பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 105




அவ்விடத்திலே, ஈன்ற அணிமையை உடைய தன் பிடியினைத் தழுவிக்கொண்டதாக, அதன் களிறானது, அசைந்தசைந்து நடக்கும்இயல்புடைய தன் கன்று உறங்குகின்ற இடத்தைக் காத்துக் கொண்டிருக்கும். கடுமையான கண்களையுடையதும், வாள்போன்ற கோடுகளை உடையதுமான வலியபுலியானது, பகல் எல்லாம் தான் ஒடுங்கிக் கிடந்த முழையானது தனித்துக் கிடக்க, அதனைவிட்டுப் புறத்தே சென்று, மலைக்குகையிடத்திலே எதிரொலி எழுமாறு முழங்கிக் கொண்டிருக்கும்.

வேட்டையாடுவோரான கானவர்களும் அயர்ந்து துயில்கின்ற அத்தகைய நள்ளிரவிலே, விலங்கினம் செல்லும் வழியாகிய சிறிய பாதைகளின் வழியாக, நீதான் தமியனாக வருகின்றனை. அதனை இனியேனும் விட்டுவிடுதல் வேண்டும்!

என்று, இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி வரைவுகடாயினாள் என்க.

விளக்கம்: களிறு பிடியினைத் தழுவி உறங்கும் கன்றினைப் பேணிக் காத்து நிற்பதுபோலத், தலைவியை மணந்து இல்லற வாழ்வு மேற்கொண்டு காத்துப் பேணுதல் வேண்டும் என்பது கருத்து. இதனைக் கூறுவாள் வழியினது கொடுமையினையும், இரவின் கடுமையையும், அவற்றால் தான் வருந்தும் வருத்தத்தையும் உரைத்தனள்.

சொற்பொருள்: 1. யாமம் - நள்ளிரவின் யாமம். கழிப்பி - கழித்து. 2. பணிவார் - நீர் ஒழுகும். 3. ஆன்றல் - கைவிடுதல் 4. பல்லான் குன்றம்-ஒரு மலையின் பெயர்; பலவான ஆநிரைகளை உடைய குன்றமும் ஆம். வல்லாண் குன்றம்’ என்பது பாடமாயின், வல்லாண்மை நிகழ்வதற்கு இடனாக அமைந்த குன்றம் என்க. கொடைக்கடன் - கொடையாகிய கடமை. ஏன்ற ஏற்றுக் கொண்ட 7. அட்டில் அடுதலைச் செய்கின்ற இடம் 9. இரும்பிடி - பெரிய விடியானை. 10. தூங்குநடை - அசைந்த தளர்நடை தூங்கல் நடை என்பார்கள் இந்நாளில் 11. அளை குகை. 12 புலிஉரற புலி முழங்க களிறு காக்கும்படியாகப் புலி முழங்க எனவும் கொள்க. 14. மான் - விலங்குகள், மானதர் - விலங்கினம் செல்லும் தடம்; மனிதர்கள் செல்ல ஆகாதது என்பது குறிப்பு.

பாடபேதம்: 4. வல்லாண் குன்றில் - வல்லாண்மை நிகழுதற்குக் களனாயமைந்த குன்றிடத்திலே,