பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 121


அயலேயிருந்த சேற்றுப்பிழம்பிலே, தேமல்போல வரியுண்டாகுமாறு விரைவாக ஒடிச் சென்று, ஈரமிகுந்த தன்னுடைய அளையினுள் புகுந்து பதுங்கிக் கொள்ளும். இத்தகைய வளமுடைய ஊருக்கு உரியவனே!

விளங்கும் மலர்களையுடைய ஆம்பலுடன், வீட்டின் அயலேயுள்ள மரத்திலே படர்ந்திருக்கும் கொழுமையான வயலைக் கொடிகளைப் பிணைத்துக் கட்டிய, ஒலித்தலையுடைய தழையுடையினை உடுத்தி, விழாவின்கண் ஆடுகின்ற மகளிர்களோடு தழுவி ஆடும் அழகினால், பொலிவுற்று விளங்குபவள் நின் பரத்தை, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களையும், மாண்புடைய அணி வகைகளையும், முன் கையிலே குறுகிய வளையல்களையும் உடைய அவள், தன் முன்கையினால் பிணித்த நெடிய தொடர்பினை நீ கைவிட்டதற்காக, நின்பால் மிகவும் வெகுண்டிருக்கின்றனள்.

எழுதிக்காணும் சிறப்பினையுடைய தன்னுடைய முகத்தின் அழகெல்லாம் கெட்டுப்போகுமாறு ஏங்கி அழுதவளாயினள். பொன்னை உருக்கி வார்த்தது போன்றவாக உடலெங்கும் விளங்கும் தேமல்களையும், பன்முறை நொடித்துக் கொள்ளுதலால் சிவந்து போன மென்மையான விரல்களையும், திருகிக் கடித்ததால் கூர்மை மழுங்கிவிட்ட பற்களையும் உடையவளாயினள். ஊர்முழுவதும் சொல்லிக்கொண்டு, நின்னைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடிச் சென்று கொண்டிருப்பவளு மாயினள். அதனால், அவளிடத்திற்கே நீ செல்வாயாக.

அவளோ, நின்னுடைய காதற்பரத்தை புல்லிய குடு மியையுடைய புதல்வனைப் பெற்று, நெல்வளமுடைய நெடிதான மனையிலே, நீயில்லாமல் தங்கியிருப்பதற்கு, எம்மைப் போல, அவள் என்ன கடப்பாடு உடையவளோ?

என்று, தோழி தலைமகனை வாயின் மறுத்துக் கூறினாள் என்க.

சொற்பொருள்: 2. நிலம்பக - பூமி பிளவுபடுமாறு 3. கழை மூங்கில். 4. பாசடை - பசுமையான இலை. 5. நிவந்தன்ன - உயர்த்திருப்பதைப் போல, 6 முறுவல் முகம் முறுவலையுடைய மகளிரின் முகம். 8. வேப்பு - வேம்பு, நனை - அரும்பு.10. அள்ளல் - சேறு சற்று மேலாக உறைந்துள்ள இடம். 1. திதலை - தேமல், 15. விழவு - நீர் விழா. 17 துடக்கிய - பிணித்த 18. உடன்றனள் - வெகுண்டனள். 20. நகர் - மனை. 22 எழுது எழில் - புனையும் அழகு ஒப்பனைகளுமாம்.