பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அகநானூறு - மணிமிடை பவளம்


        கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,
        நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
        வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயர் செத்து,
        உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,
        சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் 5
        
        அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்,
        திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
        அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
        திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்;
        வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய 10

        கெடுமான் இனநிரை தரீஇய கலையே
        கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
        கடல்போற் கானம் பிற்படப், “பிறர்போல்
        செல்வேம்ஆயின், எம் செலவு நன்று என்னும்
        ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, 15

        நீ செலற்கு உரியை-நெஞ்சே!-வேய்போல்
        தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
        பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது,
        இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
        பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய, 20

        வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
        களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
        இழந்த நாடு தந்தன்ன
        வளம்பெரிது பெறினும், வாரலென் யானே.

நெஞ்சமே!

மலையைச் சார்ந்திருக்கும் வெண்கடம்பினது முற்றிய மலர்களைக், கரையிலே வந்து. மோதுகின்ற வெண்மையான அலைகளைப்போல அலையலையாக வரும் காற்று மோதுதலால், அவை பலவும் உடன்சேர்ந்து பாறையின்மேலே உதிர்ந்து கிடக்கும். நீர் வேட்கையினாலே வருந்திய யானையானது அம் மலர்கள் வீழ்வதை மழை பெய்வதாகக் கருதி, அவ்விடத்தே நீர் விரும்பிச் சென்று காணாது வருந்தி வாடும். மரங்கள் வற்றி உலர்ந்தனவாக, அவற்றின் இலையற்று வறிதாயிருக்கும் கிளைகளிலே, சிலம்பி நூல் பின்னர் பட்டிருப்பதாக விளங்கும். அசைகின்ற அத்தகைய மரங்களின் அறல்பட்ட நிழலிலே தங்கித்தங்கிச் செல்ல வேண்டும்.