பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அகநானூறு -களிற்றியானை நிரை



நம்முடைய வேந்தனும், போர்முனை கருதிவந்து, எடுத்த வினையையும் வெற்றியுடன் முடித்து விட்டான். பகைவர்களும், தாம் பணிந்து, தம்முடைய திறைகளைச் செலுத்தி, நம்மைச் சார்ந்த சிற்றரசர்களாயினர். தமக்குள் பகைமையினால் செறிவுற்றிருந்த இருபக்கத்துச் சேனைகளும், ஒரே சேனையாகப் போர் நின்றதனால் முரசறையப் பெற்றன.

நன்னனும், ஏற்றையும், நல்ல பூண்களை அணிந்த அத்தியும், பகைவர் நெருங்குதற்கு அரிய கடுமையான ஆற்றலினையுடையகங்கன் கட்டி முதலாயினோரும், வலிய வில்லாற்றலை உடைய பொன்னணிகள் பூண்ட புன்றுறை என்பானும், என்று கூறப்பெற்ற சேரர்களின் படைத் தலைவர்களாகிய அவர்கள். அனைவரும், ஒன்றுகூடிப் போரிடுவதற்கு எதிர்த்து நின்ற, அளப்பரும் சிறப்பினையுடைய பாசறையினிடத்தே பருந்தினம் சுற்றிக் கொண்டிருக்கும்படியாகப் போர்செய்து, அதனிடையே சோழர் தளபதியாகிய பழையனும் பட்டனன்.

அதனைக் கண்டு உள்ளம் பொறாதவனாகித், திண்மையான தேரினையுடைய கணையன் என்பான் உட்படக் கழுமலம் என்னுமிடத்தே, எதிரிகளை எல்லாம் வென்று வெற்றி தேடித் தந்தனன், கட்டிய கண்ணியினைச் சூடிய பெரும்பூட் சென்னி என்பவன்.

அவனுடைய 'அழும்பில்’ என்னும் ஊரைப்போன்ற நீங்காத புது வருவாயினை உடையதும், மிக்க பழைய நெல்லினையுடையவான பல குடிப்பரப்பினை உடையதும், யானைகள் படியும் குளத்தினையும் நெருங்கி பசுமையான காவற்காடுகளையும் உடையதுமாகிய, குளிர்ச்சியான குடவாயில் என்னும் ஊரைப்போன்ற சிறப்பினள் நம் தலைவி.

அவளுடைய பண்புகள் நிரம்பிய மார்பகத்து இனிமையான துயிலினைப் பெறவேண்டும். அதற்காகப் பாகனே, முற்பட வேகமாகச் செல்லும் ஊர்தியான நின் தேரினை, இனிப் பின்னிலை பெறச் செய்யாதபடி, இச்சுரத்தினை நாம் விரைந்து கடந்து போகுமாறு, உடன்வரும் பிற தேர்களை எல்லாம் நீங்கினையாய், மேலும் விரைந்து செலுத்துவாயாக.

சொற்பொருள்: 2. தந்திறை - தமக்கு உறுதிப்படுத்திய திறைப் பணம். நன்னன் முதலியோர் சேரனின் படைத் தலைவர்கள். பழையன், சோழனின் படைத்தலைவன். கணையன், சேரனின் படைமுதலி. 18. குடவாயில் - ஓர் ஊர். 15. அழும்பில் - அம்பில் என வழங்கும் ஊர் எனவும், பாண்டிநாட்டு ஒரூர் எனவும் உரைப்பர்.16. பரவை - குடிப்பரப்பு:17. பொங்கடி-யானை, மிளை - காவற்காடு.19. பண்புடை ஆகம் - நாம் செல்லுமளவும் இறந்து படாதாயிற்றிருந்த பண்புடைய மார்பகம்.