பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அகநானூறு - மணிமிடை பவளம்



தோழி! தம்முடைய வலிமையான வில்லினைப் பூரித்த தம் தோளிலே உராய்ந்து கொண்டிருக்கும்படியாக வைத்துக் கொண்டு, அதன்கண், எய்த குறி பிழையாதலும், வேகமாகச் செல்லக்கூடியதுமான அம்பினை வைத்து எய்கின்ற, வன்கண்மையினை உடையவர் மறவர்கள், பாலைநிலத்து வழியூடே செல்லும் புதியவரது உயிர்கள் எல்லாம், அப்படி அவர்கள் எய்யும் அம்புகள் தைக்க உடலைவிட்டுப் போகும். ஒலியுடன் செல்லும் அந்த அம்புகள் அப்படி அவர்களது உயிரைப்போக்க வீழ்ந்த, மிக்க முடைநாற்றம் வீசுகின்ற பிணங்களைப் பருந்துகள் தம் கிளையினை அழைத்தனவாகக் கூடியிருந்து உண்டுகொண்டிருக்கும். அத்தகைய கொடிய காட்டுவழியினைப், பொருளார்வத்தினாலே, நம்மையும்பிரிந்து கடந்து சென்றவர் நம் காதலர்!

அன்று பிரிவினை நினைந்து என் நெஞ்சம் மயங்கியது. அது தெளிவடையுமாறு, கடுமையான சூளினை உரைத்தும், ஆராய்ந்துகொண்ட வளையல்களையுடைய என் முன்கையினைப் பன்முறைபற்றி என்னைத் தலையளிசெய்தும், தேற்றிச் சென்றவர் அவர்!

காற்றைப்போலக் கடுமையான வேகத்துடன் செல்லுகின்ற நெடிய தேரினையும், கைவண்மையினையும் உடையவன் பாண்டியன் நெடுஞ்செழியன். தலையாலங்கானத்துப் பெரும் போரினை வென்று, அவன் படைஞர் வெற்றிக்களிப்பினால் உயர்த்த வேற்படைகளின் தொகுதியைக் காட்டினும், தண்மையான பெயலையுடைய மேகங்கள் வானத்தே மின்னல் இடுகின்றன. அப்போது முழங்கிய வெற்றிமுரசின் ஒலியைப் போன்று வானத்திலே கடுமையான இடிமுழக்கத்தையும் அவை தோற்றுவிக்கின்றன.

செல்வியின் காதலனான திருமால், நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக்கொண்ட சக்கரப்படையினை உடையவன். பகைவர்களும் அச்சங்கொண்டு தம்போர்நினைவை ஒழித்தற்குக் காரணமாக விளங்குவது அவனுடைய பரந்த மார்பு; அதனிடத்தே பொருந்திய மாலையினைப் போலப், பலநிறம் வாய்ந்த அழகிய வில்லையும் அம்மேகங்கள் வானத்தே வளைவாக இட்டு இருக்கின்றன. நிலப்பகுதி எங்கணும் மலர்ச்சியடையவும், அவை பயன்தருமாறும், மேகங்கள் காலிட்டு மழைபெய்யும் கார்காலமும் வந்துவிட்டது.

அவர், தம்முடைய செயலினை முடித்துக்கொண்டு, இங்கு மீண்டும் வந்து நம்மைச் சேர்வோம் என்றது, இந்தக் கார் காலத்திற்றானே?