பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அகநானூறு - மணிமிடை பவளம்



தெளிநத உப்பங்கழியினிடத்தே விளைந்த வெண்மையான கல்லுப்பின் கொள்ளும் விலையைச் சாற்றிய உமணர்கள், தமது வளைந்த நுகத்தினையுடைய உப்புவண்டியினின்றும் வலி பொருந்திய பிடரினையுடைய பகடுகள் பலவற்றையும், அவை எங்கும் பலவாகப் பரந்து மேயும்படியாக அவிழ்த்து விட்டு விட்டு, உப்புப் பாரத்தையும் சொரிந்து இறக்கி வைத்துவிட்டு, வழியிடையிலே சோறாக்கி உண்பார்கள். அப்படி அவர்கள் உண்டுவிட்டுக் கைவிட்டுப்போயிருந்த அடுப்புகள் கல்லிடிந்து போய்ப் பாழ்பட்டுக் கிடக்கும்.

வடித்தல் பொருந்திய முனையினையுடைய அம்பினையும், வளைந்த வில்லினையும் உடைய மறவர்கள், எதிர்த்தார்க்கு நோயினைச் செய்யும் தம்முடைய வலிய வில்லானது வணங்கு மாறு வளைத்து நாணேற்றியவராகச் சென்று, பலவான பசுக்களையுடைய நீண்ட ஆனிரையைக் கவர்ந்து வருவர். அப்படி அவர்கள் கவர்ந்து வருகின்ற முனையிடத்தைக் ‘கல்’ என்னும் ஒலி எழுமாறு தாக்கி, அவர்களிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக் கொண்ர்ந்தனர், பெரிதாகப் பேசக்கூடிய வல்லமை உடையவரான, கரந்தை வீரர்கள்.

அவர்கள், மிக்க குரலினையுடைய 'துடி’ என்னும் பறையின் தாளத்திற்கு ஏற்பத் தம் வெற்றிக் களிப்பினால் ஆடி மகிழ்ந்தவராகத் தழையாலாகிய கண்ணியைச் சூடியவராக, அந்தக் கல்லிடந்து கிடக்கும் அடுப்புகளிலே ஊன்புழுக்கினை அட்டு உண்பார்கள்.

அப்படிப்பட்ட கவர்த்த நெறிகளையுடைய சுரநெறியிலே நின் காதலரும் சென்றுள்ளனரே என்று நீ மிகவும் துயரங்கொள்ளாதே; என் அன்பிற்குரிய தோழியே (அவர் எவ்வகையான ஏதமும் இல்லாதே விரைந்து வந்து சேர்வர் என்பது கருத்து)

நல்ல இடியேறுகள் முழங்குகின்றதும், வானத்தினிடத்தே நெடுந்தொலைவுக்கு உயர்ந்துள்ளதுமான மலையுச்சிகளையும், நறியபூக்கள் மணக்கும்சோலைகளையுடைய மலைச்சாரலையும் உடையது குறும்பொறை என்பானுக்கு உரிய மலை. அந்த மலைக்குக் கீழ்ப்பால் உள்ளது ஆமூர். வில்லாற்றல் விளங்கும் பெரிய கையினனான போர்களை வெல்லும் ஆற்றலுடையவன் வானவனாகிய சேரன்; அவனுடைய வண்டு மொய்க்கும் கன்னங்களையும் சிறிய கண்களையுமுடைய யானைகளின் கிம்புரிகளையுடைய பெரிய கொம்புகள் பொடிபடுமாறு அழித்துக் கொடுமுடி என்பவன் காத்துவருகின்றதும், செறிந்த