிய குடலை. தொகுத்த இடையன் என இயையும். கொள்ளியில் கையை காய்த்திக்கொண்டு நரியை ஓட்டுவன் என்க. குறு நரி - ஆட்டு மறியை வௌவுதற்கு வருவது. குறு நரி, நெடு விளி ; சிறு கண், பெருநிரை ; என்பன முரண் என்னும் அணி. வன் புலம் - குறிஞ்சியும் முல்லையும். அன்பு - ஒருவரை யொருவர் இன்றியமையாமை. ஆர்வம் - விருப்பம்.

தலைமகன் பாங்கற்குச் சொற்றது என்பது துறையாயின் களவுக் காலத்துப் பாங்கற் கூட்டத்துத் தலைவன் பாங்கற்குத் தலைவியின் இடங் கூறுதலாம். இது முல்லையிற் களவு நிகழ்ந்ததாதலின், திணை மயக்கமாம். 1'திணை மயக் குறுதலும் கடிநிலை யிலவே' என்ப வாகலின்.

(மே - ள்.) 2'புணர்தல் பிரிதல்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், 'இருத்தல் நிமித்தமாம், இக்காலம் வருந்துணையும் ஆற்றினாள் எனத் தான் வருந்துதலின்' என்றார் நச்.




1. தொல். அகத், கஉ. 2. தொல், அகத், க௪.