பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 239



காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார் (103)

அகத்துள் இந்தப் பாடலும், நற்றிணையுள் 122 - வது பாடலும் இவர் பாடியுள்ளவை. காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர். காரிக்கண்ணனாரின்றும் வேறுபடுத்த இவரைச் செங்கண்ணனார் என்றனர். இது உறுப்பு நலன் கருதி அமைந்த பெயர். ‘தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார் கொல்லோ. நாம் நயந்திசினாரே?’ என, தலைவி பிரிவாற்றாமையினாற் கூறுவதாகச் சொல்லும் இவரது தொடர்கள் மிகவும் நயமுடையனவாகும்.

குடவாயிற் கீரத்தனார் (44, 60, 79, 119)

குடவாயில் சோழநாட்டுப் பேரூர்களுள் ஒன்று. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வழுதி, அத்தி, எவ்வி, பெரும்பூட் சென்னி, பொறையன், கங்கன், கட்டி, கணையன், நன்னன், பழையன், புன்றுறை ஆகியோரை இவர் பாடியுள்ளார். மற்றும், தொண்டி, கொற்கை, உறையூர் ஆகியவையும் இவராற் பாடப் பெற்றுள்ளன. குறு. 2, அக. 10, நற். 4, புறம் 1 ஆக 17 பாடல்கள் இவர் பாடியவை. உறையூர்ச் சல்லியங் குமரனார் பாடியது எனவும், அக. 54 - வது பாடலுக்குப் பாடபேதம் உரைப்பர். 'கீரத்தனார்’ என்ற சொல்லினால், இவர் கீரர் குடியினர் என்க. கழுமலப்போர் இவராற் பாடப்பெற்றிருக்கிறது. சோழர் குடந்தைக்கண் வைத்த பெருநிதியும் பிறவும், இவராற் குறிக்கப் பெற்றுள்ள செய்திகள்.

குறுங்குடி மருதனார் (4)

மருதன் இவரது இயற்பெயர். திருக்குறுங்குடி என வழங்கும் பாண்டி நாட்டு ஊரினர். அகநானூற்று நான்காவது பாடலும், குறுந்தொகை 344 - வது பாடலும் இவர் பாடியன. இவ்விரு பாடல்களும் முல்லைத்திணைப் பாடல்களே. இன்றும் இவ்வூரிலே ஆயர்கள் மிகுதியாயிருக்கக் காணலாம். 'மருதன்' சிவனின் பெயர் என்பர், மருதவாணன் என்றாற்போல. 'கறங்கிசை விழவின் உறந்தை' என, உறையூரையும் இவர் சிறப்பித்துள்ளார். (4) தாதுண்பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்பினைத் தேரன் என, இவர் காதலனின் உள்ளச் செவ்வியைப் புலப்படுத்தியிருக்கின்றமை காண்க .

குன்றியனார் (40, 41)

இவர் மலைநாடாகிய சேரநாட்டைச் சார்ந்தவர். மேலைக் கடற்கரை நகரமாகிய தொண்டியை இவர் வருணிக்கின்றார். 'தலைவனது தேர் வாராதாயினும், தேர் வருவது போன்ற ஒசை காதுகளிலே ஒலித்துக் கொண்டேயிருக்கும்' என்று தலைவியின் மூலமாகக் கூறும் உள்ள நெகிழ்வு மிகவும் சுவையுடையது. இவர்