பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகநானூறு

பாட்டு

வழிச் செல்வார் யாவரும் இன்மையின், வௌவுநர் மடிய - ஆறலைப்போரும் வறுமையால் மெலிய, சுரம் புல்லென்ற ஆற்ற - சுரம் பொலிவற்ற நெறியினையுடைய, அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான்பூ - அசையுங் கிளையினையுடைய நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள், சூரல் கடு வளி எடுப்ப - கடிய சூறாவளியாகிய காற்று வாரி வீச, ஆர் உற்று - ஆர்த்தலுற்று, உடை திரைப் பிதிர்வில் பொங்கி - உடைந்த திரையின் துளிகளைப்போலப் பரந்து கிடத்தலின், முன் கடல்போல் தோன்றல - கடலின் கரையகம் போலத் தோன்றுதலையுடைய, காடு இறந்தோர் - காட்டினைக் கடந்தேகிய நம் தலைவர்,

(௧-௭.) வண்டுபட ததைந்த கண்ணி - வண்டுகள் மொய்த்திட மலர்ந்த பூக்களாலாகிய கண்ணியினையும், ஒள்கழல் - ஒள்ளிய கழலினையும் உடைய, உருவ குதிரை மழவர் ஓட்டிய - அஞ்சத்தக்க குதிரைகளையுடைய மழவரை வென்றோட்டிய, முருகன் நற்போர் - முருகனைப் போன்ற நல்ல போர் வெற்றியினையுடைய, நெடுவேள் ஆவி - பெருமையுடைய வேளாகிய ஆவி என்பானது, அறுகோட்டு யானை - அறுத்துத் திருத்திய கோட்டினையுடைய யானைகளையுடைய, பொதினி ஆங்கண் - பொதினி மலையாகிய அவ்விடத்திருந்து, சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் பிரியலம் என்ற சொல் தாம் - சிறியனாகிய சாணைக்கல் செய்வோன் அரக்கொடு சேர்த்தியற்றிய கல்லைப்போலப் பிரியேம் என்று கூறிய சொல்லை, மறந்தனர் கொல் - மறந்துவிட்டனரோ?

(முடிபு) தோழி, சேய்நாட்டு வெறுக்கை தருமார் தோள் நெகிழக் காடிறந்தோர், பிரியலம் என்ற சொல் மறந்தனரோ?

மரத்த, வெம்மைய, ஆற்ற, தோன்றல ஆகிய காடு எனவும், தருமார் இறந்தோர் எனவும் கூட்டுக.

(வி-ரை) வண்டுபட - பட: காரணப் பொருட்டு; காரியப் பொருட்டும் ஆம். ததைந்த - சிதறின எனலும் ஆம். வண்டு படத் ததைந்த என்பது சினைக்கு ஏற்ற அடை. உரு - உருவ என ஈறு திரிந்தது; அழகிய குதிரை என்னலுமாம். மழவர் ஓட்டிய; உயர்திணை மருங்கின் இரண்டனுருபு தொக்கு வந்தது. ஓட்டிய ஆவி எனவும், பொதினி யாங்கண் சொல்லிய சொல் எனவும் கூட்டுக. அறுகு ஓட்டு எனப் பிரித்துச் சிங்கத்தை வென்ற எனலுமாம். பொதினி - ஆவியின் மலை; பழனி. 'நெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி' (61) எனவும், 'சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்' (356) எனவும் பின்னர் வருவன அறியற் பாலன.

(மே-ள்) 1'முதல் கரு உரிப்பொருள்' என்னுஞ் சூத்திர வுரையில் இச்செய்யுளை எடுத்துக்காட்டி, பாலைக்கு முதலுங் கருவும் வந்து முதற்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார் நச்.


 

1. தொல். அகத். ௩.