பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அகநானூறு -களிற்றியானை நிரை


அகன்ற ஞாயிறு மேற்குமலையைச் சேர்ந்து மறையும். அவ்வேளை, ஒள்ளிய வளையணிந்த மகளிர், மனைவிளக்குகளிலே வெண்மையான திரிகளை இட்டு ஏற்றுவர். அதனால், பெரிய மனைகளினிடத்தே குறுக அடியிட்டு நடக்கும் சிவந்த கால்களையுடைய புறாவின் சேவலானது, தான் விருப்பங் கொண்டுள்ள தன் பெடையினை ஆர்வமுடன் கூவி அழைக்கும். தனிமையோடு வந்து, அளவு கடந்த துன்பத்தைத் தருவது, அம் மாலை வேளை.

நம் தலைவர் இப்போது எவ்விடத்தே உள்ளனரோ என, அவ்வேளையிலே நினைந்து ஏங்கிக் கொண்டிருப்பவள் நம் தலைவி கலங்கி அழுது கொண்டே அவள் இருப்பாள்.

சோர்வில்லாத நம் உள்ளமானது மென்மேலும் ஊக்கத் தால் சிறப்படைந்து, நமது வினையையும் இவ்விடத்தே செய்து முடித்தோமென்றால், இழைகளனிந்த நெடுந்தேரினையும் கைவண்மையினையும் உடைய செழியனது, மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும் வளங்கெழுமிய சிறுமலை என்னும் மலையிலே, கூதளஞ்செடி கமழுகின்ற வெற்பினிடத்தேயுள்ள மூங்கிலைப் போன்ற அவளுடைய பணைத்த தோள்களிலே படர்ந்திருக்கும் பசலை நோய் நீங்குமாறு, அவளை நாம் பன்முறையும் தழுவித் தழுவி மகிழ்வோம் அல்லவோ?

அதனால், எம் நெஞ்சமே! நீ வாழ்க! இப்போதே விரைந்து சென்று, வினைமுடித்தலின் பொருட்டு என்னுடன் எழுவாயாக.

சொற்பொருள்: 1. வழி வழி - மென்மேலும், 4. விலங்கு - பக்கம். 4. கடு வளி உருத்திய - குறைவளி வெப்பமுறப் பண்ணிய, 8. முனை - போர்முனை, அதுபோற் கொடிய வெம்மை என்க.18. தோளிடத்துப் பரந்த நோய் - பசலை. 19. அசா - நோயான் வரும் வருத்தம். i.

விளக்கம்: மனையின்கண் மகளிர் இல்விளக்கேற்றப், புறவுச் சேவல் தன் பெடையை அழைக்க, அதனைக் கேட்ட தலைவி, தன்னையும் அங்ங்ணம் அழைப்பவன் தன்னுடன் இல்லையே என நினைந்து, கலங்கி அழுபவளாவள் என்க.

'செழியனின் சிறுமலை’ என்றது, இந்நாட் கொடைக் கானலைச் சார்ந்திருக்கும் மலைத் தொடருள் ஒரு பகுதியை. இங்கிருந்து கிடைக்கும் வாழைப்பழம் இன்றும் சிறப்பாகச் சிறுமலைப் பழமெனவே விளங்குகின்றது.

48. மற்றிவன் மகனே!

பாடியவர்: தங்கால் முடக்கொற்றனார். திணை: குறிஞ்சி. துறை: செவிலித் தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது.