பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அகநானூறு - மணிமிடை பவளம்



195. சொல்லுக வேலனே!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய நற்றாய் சொல்லியது.

(தன் மனத்திற்கு இசைந்தான் ஒருவனைக் கண்டு காதலுற்றுக் களவிலே ஒழுகி வந்தனள் ஒர் இளம்பெண். ஊரலர் மிகுதியாக, தினைமுற்றலால் புனத்திடைப் பகற்கூட்டமும் இல்லாதுபோக, இற்செறித்தலால் இரவுக்குறியும் இடையீடு பட்டுப்போக, மிகவும் மனம்வருந்தி, ஆற்றாமை கொண்டவளுமாயினாள். ஒருநாள், தன் காதலனின்றித் தான் வாழ்தலும் முடியாதென உணர்ந்த அவள், அவனோடு உடன்போக்கிலும் துணிந்து சென்றுவிட்டாள், அதனால், வருந்திய நற்றாய், வேலனிடம் இப்படித் தன் மகள் பற்றிய குறியினைக் கேட்கின்றாள்.)

        ‘அருஞ்சுரம் இறந்தஎன் பெருந்தோட் குறுமகள்
        திருந்துவேல் விடலையொடு வரும் எனத் தாயே
        புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
        மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
        உவந்து, இனிது அயரும் என்ப; யானும், 5

        மான்பினை நோக்கின் மடநல் லாளை
        ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
        இன்னகை முறுவல் ஏழையைப் பல்நாள்,
        கூந்தல் வாரி, நுசுப்பு:இவர்ந்து, ஓம்பிய
        நலம்புனை உதவியோ உடையன் மன்னே: 1O

        அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல,
        அறுவை தோயும் ஒருபெருங் குடுமி,
        சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்,
        ஆகுவது அறியும் முதுவாய் வேல!
        கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்; 15

        மாறா வருபனி கலுழும் கங்குலில்,
        ஆனாது துயருமெம் கண்இனிது படீஇயர்,
        எம்மனை முந்தறத் தருமோ?
        தன்மனை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?

‘அரிதான சுரநெறியைக் கடந்து சென்றவள், என்னுடைய பெருத்த தோளினளான இளையமகள், அவள், திருந்திய வேலினை உடையவனான, விடலையான அவள் தலைவனுடனே, மீண்டும் வருவாள்’ என்று எண்ணினள் செவிலித்தாய். புனைவுகளால் மாண்புற்ற வீட்டின் வெளிச்சுவருக்குச் செம்மண் பூசியும்,மனையின் முற்றத்திலே மணலைப் பெய்து வைத்தும்,