பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அகநானூறு -களிற்றியானை நிரை


வேட்டுவனானவன் கவைக்கோலைச் சுமந்தாற்போலப் பெரிய முறுக்குண்ட கொம்பினை உடையவாகப், பெருமை தங்கிய ஆண்மான்கள் அங்கே விளங்கும். அவை, இலை செறிந்த அறுகின் சிவந்த தண்டோடும் கூடிய மெல்லிய கொத்துக்களைப், பக்கத்திலே மறிகள் விளையாடிக்கொண்டிருக்கும் தன் இளைய பெண்மான்களை அருந்தச் செய்யும். தெளிந்த அறல் நீரானது தழுவிச் செல்லும் நெடிய மணல் சார்ந்த அடைகரைகளிலே, அசையாடுகின்ற கவுளினை உடையனவாய் அவை துயில, அந்த இடத்தை ஆண்மான்கள் காவல் காத்தும் நிற்கும். ஆண் மான்களினுடைய அத்தகைய பெருந்தன்மையினைக் கண்டதும், அவைபோலத் தலையளி செய்திலமே என்று என் நெஞ்சமும் தளரும். அப்படித் தளர்ந்த நெஞ்சம், மீண்டும் இன்புற வேண்டும்.அதற்கு

ஆடையிலே தோய்ந்த கஞ்சிப் பசையினைத் துடைத்துவிடும் மெல்லிய விரல்களை உடையவள், பணைத்த தோள்களையும் உடையவள்; ஆடை ஒலிப்பவள். அவள் அந்தப் பசையினைத் துறையிலே அலசிவிட்டாற்போன்ற, தூய வெண்மையான மயிரினை உடையவை அன்னங்கள். அவை, தம் பெடைகளுடன் கூடியவாய் அங்கே திளைத்திருக்கும். காவல் பொருந்திய மனையினது எல்லைக்கு உள்ளாகச், சிவப்பு மாலை அணிந்ததுபோன்ற கழுத்தினையுடைய பச்சைக்கிளியினைத் தன் முன் கையிலே ஏந்தியவளாக, இல்லத்து உள்ளவர் பிறர் அறிந்து விடுவார்களோ எனப் பயந்தவளாக, மெல்லென, நம்மைப் பிரிந்து சென்ற தலைவரைப் பற்றியதாக இன்று ஒன்று உரைப்பாயாயின், அவர் இன்றே வருவார் என நீ உரைப்பாயாக' என்று, மழலையாகிய இனிய மொழியினைச் சொன்னவாறு இருக்கும், நாணத்தினை உடையவள் நம் தலைவி. அத்தகைய நம் தலைவியது, மாண்புற்ற நலத்தினைப் பெறவேண்டும். தேரைச் செலுத்தும் தொழிலிலே நல்ல ஆற்றல் பெற்றுள்ள பாகனே! நின் தேர் இனியும் விரைந்து செல்வதாக!

சொற்பொருள்: 2. கண்ணியின் - சூட்டும் கண்ணியைப்போல, 3. கவை - கவைக்கோல். பொறுத்தல் - சுமத்தல். 10. வலம் - கடுகச் செலுத்தவல்ல தொழில் வெற்றி.11. கொல்லுதல் - ஆடை ஒலித்தல் 12, எகினம் - அன்னம். 13. திளைத்தல் - விளையாடல். வரைப்பு - மாளிகை. 6. "மறியாடு மருங்கின் மடப்பிணை' -மறி வயிற்றிலே முழுகி விளையாடும் பக்கத்தினை உடைய பெண்மான்.

விளக்கம்: நம்மை இங்கே கலையும் பிணையும் வருத்து கின்றன; நம் ஊரிலுள்ள அவளை அன்னமும் அதன் துணையும் வருத்தும்; அதனால், தேரை விரையச் செலுத்துக என்றனன்.