பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அகநானூறு - களிற்றியானை நிரை



தாழைகள் தளருமாறு அசைந்து, பிரிந்திருப்பவர்கள் வருந்துமாறு வந்த கீழ்க்காற்றினால், மிகவும் துன்பங் கொண்ட அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த, நமக்குப் பிரிதலாகிய துன்பத்தினைச் செய்தனர். மீண்டும் வந்து அவர் நமக்கு அருளார் ஆயினும், அவருடைய நட்பானது நமக்கு என்றும் ஒழியாதிருப்பதாக!

வயல்களிலே வெண்நெல்லை அரிவோரது பின்பக்கமாக நின்று ஒலிக்கப்படும் பறை ஒலியினைக் கேட்டு, நீண்ட கால்களை உடைய நாரையானது அஞ்சும், செறிந்த மூட்டு வாயினையுடைய கொம்பினைப்போல ஒலித்தவாறே சென்று, பனைமரத்தின் அகமடலிலே சென்று தங்கும். அத்தகைய கடல்துறையினை உடையவன் நம் தலைவன். அவனது இனியதும், யாம் துயிலுதற்கு உரியதுமான மார்பின் பொருட்டாக, என் நெஞ்சமானது அவனிடத்தே சென்றது. அவன் அளிசெய்திலன் என்று, அங்கே தங்கியிருத்தலை விடுத்து, அது இவ்விடத்தே வாராதிருப்பதாக!

சொற்பொருள்: 2. பாடெழுந்து - ஒலிமிக்கு 3.தொழுதி தொகுதி.4.குவை-திரட்சி.5 அசைவண்டு-பூவுக்குப்பூ அசைந்து கொண்டிருக்கும் வண்டு. அல்குறுகாலை - எல்லாம் சென்று அடையும் அந்தி வேளை, 6 தளர ஒல்க, தூங்கி - அசைந்து. 13. ததும்பும் - ஒலிக்கும். 15. மடை - மூட்டுவாய்.

உள்ளுறை பொருள்கள்: நெல் அரிபவர் தம் காரியம் செய்யப் பறை கொட்டினர். அதற்கு அஞ்சிய நாரை வேற்று நிலத்ததாகிய பெண்ணையிலே சென்று தங்கிற்று. தான் வாழ்தற்கு உரிய இடமாகிய மருதநிலத்தையும் மறந்தது. அதுபோலத், தம் காரியஞ் செய்ய நம்மை அவர் பிரிந்தார். நம்முடையதாயிருந்த நம் நெஞ்சமும் நம்மை விட்டுப் பிரிந்து, நமக்கு அயலவராகிய அவர் மார்பிலே சென்றது.

மேற்கோள்: 'நெய்தலுக்கு முதலும் கருவும் வந்து, உரிப் பொருளால் சிறப்பெய்தி முடிந்தது இது' என்பர், நச்சினார்க் கினியர். -

41. காடணி கொண்ட பொழுது!

பாடியவர்: குன்றியனார். திணை: பாலை துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைந்து சொல்லியது.

(பொருளாசை மிகுதியாகத் தலைவியைப் பிரிந்து வேற்று நாடு சென்ற ஒரு தலைவன் அவளை நினைந்து சொல்லியது)