பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦களிற்றியானை நிரை[பாட்டு

சேரி. தொண்டி என்பதொரு பதி சோழநாட்டுக் கடற்கரைக்கண்ணிருப்பினும், இவ்வாசிரியர் பிற இடங்களில் சேரனுடைய தொண்டி, மாந்தை என்பனவற்றைப் பாடியிருத்தலின், இங்குக் குறித்த தொண்டியும் சேரர் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியே யாதல் வேண்டும். 1'தோளும் கூந்தலும் பலபா ராட்டி, வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி யன்ன, எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே' என்பது காண்க. நலம் இவட்கு உரித்தாக வரைந்துகொண்டு போகவேண்டும் என்றது; அன்றாயின், இவள் இறந்துபடுவள் என்பது தோன்றக் கூறியபடி.

(உ - றை.) 'பழந்திமில். . . கொண்டி' என்பதற்குப் "பரதவர் தாம் அழிவு கோத்த திமிலானும் பண்ணின வலையானும் தமது தொழிலாகிய வேட்டைமேற் செல்லாது தேடாமல் வந்த இழிந்த சுறாமீனை அகப்படுத்து, அதனை அழித்துக் கூறுவைத்து எல்லாரையும் அழைத்தாற்போல, நீயிரும் நுமக்கு உறுதியாக ஆக்கிக்கொள்ளப்பட்ட நன்மைகளான் நுமக்கு ஒழுக்கமாகிய நல்வழியின் ஒழுகாது, கண்டோரிகழ்ந்த களவொழுக்கிலே ஒழுகி, இக் களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணா நின்றீர்" என்பர் குறிப்புரைகாரர்.


11. பாலை

[தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.]


வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அம்காட்
டிலையிலை மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகு பெடுத்த

௫)அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றிக்
கயந்துகள் ஆகிய பயந்தபு கானம்
எம்மொடு கழிந்தன ராயின் கம்மென
வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்

௧௦)மெய்புகு வன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே நயவர
நீர்வார் நிகர்மலர் கடுப்ப ஓமறந்
தறுகுள நிறைக்குந போல அல்கலும்
அழுதன் மேவல வாகிப்

௧௫)பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே.

-ஔவையார்.


1. ஐங். ௧௭௮.