பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அகநானூறு -களிற்றியானை நிரை



          உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்
          கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
          உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
          ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா,
          ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி 5

          பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
          குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
          படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
          மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்;
          ஆர மார்பின் வரிஞமிறு ஆர்ப்பத், - 10
 
          தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன்,
          காவலர் அறிதல் ஓம்பிப், பையென
          வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
          உயங்குபடர் அகலம் முயங்கித், தோள்மணந்து
          இன்சொல் அளைஇப், பெயர்ந்தனள் - தோழி! - 15
          
          இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன்
          நல்கா மையின் அம்பல் ஆகி,
          ஒருங்குவந்து உவக்கும் பண்பின்
          இருஞ்சூழ் ஓதி ஒண்துதற் பசப்பே!

தோழி! சிங்கம் போன்ற வலிமையினை உடைய கானவன், பெரிய தினைப்புனத்தின்கண் உயரமாக இடப்பட்டுள்ள பரணிலே, கள்ளுண்டு களித்து இருந்தனன். பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கருங்கூந்தலை, மெல்லென அசைத்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த, தழைத்து நீண்ட அக் கூந்தலைத் தன் கையினால் பெயர்த்துக் கோதியவளாக, அவன் மனைவியானவள், பெரிய வரைப்பக்கத்தே குறிஞ்சிப்பண் பாடினள். அதனைக் கேட்டுத் தான் கொண்ட தினைக்க திரினையும் உட்கொள்ளாது, நின்ற நிலையினின்றும் பெயராது, துயில்வரப் பெறாத தன் பசிய கண்களினும் துயில்வரப் பெற்று, வீரத்தின் புகலிடமாக விளங்கும் இளங்களிறு, ஒய்யென அவ்விடத்தேயே உறங்கிவிடும், அத்தகைய நாட்டையுடையவன் நம் தலைவன்!

சந்தனம் பூசிய மார்பிலே அழகிய வண்டுகள் மொய்க்கத் தாரனும், கண்ணியனும் வேலேந்திய வலக்கையினனுமாகக், காவலாளர் அறிதலையும் இயலாது கரந்து, தாழிடாத கதவைத் திறந்துகொண்டு, மெல்லென வீட்டினுள் வந்தான். யான்வருந்தும் துன்பம் நீங்கிப்போகத் தோளினைத் தழுவித் அணைத்துக் கூடினான். இனிமையான சொற்களைப் பேசி, அளவளாவி விட்டுப் பிரிந்தும் சென்றான்.