பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

களிற்றியானை நிரை

௪௭


சு-அ. கடுங்கண் பன்றியின் நடுங்காது துறந்து- அஞ்சாமையை யுடைய பன்றியைப்போல நடுங்குதலின்றிக் கடந்து ஏறி, நாம அருந்துறை பேர் தந்து யாமத்து ஈங்கும் வருபவோ - (அணங்கு உறைதலின்) அச்சம் தரும் அரிய துறையினைத் தாண்டி நள்ளிரவில் இத்தகைய இடத்தும் மக்கள் வருவாருளரோ,

௯-க௦. ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் என் தோழி வாழ் குவள் அல்லள் - ஒருநாள் நீ துன்பம் உறினும் பின்னாள் என் தோழி உயிர்வாழ்வாள் அல்லள்;

க0-உ. யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்றாக இழுக்குவர் - இடையூறு சிறிதும் இல்லாத வழிகளிலும் அங்குப் பலகாலும் போய் வருவார் நீடுதல் இலையாகத் தவறு எய்துவர்;

கஉ-௩. அதனால் உலமரல் வருத்தம் உறுதும் - அதனால் யாங் கள் மனம் சுழலும் வருத்தத்தினை யடைவோம்;

க௩-அ. அகல் மலை வாங்கு அமைக் கண் இடை கடுப்ப - அகன்ற மலையிலுள்ள வளைந்த மூங்கிலின் கணுக்கட்கு நடுவான இடத்தை யொக்க, யாய் ஓம்பினள் எடுத்த தட மெல் தோள் -யாய் போற்றி வளர்த்த தலைவியின் பெரிய மென்மை வாய்ந்த தோளை, எம் படப்பை - எம் தோட்டத்தினை யடுத்துள்ள, கொடுதேன் இழைத்த - வட்டமாகிய தேனிறால் வைக்கப்பெற்ற, கோடு உயர் நெடு வரை - சிமையம் உயர்ந்த நீண்ட மலைக்கண், பழம் தூங்கு நளிப்பில் - பழங்கள் தொங்குகின்ற மரச்செறிவினுள், காந்தள் அம் பொதும்பில் - காந்தளினுடைய புதரிடத்து, பகல் நீ வரினும் புணர்குவை - பகற்கண் நீ வரினும் பொருந்துவை.

(முடிபு) வெற்ப! கான்யாற்று நீத்தம் நடுங்காது துறந்து யாமத்து ஈங்கும் வருபவோ; என்தோழி வாழ்குவள் அல்லள்; ஊறில் வழிகளும் வழங்குநர் இழுக்குவர்; அதனால் வருத்த முறுதும்; தடமென்றோள் காந்தளம் பொதும்பிற் பகல் வரினும் பெறுகுவை.

கான்யாற்றுச் சுழியையுடைய நீத்தம் எனவும், யானையை யுடைய நீத்தம் எனவும் இயையும்.

(வி - ரை.) உராஅ - அலைய என்றுமாம். நாம - நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பேர் தந்து - பேர்ந்து. ஈங்கு - தன்மைக்கண் வந்தது. அன்றே வாழாள் என்னாது வழிநாள் வாழாள் என்றது, அறிவது பின்னாளிலாகலின். யாய் - செவிலி.

'கொடுந்தேன் ... பொதும்பின்' என்றமையால், இரவுக்குறி விலக்கிப் பகற்குறி உடன்பட்டாள் போலக் கூறினும், தேன் அழிக்க வருவாராலும், பழமெடுக்க வருவாராலும், பூப்பறிக்க வருவாராலும் பகற்குறியும் அரிதாம் என்று குறிப்பால் மறுத்தாளாம்.