பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அகநானூறு - மணிமிடை பவளம்


அழகுபெறத் தோன்றும் பின், கிளைத்தல் மிகுந்த சிறுதினையின் அத்தகைய இடமாகிய நல்ல மலைநாட்டினன் அவன்.

அவனோடு, நீயும் ஊடல் நீங்கிப் புணர்கின்றவளாக, என்றும் மூங்கில் போன்ற நின் தோளழகு அழியாதே, எந்நாளும் அவனுடன் ஒன்றாக வாழ்ந்திருப்பாயாக இருவீரும், என்றும் கெடுதல் இல்லாத மறுமையுலகத்து இன்பத்தினையும், இங்கேயே பெற்று நிலையாக வாழ்வீர்களாக

பகலும் இரவும் என்றில்லாமல், கல்லென்னும் ஒலியுடனே மேகங்கள் பெரிய மழையினைச் சொரிந்த விடியற் காலத்திலே, குளிர்ந்த பனியையுடைய பனிக்காலமானது, தனித்துப் பிரிந்திருப்பவர்க்குத் தாங்குதற்கரிய துன்பந்தருவதாகும் என உணர்ந்து, கனவினும் நின்னைப் பிரிதலை அறியாதவன் நின் தலைவன்.

அதன்மேலும், தன்னுடைய பண்பினால், முதன் முதலாகத் தான் நின்னைக் கண்டு காதலித்த நாளினும், பின்னர் பின்னர்ப் பெரிதாக அருள் செய்பவனும் அவனாவன்.

என்று, தோழி வரைவு மலிந்து கூறினாள் என்க.

சொற்பொருள்: 1. வயிரம் - ஒளியுடைய வயிரமணி. வை. - கூர்மையான ஏந்துதல் - மேனோக்கி இருத்தல். 2. வெதிர்மூங்கில். 3. பறைக்கண் பறையின் நடுவிடத்தாகிய கண். 4. நீலம்நீலநிறம். 5. பிண்டம்-உருண்டை மாந்தி-நிறையத்தின்று.6. ஊழ் இழிபு முறையாக அடிவைத்து இறங்கி வருதல். 7. படாஅர் - சிறு தூறு. 10. அலரி - அலர்ந்த மலர் 11. கட்டளை - உரைகல் 15. பணை - மூங்கில். தவல் - கெடுதல்; தவலில் உலகம் - இன்பக் கெடுதல் இல்லாத போக உலகம்; அந்த உலகத்து இன்பம் போன்று அயராது அநுபவித்து இன்புறுக எனவும் கொள்க. 17. எல் - பகல் 18. கொண்டல் - மேகம்.19. அற்சிரம் - காலைப்பணி.

உள்ளுறை: காட்டுப் பன்றியானது, சுனைநீர் பருகிக், கிழங்கினை மாந்திக், கூதளத்தின் பூந்தாது தன்மேல் விளங்கத், தினைப்புனத்துள் நுழைந்து, அதன் விளைகுரல் மேய்ந்து, இனிது கண்படுக்கும் நாடன் என்றனள். அது, தலைவனும் தான் கருதியனவெல்லாம் கைவரப்பெற்றவனாகத், தலைவியை மணந்து இனிது இல்லறம் பேணுபவன் என்பதனால்,

பாடபேதம்: 20. பிரிபறியலரே.