பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 195


நிலைபெற்றிருக்கின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின் வெப்பமானது விளங்கிப் பரக்கச், சுழன்றுவரும் மேல் காற்றினால், புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கை யினின்றும் முதிர்ந்து கழியும் பல பூக்கள், குளிர்ந்த கார் காலத்திலே விழும் ஆலங்கட்டியினைப்போலப் பரந்தனவாக, உதிர்ந்து கொண்டிருக்கும்.

நடுக்கமுண்டாக்கும் அவ்வழியினூடே, பன்மலையடுக்கு களையும் கடந்து சென்ற நம் தலைவனுக்கு, வெறுக்கத்தக்க பண்பு யாதும், நாம் செய்தோமில்லையே?

சொற்பொருள்: மருங்கில் - மறுமையிலுமாம். இவ்விடத்துப் பின்னாளில் என்க. 4. தகர் - செம்மறிக்கிடாய். 5. சுவல் - பிடரி. பித்தை - ஆணின் மயிர். மழவர் - மழவராகிய ஓரினத்தார். 6. வாய் பகை - இருமல் தும்மல் முதலியன 7. தீப்படு சிறுகோல் - கைப்பந்தமும் ஆம். 8. நுரை - வெண்ணெய்த் துளிர்கள். 9.தொடுதோல் - செருப்பு; தொடுக்கப்பட்ட தோல் என்க. பறைய - இரைச்சலிட. 10. கடிபுலம் - காவலுடைய இடம். 11. நனந்தலை - பரந்த இடம். 14. உருப்பு - வெம்மை . 17. பனிபடு - நடுக்கத்தைப் படுவிக்கும். 18. முனிதகு பண்பு - வெறுக்கத்தக்க, செய்யத்தகாத செயல்.

விளக்கம்: மலையிறந்தோர்க்கு முனிதகு பண்பு. யாம் செய்தறியோம்; அங்ஙனமாகவும் அவர் வரைவினை நீட்டிக் கச்செய்து, நம்மை வருத்தமுறச் செய்கின்றார்; அதனால், ‘நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் பழமொழி இந் நாள் பொய்த்தது போலும் எனத் தலவை கூறி வருந்தினாள் என்க. தோழி கூற்றாகக் கொள்வதானால், இப்படியே நாம் செய்திலமே எனக் கூறினளாம். .

102. முயங்கிப் பெயர்த்தனன்!

பாடியவர்: மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்; மதுரைப் பாலாசிரியர் எனவும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லு வாளாய்த் தலைமகள் சொல்லியது.

'இது மனையகம் புக்கது' என்பர் நச்சினார்க்கினியர்.

(இரவுக் குறியிடத்தே, பலப்பல இடர்ப்பாடுகளையும் கடந்து வந்து, களவிலேகூடி மகிழ்ந்தவன், தன் சொற்படி வந்து தன்னை வரைந்து கொள்ளாமையினால், உள்ளம் வருந்துகிறாள் தலைவி. ‘அன்று இன்சொல் அளை இப் பெயர்ந்தனன்; தோழி, இன்று எவன்கொல்லோ கண்டிகும்?' என்ற ஏக்கத்தின் பெருக்கத்தை ஊன்றி உணர்க.)