பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௯௬

அகநானூறு

[பாட்டு



குன்றுகண் டன்ன கோட்ட யாவையுஞ்
சென்று1சேக் கல்லாப் புள்ள உள்ளில்
என்றுழ் வியன்குளம் நிறைய வீசிப்
க0) பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோ ருவந்த உவகை எல்லாம்
என்னுட் பெய்தந் தற்றே சேணிடை
ஓங்கித் தோன்று முயர்வரை
வான்றோய் வெற்பன் வந்த மாறே.

- கபிலர்.

(சொ - ள்.) க-ச. மலிபெயல் கலித்த - மிக்க பெயலாலே தழைத்த, மாரிப் பித்திகத்து - மாரிக்காலத்துப் பூப்பதாய பித்திகத்தின், கொயல் அரும் நிலைய - மிகுதியால் கொய்தல் இயலா நிலைமையையுடைய, பெயல் ஏர் மண முகை - மழைக்கு எழுச்சி பெற்ற மணம் தங்கிய அரும்பின், செவ் வெரிந் உறழும் - சிவந்த பின்புறத்தை ஒக்கும், கொழுங்கடை மழைக்கண் - வளவிய கடையினை யுடைய குளிர்ந்த கண்ணினையும், தளிர் ஏர் மேனி - தளிரை யொத்த அழகிய மேனியையும் உடைய, மாஅயோயே - மாமை நிறத்தை யுடையவளே!

கஉ-௪. சேண் இடை ஓங்கித் தோன்றும் - நெடுந்தூரத்தே உயர்ந்து தோன்றும், உயர் வரை - உயர்ந்த பக்கமலைகளையுடைய, வான்தோய் வெற்பன் - வானளாவிய பெருமலையை யுடைய தலைவன், வந்த மாறே - வரைவு மலிந்து வந்தமையானே (அது கண்ட என் மகிழ்ச்சி),

ரு-௬. நாடு வறங்கூர நாஞ்சில் துஞ்ச - மழை பெய்யாமையால் நாட்டில் வறுமை மிகக் கலப்பை தொழிலற்று ஒழிய, கோடை நீடிய பைது அறுகாலை - கோடை நீண்ட பசுமையற்ற காலத்தே,

எ-௯. குன்று கண்டன்ன கோட்ட - குன்றங்களைக் கண் டாற்போலும் பெரிய கரைகளை யுடையனவும், சென்று சேக்கல்லாப் புள்ள - நீரின்மையின் பறவைகள் வந்து தங்குதலில்லாதனவும், உள் இல் என் வாழ் வியன் குளம் யாவையும் - உள்ளே நீர் இல்லாதனவும் வெப்பம் மிக்கனவுமாகிய பெரிய குளங்களெல்லாம்,

௯- க0. நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த - நிறையும்படி உதவிப் பெரிய மழை பொழிந்துவிட்ட, ஏம வைகறை - இன்பம் மிக்க விடியற்காலத்தே, பல்லோர் உவந்த உவகை யெல்லாம் - அதனைக் கண்ட பல்லோரும் மகிழ்ந்த மகிழ்ச்சியை யெல்லாம், என்னுட் பெய்தந் தற்றே - ஒரு சேர என்னுள்ளே பெய்து வைத்தாற் போலும்.

(முடிபு) மாயோய்! வெற்பன் வந்த மாறே, (என் மகிழ்ச்சி) பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, பல்லோர் உவந்த உவகை யெல்லாம் என்னுட் பெய்தந்தற்று.


1. சேர்கல்லா.