பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 169


பின்பற்றிவர, தண் மலர் - தேன் நிரம்பிய புத்தம் புதுமலராதலினால் தண் மலர் ஆயிற்று. வேய்ந்து - மிகுதியாகச் சூடி 9. வகுப்பு - அமைப்பு. குடச்சூல் உள்ளே பரல்கள் இடப் பெற்ற சிலம்பிற்குப் பெயர். 10. சிலம்பு ஒடுக்கி - சிலம்பினை ஒலி எழாதவாறு அடக்கி, மெல்ல அடியிட்டு நடந்தனள் என்பது கருத்து. 1. துஞ்சூர் யாமம் - ஊர் துஞ்சும் யாமம்.17. சூரர மகளிர் என்போர் முருகனுக்கு ஆடிப் பாடித் தொண்டு செய்யும் தேவமகளிர் என்று திருமுருகாற்றுப் படை கூறும்; அவர் அழகியருள் அழகியர் என்னலாம்.

விளக்கம்: அவள், ஊர் துஞ்சும் வேளையில்,அத்துணைப் பலவான இடையூறுகளையும் பொருட்படுத்தாது, தன்னை வந்து இன்புறுத்திச் சென்றதன் செவ்வியை நினைப்பவன், அவளைத் தேவமகளாகவே கருதிப் போற்றுகின்றான்.

மேற்கோள்: இரவுக் குறிக்கண் அவட்பெற்று மலிந்து என, பண்பில் பெயர்ப்பினும் என்னுஞ் சூத்திர உரையினும்; ‘அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்’ என வருவது, “மனையோர் கிளவி கேட்கும் வழியது” என, இரவுக் குறியே இல்லகத்துள்ளும், மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே, என்னும் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 5. கார் மலர் கமழும். 7. இள மழை சூழ்ந்த, 12. கற்பில் சான்ற பெரியவள், அம்மா.

199. வாரலன் யானே!

பாடியவர்: கல்லாடனார். திணை: பாலை. துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. சிறப்பு: வாகைப் பெருந்துறை என்னுமிடத்தே நடந்த் போரில் நன்னனைக் கொன்று, தான் இழந்த தன் நாட்டுப்பகுதியை மீட்டும் பெற்று மகிழ்ந்த களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் வெற்றிப் பெருமிதம்.

(பொருள் தேடிவரவேண்டும் என்ற எண்ணம் ஒரு தலைவனின் உள்ளத்திலே மிகுதியாக எழுகின்றது. பிறர் செல்லும்போது. தான் வாளாவிருப்பதா என்னும் நாணமும் . வருத்துகின்றது. ஆனாலும், தன் காதலியைப் பிரிந்து போவதான ஒன்றைப்பற்றி அவனால் கருதவே முடியவில்லை. அதனால், தன் நெஞ்சிற்கு இப்படிக் கூறியவனாகத் தான் போவதையே நிறுத்தி விடுகின்றான்)