பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூல் வரலாறு பாயிரம்


நிலைபெற்ற அறநெறியினைப் பேணி வந்தவர்கள்; எப்புறத்தும் வெற்றியும் சிறப்புற்ற ஆட்சிச் சக்கரத்தினை நடத்தியவர்கள்; யாதும் பழுதுஅற்ற சீரிய கொள்கையினை உடையவர்கள் வழுதியராகிய பாண்டியர்கள். அவர்களுடைய அவைக்கண்ணே அறிவு குடிகொண்டிருக்கும் செறியுடைய மனத்தவரும், வானளாவிய நற்புகழ் உடையவருமாகிய சான்றோர்கள் குழுமியிந்து, அருமையுடைய முத்தமிழினையும் ஆய்ந்து வந்தனர். அந்தக் காலத்தே,

ஆராய்ந்து, சாலச் சிறந்தவையெனத் தெரிந்த சிறப்பினையுடைய இனிய தமிழ்ப் பாடல்களுள், நெடியவாகி அடிகள் அதிகமாக விளங்கிய இன்பப் பகுதியினைச் சார்ந்த இனிய பொருள் அமைந்த பாடல்கள் நானூற்றை எடுத்து, நூல்களை ஆராய்ந்து சொல்லும் புலவர் பெருமக்கள் தொகுத்தனர்.

மும்மதங்களால் களித்தலையுடைய களிற்றியானை நிரை, மணியோடும் சேர்த்துக் கோர்த்த அழகு ஒளிரும் மணிமிடை பவளம், சிறப்பான நித்திலக்கோவை என்றவிதமாக, அத்தகைய பண்பினோடு முத்திறம் உடையனவாகத் தொடுத்தற்கு நினைந்து தொகுத்தது நல்ல நெடுந்தொகையாகும்.

அந்த நெடுந்தொகைக்குக் கருத்து எனப் பண்பினையுடைய சான்றோர் முற்காலத்தே சொன்னவைகளை நாம் ஆராய்வோ மானால், அருமையுடையவாகிய பொருளுடைமையினைக் கருத்தாகக் கொண்டு, எவ்விதக் கோணுதலும் இல்லாமல், பாட்டமைதியோடு பொருந்துமாறு, செய்யுள் தகைமையிற் சிறந்த அகவல் நடையினால் கருத்து இனிதாக இயற்றியோன், பரிகள் பூட்டிய தேரினையுடைய வளவர்கள் காத்துப் பேணும் வளமையான சோழநாட்டினுள்ளேயும், நாடு எனச் சிறப்பித்துக் கூறப்படும் மிக்க பெருமையுடைய சிறப்பினையும், என்றும் வளங் கெடுதலில்லாத உயர்வினையும் உடைய இடையளநாட்டுத், தீதற்ற கொள்கையினர் வாழுகின்ற புகழுடன் விளங்கிய சீர்மை கெழுமிய மணக்குடி என்னும் ஊரினனான, செம்மை நிரம்பிய