முதலாவது
களிற்றியானை நிரை
1.பாலை
[பிரிவிடை யாற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]
வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளாவிி
அறுகோட் டியானைப் பொதினி யாங்கண்
(௫) சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றாம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
(௧௦) அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்
நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச்
(௧௫) சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப்ப ஆருற்
றுடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல காடிறந் தோரே.
—மாமூலனார்.
(சொ-ள்.) எ—௯ தோழி-, சேய் நாட்டு - சேய்மைக்கண்ணுள்ள நாட்டினின்று, பொலம் கல வெறுக்கை தருமார் - பொன்னணி முதலாய செல்வங்களை ஈட்டி வரவேண்டி, சிறந்த வேய் மருள் பணைத்தோள் நெகிழ - சிறந்த மூங்கிலை யொத்த பரிய தோள் மெலியுமாறு (விட்டுப் பிரிந்து),
௯—க௯. நிலம் பக - நிலம் பிளக்குமாறு, அழல்போல் வெங் கதிர் - தீயைப் போன்று வெப்ப மிக்க ஞாயிற்றின் கதிர், பைது அற தெறுதலின் - பசுமையறக் காய்தலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த - நிழல் சுருங்க வற்றிய மரங்களையுடைய, அறை காய்பு - பாறைகள் கொதித்து, அறுநீர் பைஞ் சுனை - நீர் அற்ற பசிய சுனைகளிலும், ஆம் அறப் புலர்தலின் - ஈரம் இல்லையாம்படி காய்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய - அங்குச் சொரியும் நெல்லும் பொரியும் வெம்மையை உடைய, யாவரும் வழங்குநர் இன்மையின் -