பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

அகநானூறு -களிற்றியானை நிரை


ஒன்றாகப் 'போத்தரையர்' என்ற பெயர் வழங்கிற்று என்பதையும் நினைக்க, சுகசீவனம் உடையவன் என்பது சொல்லின் பொருள். புலியின் ஆணின் பெயராதலால் வலிமையுடையவர் எனவும் கொள்ளலாம். ‘அடுபுலி முன்பிற் றொடுகழல் மறவர்' என, வீரரை, இவர் இப்பாடலுட் குறித்தது கொண்டு, இப்பெயர் பெற்றனர் எனலுமாம்.

மதுரை மருதன் இளநாகனார் (34, 59, 77, 90, 104)

இவர் பாடியவை அகநானூற்றுள் 21, நற்றிணையுள் 10, புறநானூற்றுள் 2, குறுந்தொகையுள் 4, ஆக 37 செய்யுட்கள். இவர் வேறு; மருதக்கலி பாடிய மருதனிள நாகனார் வேறு என்பர் டாக்டர் உ.வே.சா. பிறர் இருவரும் ஒருவரே எனக் கொள்வர். இவராற் கூறப்படும் பெருமக்கள் நாஞ்சில் வள்ளுவன், பிட்டன், கோசர், வாணன், மாவண், கழுவுள் (அக. 90, 220, 269, 356) ஆகியோர். மருதம் பற்றிய செய்யுட்கள் இயற்றுவதிலே வல்லவர். இறையனாரகப் பொருளுக்கு உரைகண்ட நாற்பத்தொன்பதின்மருள் இவரும் ஒருவர். இவருரை நக்கீரருரைக்கு அடுத்த சிறப்பு உடையது. கண்ணன் கோபியரின் புடவைகளை ஒளித்துவைத்த செய்தியை இவர் குறிப்பிடுகிறார். பரசுராமர் யாகம் செய்ததையும் குறிப்பிடுகிறார். நல்லந்துவனார் என்ற மற்றொரு புலவரைப் போற்றியுள்ளார். நல்ல குடும்பத் தலைவி எப்படியிருக்க வேண்டும்? ‘கடவுட் கற்பொடு குடிவிளக்காகிய புதல்வர்ப் பயந்த புகழ்மிகு சிறப்பின், நன்னராட்டி'யாக விளங்க வேண்டும் என்கிறார் இவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி முதலி யோரும், இவராற் பாடப் பெற்றோராவர்.

மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் (80)

'மருங்கூர்' என்பது பாண்டி நாட்டுத் திருவாடாணைத் தாலுகாவில் உள்ள ஊர் என்பர். நாஞ்சில் நாட்டிலுள்ள மருங்கூர் என்பதும் கருதப்படக் கூடியதே. இவ்வூரவராகச் சேந்தன்குமரன் என்பவரும் காணப்படுகின்றனர். இவர் பாடியது நெய்தலைச் சார்ந்த இந்தச் செய்யுள் ஒன்றேயாகும். அழும்பனுடைய மருங்கூர்ப் பட்டினத்தைச் சார்ந்தவராகவும் இவர் இருக்கலாம் என்பர் சிலர். இவர் பாடிய இப்பாடல் நெய்தலைக் குறித்தது. ஆதலின், மருங்கூர்ப் பட்டினத்தைச் சார்ந்தவர் இவர் எனலே மிகப் பொருத்தம் உடையதாகும்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ (96)

இவர் சேரர் மரபினர், பாலை பாடிய இளங்கடுங்கோவின் தம்பியாயிருக்கலாம் என்பர். இளஞ்சேரல் இரும்பொறை