பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 265


பெரும்பூட் சென்னி (44)

இவனே கழுமலப் போரின் நாயகன். இவன் சோழன் செங்கணான் எனவும் அழைக்கப் பெறுவான். இவனோடு எதிர்த்து நின்றவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவனாகும் என்பர். அவன் இப்போரிலே சிறைப்பட்டான். அவனை மீட்கவே பொய்கையார் களவழி நாற்பது பாடினார் என்பர். சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையிலேயே உயிர் துறந்ததாகவும், புலவர் அவனை மீட்டுச் சென்றதாகவும், அறிஞர் இருவேறான கருத்துக்கள் தருவர்.

பொருநன் (113)

இவனும், தலையாலங்கானப் போரிலே பாண்டியனை எதிர்த்து நின்று, அழிந்தவருள் ஒருவன். தேர்ப்படையிலே சிறப்புறப் பணியாற்றியவனானதால், இயல்தேர்ப் பொருநன் எனப் பெற்றவன். இவனும், சேரர் படை முதலியாக இருந்த கணையனின் ஆதரவிலே இருந்து, பின் பாணனால் மற்போரிலே வெல்லப்பெற்ற ஆரியப் பொருநனும் ஒருவனாக இருக்கலாம். இவன் வேறு கோடைப் பொருநன் வேறு. -

மலையமான் திருமுடிக்காரி (35)

இவனைப் பாடியோர் அம்மூவனார், கபிலர், கல்லாடனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், பரணர், மாறோக் கத்து நப்பசலையார் ஆகியோராவர். பெண்ணை யாற்றின் கரையிலேயுள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, மலையமாநாட்டை ஆண்டவன் இவன் ‘காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த மாரி ஈகை மறப்போர் மலையன் இவன்.கொல்லிமலைத் தலைவனான ஒரியைக் கொன்று, அந் நாட்டை சேரர்க்கு வழங்கியவன். தகடுர் மன்னனாகிய அதியமானுடன் பகை கொண்டு விளங்கியவன். இறுதியாகக் கிள்ளிவளவன் என்னும் சோழமன்னனால் போரிலே அழிக்கப் பெற்றவன்.வள்ளல்களுள் ஒருவன் என்ற வான்புகழ் பெற்றவன்.

பிற்சேர்க்கை - 3

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை
.