பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨௪/224்

அகநானூறு

[பாட்டு



ரு) துறைகே ழூரன் பெண்டுதன் கொழுநனை
 
நம்மொடு புலக்கும் என்ப நாமது
செய்யா மாயினும் உய்யா மையின்
செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
க௦) யொளிறுவாட் டானைக் கொற்றச் செழியன்

வெளிறில் கற்பின் மண்டமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே.


--- ஆலங்குடி வங்கனார்.


(சொ - ள்.) ௯. தோழி -,

க-௬. எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து - தீ கிளைத் தெரிந் தாற் போலும் தாமரைப் பூக்களையுடைய வயலில், பொரி அகைந்தன்ன பொங்கு பல சிறுமீன் உணீஇயர் - நெற்பொரி முதலியன தெறித்தாற் போன்று விளங்கும் பல சிறிய மீன்களை உண்ணும் பொருட்டு, வெறிகொள் பாசடை - மணங்கொண்ட பசிய இலையில், பறைதபு முதுசிரல் - பறத்தல் ஒழிந்த முதிய சிச்சிலிப் பறவை, பைப்பய அசைபு வந்திருக்கும் - மெல்ல மெல்ல அசைந்து வந்திருக்கும், துறைகேழ் ஊரன் பெண்டு - துறை பொருந்திய ஊரனது மனைவி, தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப - தன் கணவனை நம்மொடு கூட்டி வெறுத்துப் பேசுகின்றாள் என்பர்;

௬--எ. நாம் அது செய்யாம் ஆயினும் உய்யாமையின் - நாம் அதற்கேதுவாய தொன்றும் செய்யாம் ஆயினும் அவள் கூறும் பழி யினின்றும் நீங்க மாட்டாமையின்,

க0-௩. ஒளிறு வாள் தானை கொற்றச் செழியன் - விளங்கும் வாட் படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன், வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் - குற்றமில்லாத படைப் பயிற்சியொடு கூடி நெருங்கிய போரில் அடுந்தோறும், களிறுபெறு வல்சிப் பாணன் எறியும் - களிறாகிய உணவினைப் பெறும் பாணன் அடிக்கும், தண்ணுமைக் கண்ணின் - மத்தளத்தின் கண்போல, தன் வயிறு அலைஇயர் - அவள் தன் வயிற்றை அலைக்கும்படி,

அ-௯. செறி தொடி தெளிர்ப்ப வீசி - செறிந்த வளை ஒலித்திடக் கையை வீசி, சிறிது அவண் உலமந்து வருகம் - சிறிது பொழுது அவ் விடத்தே உலாவி வருவோம், சென்மோ - வருவாயாக.

(முடிபு) தோழி! துறை கேழ் ஊரன் பெண்டு, தன் கொழுநனை நம் மொடு புலக்கும் என்ப; நாம் அது செய்யாமாயினும் உய்யாமையின், செழியன் அமர் அடுதொறும் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின், தன் வயிறு அலைஇயர், சிறிது அவண் உலமந்து வருகம், சென்மோ.

(வி - ரை.) தெளிர்த்தல் - ஒலித்தல். சென்மோ - வாராய் என்றபடி. மோ, முன்னிலை யசை. கற்பு - கல்வி, படைக்கலப் பயிற்சி.