பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 27


நினக்கு இன்பந்தரும் எமக்கும் பிரிவுத் துன்பமாகிய ஊறும் விளைவித்தனை என்பதாம்.

13. புலம்பொடு வந்த வாடை!

பாடியவர்: பெருந்தலைச்சாத்தனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டது.உம் ஆம். சிறப்புற்றோன்: தென்னவன் மறவனான கோடைப்பொருநன் பண்ணி.

(பொருள் தேடிவருவதற்காகத் தன் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு செல்ல விரும்புகின்றான் ஒரு தலைவன். அதனால், தலைவி தன் உயிரையே இழந்துவிடவும் கூடும்’ என்று கூறி, அவனைச் செல்லாது தடுக்கின்றாள் தோழி. அல்லது, ‘யாம் துன்புற்றாலும் சகித்திருப்போம்; நின் முயற்சி நன்கு நிறைவுறுக’ என, அவன் போதற்கு இசைகின்றாளும் ஆம்)

          தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
          முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
          தெறல்அரும் மரபின் கடவுட் பேணிக்,
          குறவர் தந்த சந்தின் ஆரமும்,
          இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் 5

          திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்-
          குழியில் கொண்ட மராஅ யானை
          மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
          வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
          வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் - 10

          பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
          விழுமிது நிகழ்விது ஆயினும் - தெற்குஏர்பு,
          கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
          சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
          நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15

          மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
          கவவுஇன் புறாமைக் கழிக - வள வயல்,
          அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
          கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
          நிரம்புஅகன் செறுவில் வரம்புஅணையாத் துயல்வரப், 20

          புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
          இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
          வெண்குருகு நரல, வீசும்
          நுண்பல் துவலைய தண்பனி நாளே!