பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 15



7. வலை காண் பிணை!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.

(தலைவி ஒருத்தி, தன் தலைவனுடன் கூடியவளாக, உடன் போக்கிலே அவனுடன் சென்றுவிட்டனள். அவளைத் தேடிச் சுரத்தினிடையே பின்தொடர்ந்து சென்றனள் அவளுடைய செவிலித்தாய். இடைவழியிலே, பெண்மான் ஒன்றைக் கண்டதும், தன் ஆற்றாமையை அதனிடமுங்கூறி அவள் புலம்புகிறாள்.)

          முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
          தலைமுடி சான்ற; தண்தழை உடையை,
          அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
          மூப்புடை முதுபதி தாக்குஅணங்கு உடைய,
          காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5

          பேதை அல்லை - மேதையம் குறுமகள்!
          பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
          ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,
          தன்சிதைவு அறிதல் அஞ்சி - இன்சிலை
          ஏறுடை இனத்த, நாறுஉயிர் நவ்வி! - 10

          வலைகாண் பிணையின் போகி, ஈங்குஓர்
          தொலைவில் வெள்வேல் விடலையோடு, என்மகள்
          இச்சுரம் படர்தந் தோளே; ஆயிடை
          அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,
          பிற்படு பூசலின் வழிவழி ஓடி, 15

          மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,
          நின்னொடு வினவல் கேளாய்; - பொன்னொடு
          புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,
          ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,
          ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த 20

          துயத்தலை வெண்காழ் பெறுஉம்
          கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.

'நின் முலைகளும் முகம்கூட்டி நிரம்பியுள்ளன. கூர்மையான நின் பற்களும் ஒளிபெற்றன. நின் கூந்தலும், முடித்தலுக்கு ஏதுவாக நன்கு வளர்ந்துள்ளன. தண்மையான தழையாடையினையும் நீ உடுத்திருக்கின்றாய். நாற்புறமும் சுற்றிச் சுழன்று திரிகின்ற நின்னுடைய ஆயத்தாருடன் கூடி, இனிமேலும் எவ்விடத்தும் நீ செல்லாதிருப்பாயாக. பழைமை