பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் தடித்த எழுத்துக்கள்==

அகநானூறு

௧ - ௨. கார்விரி கொன்றைப் பொன் நேர் புதுமலர் = கார்காலத்தில் விரியும் பொன்னை யொத்த கொன்றையின் புதிய மலர்களாலாய, தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் = தாரினை யுடையன் மாலையினை யுடையன் சூடிய கண்ணியை யுடையன்;

௩ - ௭. மார்பினஃதே மைஇல் நுண்ஞாண் = அவன் மார்பின் கண்ணது குற்றமற்ற நுண்ணிய பூணூலாகும், நுதலது இமையா நாட்டம்= அவன் நெற்றியினிடத்தது இமைத்தலில்லாத கண், கையது இகல் அட்டு கணிச்சியொடு மழு = கையினிடத்தது பகைவரைக் கொன்று குந்தாலியுடன் விளங்கும் மழுப்படை, அ தோலாதோற்கு = அந்தத் தோல்வி யில்லாதாற்கு, மூவாய் வேலும் உண்டு = மூன்று தலையினையுடைய சூலப்படையும் உண்டு, ஊர்ந்த்து ஏறு = அவன் ஏறி நடாத்தியது ஆனேறு, சேர்ந்தோள் உமையே = அவனது ஒரு கூற்றில் உறைபவள் உமையாவள்;

௧௬. தா இல் தாள் நீழல் = (அன்ன தன்மையனாகிய இறைவனது) அழிதலில்லாத திருவடி நீழலில், உலகு தவிர்ந்தன்று = உலகம் தங்கிற்று; (ஆகலின் உலகிற்கு இடையூறில்லை என்க).

(முடிபு) மணிமிடற்று அந்தணன் தாரன் மாலையன் கண்ணியன்; அவன் மார்பினஃது ஞாண், நுதலது நாட்டம், கையது மழு; அவற்கு வேலுமுண்டு; அவன் ஊர்ந்தது ஏறு; அவளைச் சேர்ந்தோள் உமை; அவன் தாள் நீழல் உலகம் தவிர்ந்தன்று.

மேனியினையும் எயிற்றையும் சென்னியையும் உடைய அந்தணன் எனவும், தொன்முறை மரபின் அந்தணன் எனவும், உரிவை தைஇய அந்தணன் எனவும், மிடற்று அந்தணன் எனவும் தனித்தனி கூட்டுக.

(விளக்கவுரை) யாழ் என்றது ஆகுபெயரால் மறையிசையைக் குறிக்கும்; அன்றி யாழிசையுடன் பாடும் மிடற்றினையுடையன் என்னலுமாம்; “எம்மிறை நல் வீணை வாசிக்குமே” என்றார் திருநாவுக்கரையரும். தாரன் முதலியவற்றில், தாரும் கண்ணியும் சிறப்பியல்பாக முறையே மார்பிலும் சென்னியிலும் அணிவன; மாலை அழகிற்கு மார்பில் அணிவது. பொன் ஏர் எனப் பிரித்தலுமாம். மார்பினஃது: ஆய்தம் விரித்தல். கணிச்சியொடு விளங்கும் மழுவென்க. தவிர்தல் - தங்குதல். மேனி முதலியவற்றைக் கூறினார், அவ்வுருவைத் தியானம் பண்ணுக எனற்கு.

(மேற்கோள்) 1'இசை திரிந்திசைப்பினும்' என்னும் சூத்திர வுரையில், 'சொல்லொடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டாற் றொடராது பிறிதோர் வாய்பாட்டாற் றொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச் சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படும்' என்று கூறி, அதற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, 'இதற்குக் கொன்றையா லமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சி


1. தொல். பொருளியல், ௧.